பயிற்சி அவசியம்... மேடைப் பேச்சுக்கும்!

ஒருவரது வாழ்க்கைத் தரம் என்பது, அவருடைய தகவல் தொடர்புத்திறன் எப்படி உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே உள்ளது.
பயிற்சி அவசியம்... மேடைப் பேச்சுக்கும்!

ஒருவரது வாழ்க்கைத் தரம் என்பது, அவருடைய தகவல் தொடர்புத்திறன் எப்படி உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே உள்ளது. பொது இடத்தில், அதாவது மேடைகளில் சிறப்பாகப் பேசும் திறமை இன்று அனைவருக்குமே தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. 

அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் கூட அங்கு நடைபெறும் கூட்டங்களில் பேச வேண்டியிருக்கிறது. எனவே பலர் உள்ள பொது இடங்களில், மேடைகளில் சிறப்பாகப் பேச விரும்புபவர்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

அறிவுத்திறன்: எதைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றி எதுவும் தெரியாமல் பேச முடியாது. எனவே எதுகுறித்து பேச விரும்புகிறீர்களோ, அதுகுறித்து தெரிந்து கொள்வதற்கு அதிகம் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்காக அந்த விஷயம் குறித்து அறிந்து கொள்ள அதிகம் படிக்க வேண்டும். இப்படிப் படிப்பது உங்களது அறிவுத்திறனையும், புத்திக்கூர்மையையும் மேம்படுத்த உதவும்.

யாரிடம் பேசுகிறோம் என்பதில் தெளிவு: மேடைப் பேச்சாளர் என்ற முறையில், உங்களுடைய பேச்சைக் கேட்க வருபவர்களின் பின்னணி, பணி, அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களுக்குத் தேவைப்படும் விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் அவர்கள் விரும்புவது போல, அவர்களுக்குப் புரியும்விதமாக, உங்களது பேச்சை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

உணர்ச்சி: உங்களது பேச்சைக் கேட்க வருபவர்கள், நீங்கள் பேசியதைக் கூட மறந்து விடுவார்கள். ஆனால் மேடை பேச்சின்போது நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை மறக்க மாட்டார்கள். எனவே, எந்த தலைப்பு குறித்து நீங்கள் பேசினாலும், அதற்கேற்றாற் போல உணர்ச்சிகரமாகப் பேசும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எளிமையான பேச்சு: நாம் பேசும் பேச்சுகளில் 60 சதவீதம், இலக்கணமில்லா எளிமையான பேச்சுதான். சிறந்த பேச்சாளர் ஒருவர், இலக்கணமில்லா எளிய நடையில் பேசுவதற்கே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். மக்களைக் கவரும்விதமாக எளிமையாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 

நகைச்சுவை: உங்களது மேடை பேச்சானது நகைச்சுவையும், உணர்ச்சிகரமும் நிறைந்ததாக இருந்தால் அதைக் கேட்போர் நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்பது உறுதி. குறிப்பாக, சிறந்த பேச்சில், மேற்கண்ட 2 அம்சங்களுமே இடம் பெற்றிருக்கும். 

பயிற்சி: பயிற்சிதான் அனைத்து திறமைகளுக்கும் தாய் போன்றது. உங்களது செயல்களில் நீங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு திறமை கொண்டவர்களாக திகழ்வீர்கள். மேடையில் பேச வேண்டும் என்பதால், கண்ணாடி முன்நின்று, தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பேசிப் பழக வேண்டும். இதை உங்களது செல்லிடப் பேசியில் உள்ள கேமரா முன்பு இருந்து கூட செய்யலாம். மேடைப் பேச்சு கலை என்பது கற்றுக் கொள்ளக்கூடிய திறமைதான்.
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com