சேவை மனப்பான்மை...நர்சிங் படிப்பு!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்கள் வேலைக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டுதான் உள்ளது.
சேவை மனப்பான்மை...நர்சிங் படிப்பு!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்கள் வேலைக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டுதான் உள்ளது. செவிலியர் வேலைக்குப் படிக்க வேண்டும் என்றால், சமுதாய அக்கறை, சேவை மனப்பான்மை, பொறுமை ஆகிய மூன்றும் மிகவும் அவசியமாகும். செவிலியர் படிப்பில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு படிப்புகள் உள்ளன.

இது குறித்து விருதுநகர் வி.வி.வி.பெண்கள் நர்சிங் கல்லூரி முதல்வர் எம்.விமலாவிடம் கேட்டபோது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம்,  தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், புதுதில்லியில் உள்ள  இந்தியன் நர்சிங் கவுன்சில் ஆகிய அமைப்புகளில் அனுமதி பெற்ற பின்னரே நர்சிங் கல்லூரி தொடங்க இயலும்.

இதில் மூன்று ஆண்டு சான்றிதழ் படிப்பு (டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங்), நான்கு  ஆண்டு பட்டப் படிப்பான பி.எஸ்ஸி., நர்சிங் படிப்பு, இரண்டு ஆண்டு முதுகலை பட்டப் படிப்பான எம்.எஸ்ஸி., நர்சிங் படிப்புகள் உள்ளன. மேலும் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன.

மூன்று ஆண்டு சான்றிதழ் பட்டயப் படிப்பு, நான்கு ஆண்டு பட்டப் படிப்பு ஆகியவற்றில் சேர்வதற்கு பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களில் 45 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதம் மதிப்பெண்கள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 

எங்கள் கல்லூரியில் பெண்கள் மட்டுமே படிக்க பி.எஸ்ஸி., நர்சிங் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் சில கல்லூரிகளில் ஆண், பெண் என இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள்.

நான்கு ஆண்டு பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு உடல்கூறுகள், பயோகெமிஸ்ட்ரி, நுண்ணுயிரியல் ஆகியவற்றில் பாடங்களும், ஆங்கில மொழிப்பேச்சு, கணினி உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர்கள் மூன்று மாத காலம் களப்பயிற்சி பெற வேண்டும். இதற்கான அரசு மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் ஆண்டு மெடிக்கல் சர்ஜிக்கல், மருந்தியல், மரபியல் குறித்த பாடங்களும், சமுதாயம் குறித்த பயிற்சியும் அளிக்கப்படும். மூன்றாம் ஆண்டு குழந்தைகள் மருத்துவம், மனநல மருத்துவம் ஆகியவை குறித்து பாடங்களும், செவிலியர் பயிற்சியும் அளிக்கப்படும். மருத்துவமனையில் பயிற்சி பெற்று, திட்ட அறிக்கையை மாணவர்கள் அளிக்க வேண்டும். 

நான்காம் ஆண்டு பிரசவம், நிர்வாகம், சமுதாய இயக்கம் குறித்த பாடங்கள் நடத்தப்படும். ஆறு மாதம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற வேண்டும்.

தனியார் மருத்துவமனையினர் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைக்கு மாணவிகளை எடுத்துச் செல்கிறார்கள். அரசு, மருத்துவத் தேர்வுக்குழு மூலம் தேர்வு நடத்தும்.

இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு வேலை வழங்கும். இந்தப் படிப்பில் தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என யாரும் சும்மா இருக்கவில்லை. முதலில் இங்கு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டு முடிந்துவிட்டால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. அப்படி வேலைக்குச் செல்பவர்களுக்கு துபாய் போன்ற நாடுகளில் தொடக்கத்தில் மாதம் ரூ 1.50 லட்சம் சம்பளமும், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் ரூ 2.50 லட்சம் சம்பளமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சேவை மனப்பான்மையுடன் கூடிய இந்த படிப்பு பெண்களுக்கு ஓர் அரிய வேலை வாய்ப்பு தரும் படிப்பாக உள்ளது'' என்றார் விமலா.
- எஸ்.பாலசுந்தரராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com