வேலை வாய்ப்பும் உண்டு...தொழில்முனைவோராகவும் ஆகலாம்!

இந்தியாவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது ஜவுளித்துறை. ஆயத்த ஆடை ஏற்றுமதி, கைத்தறி துணிகள் தயாரிப்பு என
வேலை வாய்ப்பும் உண்டு...தொழில்முனைவோராகவும் ஆகலாம்!

இந்தியாவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது ஜவுளித்துறை. ஆயத்த ஆடை ஏற்றுமதி, கைத்தறி துணிகள் தயாரிப்பு என தமிழகத்தில் ஜவுளித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. எனவே இந்தத் துறை வேலைவாய்ப்பு மிகுந்த துறையாக உள்ளது.

ஜவுளித்துறையில் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி ஆகியவற்றைக் கற்பதற்கு கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மையியல் கல்லூரி உள்ளது. ஜவுளித்துறை படிப்புகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் கல்லூரி இயக்குநர் சி.ரமேஷ்குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"2004 இல் இந்திய ஜவுளித்துறையால் மேலாண்மைக் கல்லூரியாக எங்கள் கல்லூரி மாற்றப்பட்டது. அப்போது ஆயத்த ஆடை, சில்லரை வர்த்தகம் தொடர்பான இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.

பின்னர் 6.5.2016 இல் இக்கல்லூரியில் பி.எஸ்.சி. டெக்ஸ்டைல்ஸ், எம்.பி.ஏ. (டெக்டைல்ஸ் ,அப்பாரல், ரீட்டெயில் மேனேஜ்மென்ட் ) முதுகலை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு ஆகியவை தொடங்கப்பட்டன. இதில் மேற்கூறிய முன்று பிரிவுகள் விருப்பப் பாடமாக உள்ளன. ஜவுளி மற்றும் மேலாண்மை மற்றும் மத்திய பல்கலைக்கழகம்,  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேசப் பள்ளி ஆகிய இரண்டும் இணைந்து இந்தப் படிப்புக்களை வழங்கி வருகின்றன.

ஜவுளித்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, பி.எஸ்சி.,டெக்ஸ்டைல்ஸ் மூன்று ஆண்டு பட்டப் படிப்பில் சேர்வதற்கு, பிளஸ் டூ}வில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகம் பொதுநுழைவுத் தேர்வு (சியூசிஇடி) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

எம்.பி.ஏ., இரண்டு ஆண்டு முதுகலை படிப்புக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பில்  50 சதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எங்கள் கல்லூரியின் திறனறி தேர்வு மூலம், அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், அரசு விதிகளின்படி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மென்ட், அப்பேரல் மேனேஜ்மென்ட், ரீட்டைல் மேனேஜ்மென்ட் என மூன்று விருப்பப் பாடங்கள் உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் தலா 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பி.எஸ்.சி. டெக்ஸ்டைல்ஸ் மாணவர்களுக்கு முதலில் ஆங்கில மொழிப்பாடம் நடத்தப்படும். மேலும் இந்தி அல்லது தமிழ் பாடம் நடத்தப்படும். ஜவுளித்துறைக்கு தேவையான பஞ்சு வகைகள் குறித்தும், அதனை தன்மைகள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் பாடம் மற்றும் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று ஜவுளித்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேஷன், ஆடை உற்பத்தியின் கோட்பாடுகள், நடைமுறைகள் குறித்து பாடம் மற்றும் பயிற்சி அளிக்கப்படும். சாயம் ஏற்றுதல், சாயத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பாடம் நடத்தப்படும்.

ஜவுளி ஆலைகளுக்கு சென்று மாணவர்கள், நிறுவனங்களின் வேலை, செயல்பாடுகள், குறைகளைக் களைதல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையைக் கருத்தரங்கில் சமர்ப்பித்து சான்றிதழ் பெற வேண்டும். ஒரு தொழில்முனைவோராகச் செயல்படத் தேவையான பயிற்சி அளிக்கப்படும். இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. எம்.பி.ஏ., படிப்பில் 65 சதவீதம் மேலாண்மை குறித்த பாடம் மற்றும் பயிற்சியும், 35சதவீதம் டெக்ஸ்டெல்ஸ் குறித்த பாடம் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.

தொழிற்கல்வி, திறன் அபிவிருத்தி,தொழிற்சாலைகளின் ஆற்றல், மின்தேவை,ஆலை நிர்வாகம், குறைபாடுகளுக்குத் தீர்வு என ஆலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். கழிவு மேலாண்மை என ஆலையின் ஒட்டு மொத்த செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். புதியவை  குறித்து திட்ட அறிக்கை தயாரித்து, அதனை சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பித்து சான்றிதழ் பெற வேண்டும்.

வேலைவாய்ப்பு சிறப்பாக உள்ளது. தொழில்முனைவராக வேண்டும் என்று நினைத்துப் படிப்பவர்களும் அதிகம்'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com