சர்வதேச அளவில் வேலைவாய்ப்பளிக்கும் ஊதிய மேலாண்மைக் கல்வி!

இளைநிலை பட்டம் முடித்துவிட்டு தொடர்ந்து படிக்க முடியாதவர்கள், சில மாதப் பயிற்சிக்குப் பிறகு நல்ல வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வழிவகுக்கிறது
சர்வதேச அளவில் வேலைவாய்ப்பளிக்கும் ஊதிய மேலாண்மைக் கல்வி!

இளைநிலை பட்டம் முடித்துவிட்டு தொடர்ந்து படிக்க முடியாதவர்கள், சில மாதப் பயிற்சிக்குப் பிறகு நல்ல வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வழிவகுக்கிறது ஊதிய மேலாண்மைக் கல்வி (Payroll Management Courses).
ஊதிய கணக்கு, வருங்கால வைப்புநிதி, ஊழியர் காப்பீட்டுத் திட்டங்கள், ஊதியத் தணிக்கை, வருமான வரிப் பிடித்தம், முதலீடுகளில் வரி சேமிப்பு போன்றவற்றிலும் - வரிப் பிடித்தம் தொடர்பாகவும், நிதி மேலாண்மை, பெரு நிறுவன மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்தும் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகள் பற்றியும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான துறைகள் குறித்தும் ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு புரிந்துகொள்ளுமாறு விளக்குவதிலும் ஒருவரை மிகுந்த திறன் பெற வைப்பதே ஊதிய மேலாண்மைக் கல்வியின் நோக்கம்.
ஊதிய மேலாண்மை பயிற்சியில் சேருவோருக்கு இணைய மற்றும் வகுப்பறை கல்வி, செயல்முறை பயிற்சி, கணினி பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. இந்தத் துறையில் தொடக்கநிலை ஊழியர்களாக சேரும் இளைஞர்கள் இயல்பூக்கம் பெற ஊதிய மேலாண்மை கல்வி வழிவகை செய்கிறது. மேலும், ஊதியம் மற்றும் மனிதவளத் துறையில் இந்தப் பயிற்சி மிக அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. ஆர்வமுள்ள இளைஞர்கள் ஊதிய தொழில்முறையாளராகப் பணியாற்ற Payroll Courses வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
மேலும், இளைநிலை, முதுநிலை பட்டம் பெறுவோர் மட்டுமின்றி, ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் தங்களைப் பணியில் நிலைநிறுத்திக் கொள்ளவும், பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறவும் ஊதிய மேலாண்மை கல்வி கூடுதல் திறன்களை வழங்குகிறது.
ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம், ஊக்கத்தொகை, பிடித்தம் போன்றவற்றின் நிதி ஆவணங்களின் தொகுப்பே பே ரோல் (Payroll) எனக் கூறப்படுகிறது. 
சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு மொத்த ஊதியம், மொத்த பிடித்தம் மற்றும் சரியான நிகர ஊதியம் வழங்குவது நிறுவனத்துக்கு நிறுவனம், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இதுகுறித்த முழுமையான அறிவைப் பெறுவது நிறுவன அலுவலர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது.
ஊதிய வரிகள் என்பவை பெரும்பாலான நிறுவனங்களின் நிகர வருவாயை பாதிக்கக்கூடியவை என்பதால், திறன்வாய்ந்த ஊதிய மேலாண்மை அலுவலர்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவைப்படுகின்றனர். அரசுகளின் எண்ணற்ற சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு நிறுவனங்கள் ஒத்துழைத்து இணக்கமாக செல்ல Payroll அவசியமாக உள்ளது. 
ஊதிய மேலாண்மையில் ஏற்படும் பிழைகள் மற்றும் முறைகேடுகள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனதில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதால், ஒரு நிறுவனம் பொருத்தமான மற்றும் துல்லியமான முறையில் ஊதிய மேலாண்மையைக் கையாள வேண்டியது அவசியமாக உள்ளது.
Payroll வகுப்புகள் தேவைக்கேற்ப நுழைவுநிலை பணி, அனுபவமிக்க தொழில்முறையாளர்கள், தனிப்பட்ட மாற்றுத் தகுதிக்கான சான்றிதழ் என்ற பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. Payroll குறித்த பாடத்திட்டங்கள் மனிதவள மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் சார்ந்த இளநிலை, முதுநிலை வகுப்புகளில் இருந்தாலும், ஒருவர் அதில் முழுமையான புரிதலைப் பெறவும், போட்டி நிறைந்த உயர் பதவிகளைப் பெறவும் Payroll கோர்ஸ் உதவும்.
The National Academy of Indian Payroll (NAIP) என்ற அமைப்பு ost Graduate Diploma in Payroll & Payroll Compliance Management என்ற கோர்ஸை 3 நிலைகளில் வழங்கி வருகிறது. இதில் Part - A: The Foundation Certificate in Payroll and Compliance (13 வாரங்கள்) எனவும், Part - B: The Advanced Certificate in Payroll and Compliance (24 வாரங்கள்) எனவும், Part - c: The Certificate in Payroll and Compliance Management (15 வாரங்கள்) என மூன்றுவித பாடத்திட்டங்கள் உள்ளன.
இந்த டிப்ளமா கோர்ஸை இணையம் வழியாகவும், வகுப்பறை கல்வியாகவும் பெறலாம். இணைய வழியில் பயில ஏ- பிரிவுக்கு ரூ. 12 ஆயிரம், பி-பிரிவுக்கு ரூ. 24 ஆயிரம், சி-பிரிவுக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 40 ஆயிரமும், 12.36 சதவீதம் வரியும் செலுத்த வேண்டும். அதேபோல, வகுப்பறை கல்வியாகப் பெற ஏ-ரூ. 18 ஆயிரம், பி-24 ஆயிரம், சி-ரூ. 18 ஆயிரம் என ரூ. 60 ஆயிரம் மற்றும் வரிகள் செலுத்த வேண்டும். 3 நிலைகளுக்கும் சேர்த்து பணம் செலுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது.
இந்தத் துறையில் 10 ஆண்டுகள் அனுபவமிக்க, அனைத்து வகையில் தகுதிவாய்ந்தவர்களுக்கு NAIP பகுதிநேர வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. அதேபோல, Compliance Executives (Rs. 15k to 20k), Sr. Compliance Executives (Rs. 18k to 25k), Payroll Executives (Rs. 15k to 20k), Sr.Payroll Executives (Rs. 18k to 25k), Payroll Team Leaders/
Managers (Rs. 35k to Rs. 1.25 Lakhs) ஆகிய பதவிகளில் முழுநேர பணிக்கும் அழைப்புவிடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் nfo@naip.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள The Institute of Payroll Training 
Management என்ற நிறுவனம் Payroll Training Programs-ஐ வழங்குகிறது. 28-30 நாட்கள் கொண்ட பயிற்சிக்கு ரூ. 5,800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை www.iptm.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சென்னையில் Spark Training Academy உள்ளிட்ட நிறுவனங்கள் Payroll Training course-ஐ வழங்குகின்றன.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 
- இரா.மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com