கடவுளுக்கே சான்றிதழா? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

"உலக வரலாற்றில் சொல்லப்பட்ட ஒரு அரிய சம்பவத்தை எங்கள் ஆசிரியர் எங்களுக்கு அடிக்கடி சொல்லுவார்.
கடவுளுக்கே சான்றிதழா? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! 35
"உலக வரலாற்றில் சொல்லப்பட்ட ஒரு அரிய சம்பவத்தை எங்கள் ஆசிரியர் எங்களுக்கு அடிக்கடி சொல்லுவார். கிரேக்க நாட்டில் பிலிஃப் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தானாம். அக்காலத்தில் ஒரு நாள் அவ்வரசன் சிம்மாசனத்தில் இருந்தபோது ஒரு சேவகன் ஓடிவந்து  "அரசே வணக்கம் தங்கள் புகழ் வாழ்க, உங்களின் குலம் தழைக்க உங்களுக்கு ஓர் ஆண்மகன் பிறந்திருக்கிறான். இந்நாட்டின் இளவரசன் பிறந்து விட்டான் என்று மகிழ்வோடு வணங்கிச் சொன்னானாம். 

இதனைக் கேட்ட அப்பேரரசன் தன் அருகில் இருந்த தங்கத்தட்டில் இருந்து எதை அள்ளிக் கொடுத்தான் தெரியுமா?'' என்று தமிழ்மணி கதையை நிறுத்திக் கேட்டார். 

"இதிலென்ன சந்தேகம், பேரரசர் அல்லவா தங்கக்காசுகளை அள்ளி வீசியிருப்பார்'' என்று ஒருவர் சொல்ல  "அதுதான் இல்லை'' என்று மென்மையாகச் சொன்ன தமிழ்மணி,  "நம் பாண்டிநாட்டு முத்துகளை ஒரு கைப்பிடி அள்ளிக்கொடுத்தாராம்.

"பாண்டிநாட்டு முத்துக்களா? என்று பலர் மகிழ்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் கேட்க, "முத்துக்கள் யூ மீன்ஸ் பேல்ஸ் (Pearls)'' என்று பேத்தியும் முத்துப்பல் சிரிப்போடு கேட்க, "யெஸ் யெஸ்'' என்று பேத்திக்கு பதில் சொன்ன தமிழ்மணி, "இதென்ன ஆச்சர்யம் உலகப் பேரழகி கிளியோபாட்ரா தன் மதுக்கோப்பையில் பாண்டிய நாட்டு முத்துக்களை போட்டு வைத்திருப்பாளாம் நம் பாண்டி நாட்டு முத்துக்களுக்கு அக்காலத்திலேயே அத்தனை வரவேற்பு என்று தமிழ்மணியும் மகிழ்ச்சியோடு சொன்னார். 

"நம்ம ஊருல அந்தக் காலத்துல நல்ல செய்திய சொல்லவர்றவங்களுக்கு இப்படி மரியாதை செய்வது பழக்கம்தான். நீங்க மேல சொல்லுங்க ஐயா'' என்று தமிழ்மணியைப் பார்த்து ஆர்வத்தோடுக் கேட்டார் ஒருவர். 

"ஒரு கைப்பிடி முத்துக்களை மகன் பிறந்ததாகச் சொன்ன சேவகனுக்கு அள்ளிக் கொடுத்த மன்னர் பிலிஃப் திடீரென்று யோசித்தவராக மீண்டும் அந்தச் சேவகனை அழைத்து மேலும் ஒரு கைப்பிடி முத்துக்களை அள்ளித் தந்தாராம்.

அந்தச் சேவகன் ஆச்சர்யப்பட்டு,  "மன்னா நீங்கள் கொடுத்த ஒரு கைப்பிடி முத்து என் பத்துத் தலைமுறையின் சொத்து - மீண்டும் தருகிறீர்களே?''  என்று சந்தேகத்தோடுக் கேட்க,  "மன்னர் சொன்ன பதில் என்ன தெரியுமா?'' எனக் கேட்டார் தமிழ்மணி.

"சிலப்பதிகாரத்தில் பாண்டியன் மனைவியினுடைய சிலம்பில் இருக்குமே அந்த முத்தா?'' என்று ஒருவர் தமிழ்மணியிடம் கேட்டார்.  "ஆமாம்,  ஆமாம் -  இந்தப் பாண்டிய நாட்டு முத்துக்களுக்காகத்தான் உலக நாடுகளெல்லாம் இந்தியாவை நோக்கி வாணிபம் செய்ய வந்தன'' என்று அவருக்கு பதில்  சொன்ன தமிழ்மணி  "இப்போது சொல்கிறேன் கேளுங்கள் பிலிஃப் மன்னர் மீண்டும் முத்துகளை அள்ளிக் கொடுத்தது எதற்காக என்றால் "என் ஆசிரியராகிய அரிஸ்டாட்டில் உயிரோடு இருக்கும் போதே  எனக்கு மகன் பிறந்து விட்டான். எனவே என் மகனும் என் ஆசிரியரிடத்திலே படிக்கப் போகிறான் எனும் மகிழ்ச்சியால் தான் மீண்டும் முத்துகளை பிலிஃப் மன்னர் சேவகனுக்கு அள்ளிக் கொடுத்தாராம்'' என்ற செய்தியை தமிழ்மணி சொல்ல அனைவரும் கைதட்டினார்கள். 

