வேலை பாதுகாப்பின்மை...பயப்படத் தேவையில்லை!

ஒரு வேலையில் சேர்ந்தால், பணி மூப்பு அடையும் வரை அங்கேயே வேலை செய்து, ஓய்வு பெறுவது அந்தக் காலம்.
வேலை பாதுகாப்பின்மை...பயப்படத் தேவையில்லை!

ஒரு வேலையில் சேர்ந்தால், பணி மூப்பு அடையும் வரை அங்கேயே வேலை செய்து, ஓய்வு பெறுவது அந்தக் காலம்.  எங்கும் நிலையாக இல்லாமல் பல நிறுவனங்களில் மாறி மாறி வேலை செய்வது இந்தக் காலம்.  உலக அளவில் மாறிக் கொண்டிருக்கிற பொருளாதாரச் சூழ்நிலைகளில் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்ற நிலை உள்ளது.  வேலைப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது என்பதற்காக ஒருவர் பயந்து கொண்டே இருந்தால், நிலைமையை  அவரால் எப்படி சமாளிக்க முடியும்? அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒத்துக் கொள்ளுங்கள்
வேலைப் பாதுகாப்பின்மை உள்ளதே என்று வருந்துவதை விட, அதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கான வழிகளைக் காண முடியும். தனிப்பட்ட  வாழ்க்கையில் மிகவும் பாதுகாப்பில்லாத நிலையில் இருந்தவர்களே, அதிலிருந்து மீண்டு மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் நாம் தெரிந்து கொள்ள முடியும்.  இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். எல்லாரும் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாகவா இருக்கிறார்கள்?  வேலை பாதுகாப்பின்மை என்பது ஒரு யதார்த்தம். அதிலிருந்து அதிக சேதம் இல்லாமல் தப்பிப்பதற்குத்தான் நீங்கள் யோசிக்க வேண்டும். 

எதைப் பயன்படுத்த முடியும் என கண்டறியுங்கள்
வேலை பாதுகாப்பின்மை பற்றிய உங்களுடைய பயம் சற்று அதிகமாகக் கூட இருக்கலாம். நீங்கள் உண்மையாகவே  இருக்கும் வேலை  பாதுகாப்பின்மையை  விட சற்று அதிகமாகவே  வேலை பாதுகாப்பில்லாததாக உணரலாம்.  முதலில் உங்கள் மன உணர்வுகளை  விலக்கி வைத்துவிட்டு வேலை பாதுகாப்பின்மை பிரச்னையை அணுகுங்கள். உங்கள் கல்வித்  தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு வேறிடத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கவே கிடைக்காதா? இப்போது  நீங்கள்  செய்யும் வேலைதான் உங்களுக்கு இறுதியான ஒன்றா? எனவே அடுத்த வேலைக்குப் போவதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

கவனத்தைத் திசை திருப்புங்கள்
பந்து விளையாடுபவரின் கவனம் முழுக்க முழுக்க பந்தின் மீதே இருக்கும். அவர் ஒருநாளும் பந்து விளையாடும் போது தன்னுடைய உடல் அசைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்க மாட்டார். இப்போது நீங்கள் செய்யும் வேலையில் மட்டுமே கவனமாக இருங்கள். வேலை பாதுகாப்பின்மை பற்றிய உங்கள் உணர்வுகளை தற்போது வேலை செய்யும்  இடத்தில் நீங்கள் வெளிக்காட்டக் கூடாது.  அது மட்டுமல்ல, நீங்கள் செய்யும் வேலைகளில் முழுகவனம் செலுத்தாமல், அச்ச உணர்வுகளில் மூழ்கிவிடக் கூடாது.  அதுவே புதிய பிரச்னைகளை உங்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடும். 

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
பாதுகாப்பில்லாத வேலையை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். வேறு வேலைக்குப் போக வேண்டும். அதற்குத் தேவையான திறமைகள் உங்களிடம் இல்லையென்றால், இப்போது வேலையில் இருக்கும்போதே அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அதற்காக  நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.  ஒருவேளை  இப்போது செய்யும் வேலை உங்களுக்கு  இல்லாமல் போனால், அடுத்த வேலைக்குத் தகுதியானவராக நீங்கள் ஆகியிருப்பீர்கள்.

திடீரென நிலைமை மாறலாம்
நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலை, திடீரென மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் மிகவும் திறமையானவராக, நன்றாக வேலை செய்பவராக இருந்தீர்கள் என்றால், உங்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படலாம். அப்போது உங்களுக்கு வேலை இழப்பு ஏற்படாதல்லவா? எனவே அதிகமாக வேலை பாதுகாப்பின்மை குறித்துப் பயப்படத் தேவையில்லை. 
- ந.ஜீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com