நட்பெனும் வானம்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

படிக்கும் பருவம் சுமைகளில்லாத காலம். அதில் துள்ளிக் குதித்தும், மகிழ்ச்சியில் திளைத்தும் ஒவ்வொரு நாளையும் அணுக வேண்டும்.
நட்பெனும் வானம்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

உச்சியிலிருந்து தொடங்கு-25
படிக்கும் பருவம் சுமைகளில்லாத காலம். அதில் துள்ளிக் குதித்தும், மகிழ்ச்சியில் திளைத்தும் ஒவ்வொரு நாளையும் அணுக வேண்டும். படிப்பதையும், விளையாடுவதையும் சமவிகிதத்தில் செய்து உடலையும், உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டிய காலம் அது. 

நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது சில பேராசிரியர்கள், "உங்களுடைய இந்தப் பருவமே உன்னதமானது. இது கவலைகளில்லாத காலம். எனவே, முழுமையாக அனுபவியுங்கள்'' என்று அடிக்கடி அறிவுறுத்துவார்கள். நாங்களோ படிக்கிற பெரிய பொறுப்பு தலைமேல் இருக்கிறதே என்று எண்ணி, "எப்போது வேலைக்குப் போவோம், சுயமாக சம்பாதிப்போம், இஷ்டப்படி செலவழிப்போம்' என்றெல்லாம் கனவுகளில் களித்திருந்தோம். கடைசித் தேர்வு முடிந்ததும் ஆடிப் பாடி மகிழ்ந்தோம். 

பணியில் சேர்ந்த பிறகு அந்தப் பேராசிரியர்கள் அசரீரி போல கூறியது, எவ்வளவு நிஜம் என்பதை உணர்ந்தோம். 

கல்லூரி வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்கிற அனுபவத்தில் இழைக்கும் அத்தனை தவறுகளும் மன்னிக்கப்படும். அது கோலாகலமாக இருக்க வேண்டிய வாழ்வின் பகுதி. எதையோ நிரூபிக்க நினைத்து அதை பந்தயக்களமாகக் கருதுபவர்கள் மாம்பழத்தின் கொட்டையைச் சப்புகிற துரதிருஷ்டசாலிகள்.  படிப்பது விளையாட்டைப் போல நிகழ வேண்டும். பரீட்சையை பண்டிகைபோல அணுக வேண்டும். இவை இரண்டும் ஏற்பட நல்ல நட்பு அமைய வேண்டும். 

ஒரு கட்டத்திற்கு மேல் நம்முடைய ஆளுமையைத் தீர்மானிப்பவர்கள் நண்பர்கள். எனக்கு நிறையப் புத்தகங்களை அறிமுகப்படுத்தியவர்கள், மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தவர்கள், போட்டித் தேர்வு எழுத நிர்ப்பந்தித்தவர்கள், நேர்த்தியாக உடை அணிய பழக்கியவர்கள், ஆங்கில உச்சரிப்பைத் திருத்தம் செய்தவர்கள், பல குரல் கேளிக்கையை ஆர்வமாகக் கேட்டு தூண்டியவர்கள், எழுத்துகளைப் பார்த்து சிலாகித்தவர்கள், நேர்மையை அவ்வப்போது திடமாக்கியவர்கள், பணியில் தொய்வு ஏற்படும்போது பக்கத்திலிருந்து தனிமையைப் போக்கியவர்கள் என அனைவரும் நண்பர்களே.

என்னை உள்வட்ட நண்பர்களே உளிகொண்டு செதுக்கினார்கள். உள்ளுக்குள் இருந்தவற்றைப் பிதுக்கினார்கள். 

நல்ல நட்பு அமைந்தால், கல்லூரியில் சோர்வு ஏற்படாது. பதின்மப் பருவத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிப்பெண்கள் வாங்கத் தூண்டுகிற அளவுக்கு நண்பர்களைச் சம்பாதிக்க அறிவுறுத்துவதில்லை. 