"உண்மைதான் ஐயா, அலெக்ஸôண்டரை உலகத்திற்கு கொண்டு வந்தது அவனுடைய தந்தை பிலிஃப்பாக இருக்கலாம்; ஆனால் உலகத்தையே அலெக்ஸாண்டர் ஆளுமாறு அவனுக்கு கொண்டு வந்து தந்தது அவனுடைய ஆசிரியர் அரிஸ்டாட்டில் அல்லவா?''  என்று தமிழையா நெகிழ்வோடு கூறினார். 

"வாத்தியார்கள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து வாத்தியார்கள புகழ்கிறீங்க எனக்குத்தான் எந்த வாத்தியர புகழ்றதுன்னு தெரியல?''  என மீசைக்காரர் ஆதங்கத்தோடு கூற,  "அனுபவம் என்ற பள்ளியில் வாழ்க்கை என்ற பாடத்தை நீங்களாகப் படித்து மற்றவருக்கும் சொல்லுகிறீர்களே நீங்களும் ஓர் ஆசிரியர் தானே''  என்று நான் அவரை உற்சாகப்படுத்தினேன். அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

"நாங்கள் எங்களைப் புகழ்ந்து கொள்ளவில்லை ஐயா, ஆசிரியர்கள் மட்டும் இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்கு அறிவு தீபத்தை யார் ஏற்றுவது? உங்களுக்குத் தெரிந்த கதையவே சொல்லுகிறேன். இராமாயணத்தில் சீதைக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?''  எனக் கேட்டார் தமிழையா. அப்போது பேத்தி எழுந்து தன் மழலையான தமிங்கலத்தில்  "சீதாவோட ஃபாதர் ஒரு பிக் போ ஒண்ண தன்னோட பேலஸ்ல (Palace) வச்சிருந்தாராம். அதை யார் பிரேக் (Break) பண்றாங்களோ அவங்களுக்கு தான் சீதையை மேரேஜ் பண்ணித் தர்றேன்னு சொன்னாராம்.  இந்தக் காம்படீசன்ல (Competition) இராமர் கன்டெஸ்டண்டா (Contestant) கலந்துக்கிட்டு வின் (Win) பண்ணி சீதையை மேரேஜ் பண்ணிட்டாராம்''  என்று இராமாயண கதாகாலட்சேபம் செய்கிற பெரியவர்கள் சமஸ்கிருதம் கலந்து கம்பன் கவிதையைச் சொல்லுவது போல அந்தக் குழந்தை சொல்லிமுடிக்க ஹெட்போன் பாட்டி எழுந்து தன் பேத்திக்கு பெருமையோடு திருஷ்டி கழித்து சொடக்கு போட்டார்.

அந்தக் குழந்தை பேசிய இராமாயணக் கதையைக் கேட்ட பெரியவர்கள் அயர்ந்து போய் அமர்ந்திருக்க, "வால்மீகி இராமயணத்த வடமொழியில எழுதினாரு, துளசிதாசர் ஹிந்தியில எழுதினாரு, நம்ம கம்பர் தமிழ்ல எழுதினாரு, இப்ப இந்தப் பொண்ணு என்ன மொழியில இராமாயணம் சொல்லுச்சுன்னு எனக்குப் புரியலையே'' என்று ஒரு பெரியவர் கவலையோடு என்னிடம் கேட்டார். 

நானும் அவருக்கு ஆறுதல் சொல்லி, "ஐயா கலங்க வேண்டாம் கொஞ்ச வருசத்துக்கு மொதல்ல நம்ம டி.வி.யில இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஹிந்தியிலதான் போட்டுக்கிட்டு இருந்தாங்க நம்ம உக்காந்து அத பார்த்து ரசிக்கலையா? இந்தக் குழந்தையாவது வெளிநாட்டுல பிறந்து வளர்ந்தது இப்படி கதையும் தெரிந்து தமிழும் கலந்து சொல்ல முயல்கிறதே என்று நாம் பாராட்ட வேண்டும்'' என்றேன். 

