ஹைபர்லூப் போக்குவரத்து...உலகப் போட்டியில் இந்திய இளைஞர்கள்!

போக்குவரத்தின் எதிர்கால பரிணாம வளர்ச்சியாக விளங்கப் போவது முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஹைபர்லூப் (Hyperloop)போக்குவரத்தாக இருக்கும்.
ஹைபர்லூப் போக்குவரத்து...உலகப் போட்டியில் இந்திய இளைஞர்கள்!

போக்குவரத்தின் எதிர்கால பரிணாம வளர்ச்சியாக விளங்கப் போவது முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஹைபர்லூப் (Hyperloop)
போக்குவரத்தாக இருக்கும்.  உறை (pod) போன்று வடிவமைக்கப்படும் ஒரு பெட்டியில் பயணிகள் மற்றும் பொருள்களை வைத்து மின் மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வெற்றிடக் குழாய்களில் உந்தித் தள்ளும் முறையில் இந்த புதிய போக்குவரத்துக்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

தற்போதுள்ள வழக்கமான பயணத்தின்போது உராய்வு மற்றும் காற்றுத் தடையால் வேகம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற பிரச்னைகள் ஹைபர்லூப்
போக்குவரத்தில் இருக்காது. இதற்கென தரைக்குமேல் காலிக்குழாய்களைக் கொண்டு தொடர்ச்சியாக அமைக்கப்படும் பாதையில் எந்தத் தடையுமின்றி மணிக்கு 450-1000 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும். குறிப்பாக சொல்லப் போனால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் சென்றுவிட முடியும். 

இந்த தொழில்நுட்பம் இப்போதுள்ள எந்த போக்குவரத்து முறையிலும் இல்லை. குறிப்பாக, ஹைபர்லூப் என்பது ரயில், விமானம், தரைவழிப் போக்குவரத்தின்
சிறு பகுதிகளைக் கொண்டிருக்கும். என்றாலும், இவற்றில் எதையும் ஒத்திருக்காது. இந்தப் போக்குவரத்துக்கான உத்தி 19-ம் நூற்றாண்டில் தோன்றியது என்றாலும், பிறகு அது  கிடப்பில் போடப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான Tesla and Spacex-இன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்க் (Elon Musk) என்பவரால் கடந்த 2013-இல் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் பல விமர்சனங்களாலும், நம்பிக்கையின்மையாலும் ஹைபர்லூப் திட்டம் கைவிடப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் திட்டமே வருங்காலப் போக்குவரத்தில் சாதிக்கும் என்பதில் திடமாக உள்ளனர். அவ்வாறான ஒருவர்தான் எலன் மஸ்க். இவர் இந்தத் திட்டத்தை எப்படியேனும் செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் கடந்த 2015-இல் சர்வதேச அளவில் ஹைபர்லூப் போக்குவரத்தில் சிறந்த உறையை (Hyperloop pod) தயாரிப்பதற்கான திட்டத்தை அளிப்பதற்கான ஒரு போட்டியை அறிவித்தார். இதில், உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான குழுவினர் பங்கேற்றதில், முதல் 24 குழுவினர் மட்டும் 2017-இல் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் ஆசிய கண்டத்தில் இருந்து 2 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒன்றாக இந்தியாவின் பிலானி பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS Pilani) கல்வி நிறுவனத்தின் 5 மாணவர்கள் அடங்கிய குழு தேர்வானது. போட்டியின் கடினம் அறிந்த இந்தக் குழுவினர் பிறகு திறமை மிக்க
பல்துறை இந்திய மாணவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். பிட்ஸ் வளாகங்கள், ஆமதாபாத் ஐஐஎம், தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம்,
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், ஆர்.வி. பொறியியல் கல்லூரி, சிம்பயாசிஸ் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கியத்துவம் மிக்க இந்தத் திட்டத்தில்
ஒருங்கிணைந்துள்ளனர்.

இவர்கள் இந்தப் போட்டிக்காக ஆர்காபாட் (Orcapod)  என்ற முன்மாதிரியான உறையை வடிவமைத்துள்ளனர். இது பிறகு ஆர்கா வேல் (Orca Whale) என பெயர்
மாற்றப்பட்டுள்ளது. இந்த உறையைத் தயாரிப்பதற்காக பெங்களூரைச் சேர்ந்த பலர் அவர்களுக்கு உதவியதால், அவர்கள் ஹைபர்லூப் உறையைத் தயாரிப்பதற்காக பெங்களூருவில் முகாமிட்டனர்.

தி ஒர்க் பெஞ்ச் புராஜெக்ட் நிறுவனம், ரிப்பில் டெக்னாலஜி நிறுவனம்,பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவை ஹைபர்லூப் உறையை வடிவமைத்து சோதனை செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளன. அதோடு, நிதி ஆயோக், பீன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் அசோசியேசன், மேப் மை இந்தியா, எஸ்.கே.எப்., ஸ்டார்ட் அப் இந்தியா, இன்வெஸ்ட் இந்தியா, RITES, ஜிந்தால் அலுமினியம்,  D.P. வேர்ல்ட் இந்தியா போன்ற அமைப்புகளும் ஹைபர்லூப் இந்தியா குழுவுக்கு உதவி வருகின்றன. 

இந்த குழு தன்னுடைய முன்மாதிரி உறையை இந்த மாதம் (ஆகஸ்ட் 2017) முதல் வாரத்தில் பெங்களூருவில் தயாரித்து முடித்துள்ளது. இந்த உறை கலிபோர்னியாவில் ஆகஸ்ட் 25 மற்றும் 27 தேதிகளில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும் பொருட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மூக்குப் பகுதி திறப்பு, ராக்கெட் தொழில்நுட்ப அலுமினியம், குறைந்த அழுத்த வெற்றிடத்தில் உந்தித்தள்ளும் தொழில்நுட்பம், மிகக்குறைந்த செலவில் அதிகபட்ச பலன் என்பவை இந்திய குழு தயாரித்துள்ள ஹைபர்லூப் உறையின் சிறப்புகள். இந்தியாவில் 2025-இல் இந்த போக்குவரத்து சாத்தியம் என்பது ஹைபர்லூப் இந்தியா குழுவின் நம்பிக்கை. அவ்வாறு சாத்தியமானால், அதிவேக புல்லட் ரயில்திட்ட செலவில் 40 சதவீதம் குறையும் எனவும் இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காற்றாலை மின்சக்தி, சூரிய மின்சக்தி மூலம் இயக்க முடியும் என்பதால் எரிபொருள் தேவையோ, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடோ இல்லை.

சர்வதேசப் போட்டியில் இந்திய குழுவுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் வரவேற்பைப் பொருத்து, இந்திய போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற பெருத்த நம்பிக்கையில் ஹைபர்லூப் இந்தியா குழு உள்ளது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச அளவில் 25 இந்திய பொறியாளர்கள் உள்ளிட்ட 800 பொறியாளர்கள் உழைத்து வருகின்றனர். 

இந்தப் போட்டியில், இந்திய தொழில்நுட்பம் வெற்றிபெறும் பட்சத்தில், உலகமே இந்தியாவைக் கொண்டாடும் என்பதோடு, இந்திய மாணவர்களின் திறனை உலகம் அறியும் வாய்ப்பும் ஏற்படும். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com