கலைஞர்களை உருவாக்கும் கல்லூரி!

தமிழக கலை  மரபினை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல  ஓவியம், சிற்பக்கலை,  விளம்பரக்கலை ஆகிய படிப்புகள் தேவைப்படுகின்றன.
கலைஞர்களை உருவாக்கும் கல்லூரி!

தமிழக கலை  மரபினை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல  ஓவியம், சிற்பக்கலை,  விளம்பரக்கலை ஆகிய படிப்புகள் தேவைப்படுகின்றன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று வண்ணக்கலை, சிற்பக்கலை, விளம்பரக் கலை (காட்சிவழித் தகவல் தொடர்பு மற்றும் வடிவமைப்பு)  ஆகிய 4 ஆண்டு பட்டப் படிப்பினை வழங்கி வருகிறது கும்பகோணம் அரசு கவின் கலைகல்லூரி.  

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.தேவ்நாத் நம்மிடம் பகிந்து கொண்டவை:
"1887 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசாங்கத்தால் கைவினைத் தொழில் பள்ளியாக கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் நகராட்சியால்,  நகராட்சி கலைப்பள்ளியாக சுமார் 80 ஆண்டு காலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது.  வண்ணக்கலை, சிறப்பக்கலை, விளம்பரக்கலை ஆகிய துறைகள் உருவாக்கப்பட்டன. 1965 இல் தமிழக அரசின் தொழில் வர்த்தக இயக்கத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 

1973 முதல் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின்கீழ் பாடத்திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன.1979 இல் 14 ஏக்கர் நிலப்பரப்பில் போதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு அரசு கவின் கலைகல்லூரியாக இயங்கி வருகிறது.1982ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு   மாணவர்கள் சேர்க்கை முப்பதாக உயர்த்தப்பட்டது. இக்கல்லூரி கல்வித் தரத்தில் அகில இந்திய அளவில் அங்கீகாரம் பெற வேண்டும் என 1991 முதல்  நான்கு ஆண்டு பட்டப்படிப்பு  நடைபெற்று வருகிறது.

இப்போது பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றவர்கள் இக்கல்லூரியில் சேரலாம். முதலாம் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படைக் கல்வியாக ஓவியம், சிற்பம், காட்சிவழித்தகவல் தொடர்பு வடிவமைப்பு ஆகியவை குறித்து பாடங்கள்  நடத்தப்படுகின்றன. பின்னர் மாணவர்கள் எந்தப் பாடத்தினை விரும்புகிறார்களோ, அந்த பாடம் குறித்து கற்பிக்கப்படும்.  அதாவது ஒரு மாணவர் ஓவியக்கலை படிக்க விருப்பம் என்றால் அதனைப் படிக்கலாம். ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புக்கு மாடல் நபர்களை மாணவர்கள் மத்தியில் அமர வைத்து,  அவரது உருவம் போல ஓவியம் வரைய வேண்டும். அல்லது களிமண்ணால் அவரது உருவம் போல சிலை செய்ய வேண்டும்.

காட்சிவழித் தகவல் தொடர்பு மற்றும் வடிவமைப்பியல் படிப்பில் ஒரு விளம்பரத்தை எப்படித் தயாரிக்க வேண்டும்? அதனை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அது மக்களிடம் போய் சேரும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் வீடியோ கேமிராவை இயக்க, பயிற்சி அளிக்கப்படும். இதில் விருப்பப் பாடமாக வரைகலை, அரங்க நிர்மாணம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். 

பாடத்திட்டத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் செயல்முறை வகுப்புக்களும், அது சார்ந்த கலை, வரலாறு, அழகியல் வகுப்புகளும் நடத்தப்படும்.  சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலை பிரிவில் இந்திய மேற்கத்திய அழகியல் பாடம் கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் உலகளாவிய அழகியல் கோட்பாடுகளை அறிந்து கொள்ள இயலும். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, ஓவியம் வரைவதற்கு உபகரணங்கள் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.

மேலும் இரண்டாம் ஆண்டு முதல் வெளிமாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது அனுபவங்களை வளர்த்துக் கொள்ள இயலும். ஓவியர் கோபுலு, சில்பி போன்றவர்கள் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இக்கல்லூரியில் படித்தவர்கள் ஓவிய ஆசிரியர்கள், பத்திரிகை துறை, விளம்பரத்துறை,திரைப்படத்துறை, அனிமேஷன், ஜவுளித்துறை, ஒளிப்படத்துறை, மல்டிமீடியா, தனியார் கலைக்காட்சி அரங்க அமைப்பு உள்ளிட்ட ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன'' என்றார். 
- எஸ்.பாலசுந்தரராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com