திருவள்ளுவர் நட்புக்காக ஐந்து அதிகாரங்களை ஒதுக்கியிருக்கிறார். பொருட்பாலில் மன்னர்களின் கடமைகளைச் சொல்கிற அவர், நட்பு முக்கியம் என்பதை வலியுறுத்தவே 50 குறட்பாக்களை அளித்திருக்கிறார். இதில் உள்ள சூட்சுமம் நுட்பமானது. நல்ல நண்பர்கள் அமைந்தவர்கள் மன்னர்களைப்போல வாழ்வார்கள் என்பதே அது. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என்று அனைத்தையும் விளக்கி உயர்ந்த நட்பைப் பெற இலக்கணம் வகுக்கிறார். 

நல்ல நண்பர்கள், சிறந்த புத்தகம் வாசிக்க வாசிக்கப் புதுப்புதுப் பரிமாணங்களை வழங்குவதைப்போல, அன்றாடம் ஓர் அதிசயத்தக்க குணத்தால் ஈர்ப்பார்கள்.

அந்தப் பண்பு பழகும் எல்லா நொடிகளையும் இனிமையாக்கும். அடிக்கடி பேசுவதால் மலர்வது நட்பல்ல. ஒத்த உணர்வு இருந்தாலே போதும். 

நாம் சிரிக்கிறபோது சிரிப்பவர்கள் அல்லர், அழுகிறபோது கண்ணீரைத் துடைப்பவர்களே நல்ல நண்பர்கள் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார். 

நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கிரேக்கப் புனைவியல் ஒன்று உண்டு. நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை பித்தாகரஸ் வலியுறுத்துகிறார். 

நம்பர்களிலும் நண்பர்களைப் பார்த்தவர் அவர். ஓர் எண் எந்த எண்களால் முழுமையாக வகுபடக்கூடியது என்பதை அறிய முடியும். உதாரணத்திற்கு 6 என்கிற எண் 1, 2, 3 ஆகியவற்றால் வகுபடும். அவற்றைக் கூட்டினால் 6 வரும். வகுபடக் கூடிய எண்களைக் கூட்டினால் அதே எண் வந்தால் அது பரிபூரணமான எண் (Perfect Number). இரண்டு எண்களில் ஒன்றில் வகுபடக்கூடிய எண்களைக் கூட்டினால் அந்த இன்னோர் எண் வந்தால் அவை நட்பு எண்கள்.

உதாரணத்திற்கு 220, 284. இவற்றில் 220-இல் வகுபடக்கூடிய எண்கள் 1, 2, 4, 5, 10, 11, 20, 22, 44, 55, 110. இவற்றைக் கூட்டினால் 284 வரும். இன்னோர் எண்ணான 284-இல் 1, 2, 4, 71, 142 ஆகியவை வகுபடக்கூடியவை. அவற்றைக் கூட்டினால் 220 வரும். 

நட்பு எண்களைப்போலவே நம் நண்பர்கள் நம்முடைய மற்ற நண்பர்களுக்கும் பிடித்தமானவர்களாக இருந்தால்தான் சிறந்த நட்பு ஏற்படும். 

டேமன், பித்தியாஸ் இருவரின் நட்பு உன்னதமானதற்குக் காரணம் உண்டு. பித்தியாஸ், சிராக்கஸ் மன்னனான முதலாம் டயோனிஷியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான். கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட அவன் விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஒத்துக் கொண்டான். ஆனால் ஒரு முறை இல்லம் செல்ல அனுமதி கேட்டான். வீட்டுக் கடமைகளை முறையாக நிறைவேற்ற அந்த அவகாசத்தை அவன் கோரினான். மன்னனோ மறுத்தான்.

விடுவித்தால் அவனைப் பிடிக்கவே முடியாது என எண்ணினான். 