"ஐயா சொல்றது உண்மைதான் நம்முடைய தாய்மொழியில பாடங்களப் படிக்காத இங்க வளர்ற நம்ம குழந்தைகள் இதே மாதிரித்தான் பேசிப் பழகுறாங்க, சென்ற வாரத்தில் ஒரு நாள் என் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க இருந்த ஒரு குழந்தைகிட்ட "அந்தப் பச்சகலர் பென்சில எடும்மா''  என்று சொன்னேன்.  எட்டாவது படிக்கும் அந்தக் குழந்தை எட்டுத்திக்கும் பார்த்து அந்த வீட்டின் எண்திசையிலும் சுற்றிவந்து பிறகு என்னிடமே வந்து "பச்சைப் பென்சில் மீன்ஸ்? க்ரீன் பென்சில் தானே அங்கிள்'' என்று தயக்கத்தோடு கேட்டது. என்ன கொடுமை வண்ணங்களின் பெயர்களை நம் பிள்ளைகளுக்கு அறிவிக்காமல் விட்டது யார் தவறு?
"பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருலானே'
எனும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் (விப்ர நாராயணர்) பாடலை நாம் குழந்தைகளுக்கு சொல்லாமல் விட்டோமே'' எனக் கண்கலங்கிச் சொன்னார் தமிழையா. 

உடனே கூட்டத்தில் எங்களோடு உட்கார்ந்திருந்த கோமாளி அங்கிருந்த பச்சைச் சேலை கட்டியிருந்த பாட்டியம்மாளின் அருகிலே போய் உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் போல, பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ? 

பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ' எனப் பாட அவரோடு சேர்ந்து இன்னும் சிலபேர் எழுந்து ஆடினார்கள். பிறகு அந்தக் குழந்தை சொன்ன கதையை நான் மொழிபெயர்த்தேன். 

மிதிலையை ஆண்ட  ஜனகமன்னன் தன் மகளாகிய சீதாப்பிராட்டிக்கு திருமணம் செய்ய எண்ணியபோது தன்னிடத்திலிருந்த "சிவதனுசு' என்னும் மிகப்பெரிய வில்லை யார் வளைத்து முறிக்கிறார்களோ அவர்களுக்கே சீதையை மணம் செய்து தருவேன் எனும் போட்டியை அறிவிக்க,  பன்னாட்டு மன்னர்களும் முயற்சித்துத் தோல்வியுற முடிவில் தன் தம்பியாகிய இலக்குவனோடும், ஆசிரியராகிய விஸ்வாமித்திரரோடும் வந்த இராமன் அந்த வில்லை முறித்தாராம். இதைத்தான் இந்தக் குழந்தை நமக்குச் சொன்னது'' என்று நான் சொன்னேன்.

"உடனே சீதையோட அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாராக்கும்'' என்று ஒரு பெரியம்மா சீரியல் ; பார்க்கும் ஆர்வத்தோடு கேட்டது. 
"அதுதான் இல்லை'' என்றார் தமிழையா
"ஏன் சரியா முறிக்கலையா?''  என்று கேட்டார் மீசைக்காரர் 
"வில்ல முறிச்சா பொண்ண குடுக்கவேண்டியதுதான அந்த மனுஷன் எதுக்கு தயங்குனாரு, இதென்ன பெரிய வில்லங்கமா இருக்கு'' என்று இன்னொருவர் கேட்டார்.

இடையில் தமிழ்மணி புகுந்து "ஒருவேளை இத்தன செகண்ட்ல முறிக்கனும்னு போட்டியில் விதி இருந்ததோ என்னவோ?'' என்று சந்தேகமாய் கேட்டார். 

"இல்லையே நமக்கு ஏற்படும் இந்தச் சந்தேகத்த கம்பரே போக்குகிறாரே. இராமன் அந்தச் சபையில வில்ல எடுத்தததான் சிலபேர் பார்த்தார்களாம் அதற்குள் வில்லை ஒடித்த சத்தம்தான் அவர்கள் காதுகளில் கேட்டதாம். "எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்' என விரைவுப்பொருளில் அந்தக் காட்சியை நமக்குப் புலப்படுத்துவார் கம்பர். அதுனாலயும் பொண்ணக் குடுக்கத் தயங்கல''  என்றார் தமிழையா. இப்போது அங்கிருந்த எல்லோருக்கும் சீதா கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ என்ற கவலையே வந்து விட்டது. 

"ஐயா சீக்கிரம் கல்யாணத்த முடிச்சுச் சாப்பாட்ட போடுமய்யா பசிக்குது'' என்று பந்திக்கு முந்தும் ஒருவர் பாசமாய் கூறினார். பட்டிமன்ற நடுவர் தீர்ப்பு சொல்வது போல முடிவில் தமிழையாவே சொல்லத் தொடங்கினார்.
- தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com