அப்போது மன்னன் விதித்த நிபந்தனை சுவாரஸ்யமானது. பித்தியாஸ் இடத்தை வேறொருவர் நிரப்பினால் அவகாசம் அளிப்பதாகச் சொன்னான். யாரும் அவ்வாறு வரமாட்டார்கள் என்பதே அவன் கணிப்பு. பதிலியாக வருகிறவன் பித்தியாஸ் திரும்பி வராவிட்டால் தூக்கிலிடப்படுவான் என்ற எச்சரிக்கையையும் விடுத்தான். 

மன்னன் எதிர்பார்க்காதவாறு அவன் இடத்திற்கு ஆருயிர் நண்பன் டேமன் வந்தான். வருவதாக வாக்குறுதி சொன்ன நாளில் பித்தியாஸ் வரவில்லை. டேமனைத் தூக்கிலிட ஏற்பாடுகள் நடந்தன. சரியாக தண்டனை நிறைவேற்றப்படுகிற நேரத்தில் பித்தியாஸ் கூக்குரலிட்டுக்கொண்டே குதிரையில் வந்தான். டேமனோ அவனைத் திரும்பிப் போகச் சொன்னான். "உனக்கு பதிலாக நான் இறக்கச் சம்மதிக்கிறேன், தப்பித்துப் போ. கொடுங்கோன்மைக்கு எதிராகக் குரல் கொடு'' என்று கத்தினான். ஆனால், பித்தியாஸ் கொலைக்களத்திற்கு வந்தான்.

பயணம் செய்த கப்பல் எப்படி கடற்கொள்ளைக்காரர்களிடம் வசமாகச் சிக்கியது என்பதை விவரித்த அவன், தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டான். கப்பலில் இருந்து கடலில் குதித்து கரை வரை நீந்தி சிராக்கஸ் வந்ததாகவும், நண்பனைக் காப்பாற்ற முடிந்ததற்கு மகிழ்வதாகவும் அவன் சொன்ன விவரங்களைக் கேட்டு மன்னன் வாயடைத்துப் போனான். அவர்கள் நட்பைப் பார்த்து வியந்த டயோனிஷியஸ் அவர்கள் இருவரையும் மன்னித்தான். தன்னையும் அவர்கள் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொள்ளும்படி விண்ணப்பம் வைத்தான். அவர்களோ மறுத்துவிட்டார்கள். 

நட்பு தானாகப் பூக்க வேண்டும். யாரேனும் இதழ்களைப் பிரித்து பலவந்தமாக மொட்டைப் பூவாக்கினால் அது நறுமணமற்று மொட்டையாக இருக்கும். 

பதின்மப் பருவத்திலேயே விளையாடும்போதும், படிக்கும்போதும், பள்ளிக்குப் போகும்போதும் நண்பர்களோடு செல்வதும், குழுவாக அமர்ந்து கற்றுக் கொள்வதும் எல்லா சிரமமான பணிகளையும் இனிமையானதாக மாற்றும். நான் என் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை வெங்கடேஸ்வரன் என்கிற நண்பரோடு தினமும் பள்ளிக்குச் செல்வேன். எங்கள் நட்பு அவ்வளவு ஆழமாக இருந்தது. 

பள்ளியில் நண்பர்களை உருவாக்கிக் கொண்டால் பெருந்தன்மை ஏற்படும். நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற உற்சாகம் கிடைக்கும். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் நம் நண்பர்கள் அதை துடைத்துவிடுவார்கள். அவர்கள் இருக்கும் தைரியம் நம்மை வீரத்துடன் விளங்க வைக்கும். பல்வேறு கருத்துகள் பரிமாறப்படும் இடத்தில் நம்முடைய சிந்தைனையும் செழுமையடையும். மதிப்பெண் குறைந்தால் அவர்களுடைய துணை அடுத்த தேர்வில் வெளுத்துக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். 

தனிமையாக இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் சோகமாக இருப்பார்கள். பெறுகிற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளக் கூட அவர்களுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com