தேர்ந்தெடுங்கள்...பொருத்தமான வேலையை!

சரியான வேலையில்தான் உள்ளோமா? நமக்கான சிறந்த வேலையை எப்படித் தேடிக் கொள்வது? இதுபோன்று பல்வேறு கேள்விகள்,
தேர்ந்தெடுங்கள்...பொருத்தமான வேலையை!

சரியான வேலையில்தான் உள்ளோமா? நமக்கான சிறந்த வேலையை எப்படித் தேடிக் கொள்வது? இதுபோன்று பல்வேறு கேள்விகள், தற்போது வேலையில் இருப்பவரிடமும், வேலையைத் தேடிக் கொண்டிருப்போரிடமும் எழும்.
சிறந்த வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். வேலை  தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிபுணரின் உதவி இருந்தாலும் அத்தகைய வேலைவாய்ப்பை உறுதியாக நம்மால் பெற முடியுமா? என்றால், அதுவும் சந்தேகம்தான்.
எனவே கீழ்காணும் 4 வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். நிச்சயம் அவை உங்களது லட்சியப் பாதையில் செல்ல
உதவியாக இருக்கும்.
1. தவறான துறையா? என்பதை உறுதி செய்யுங்கள்
தற்போது பணிபுரியும் துறைக்குப் பதிலாக புதிய துறையில் பணிபுரிய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?  தற்போது பணிபுரியும்துறை, தவறானது அல்லது பணிபுரியும் சூழ்நிலை மோசமாக உள்ளது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
அப்படி உறுதிப்படுத்தும்பட்சத்தில் அந்த துறை எப்படி தவறாக அமைந்தது? எது உங்களை அதிருப்தி அடைய செய்தது? என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக, தற்போதைய வேலையில் எது உங்களுக்கு கவலை தருகிறது? வெறுப்பை அளிக்கிறது? மன அழுத்தத்தைக் கொடுக்கிறது? என்பதை தீவிரமாக ஆராய்ந்து விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அந்த தவறுகள் மீண்டும் நேரிடாமல் தவிர்க்க முடியும். 
2. எது வேண்டும், எது வேண்டாம் என்பதைக் கண்டுபிடியுங்கள்
பல காரணங்களுக்காக உங்களுக்குப் பிடிக்காத, பொருத்தமில்லாத வேலையில் பணிபுரிந்து கொண்டு இருப்பீர்கள்.  ஆனால் தற்போது அதைத் தொடர வேண்டாம் என்று நினைத்தால், இந்த கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
• எந்த வேலையைச் செய்யும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?
• எந்த வேலையை நீங்கள் செய்யும்போது பிறர் உங்களைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர்? ஏன் ஆச்சரியமடைகின்றனர்?
• எந்த வேலையைப் பிறரைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாகச் செய்வதாக கருதுகிறீர்கள்?
• எதில் நீங்கள் அதிகத் திறமையுடையவர் என்று நினைக்கிறீர்கள்?
இந்த கேள்விகளுக்கு நீங்கள் விடைகளைக் கண்டுபிடித்தால், உங்களுக்கு எது வேண்டும்?, எது வேண்டாம்? என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.
3. உங்களது பின்னணி, தகுதிகளை மதிப்பிடுங்கள்
நாம் விரும்பும் இலட்சியப் பாதையைத் தேர்வு செய்ய 2 முக்கியக் காரணிகள் நமக்கு மிகவும் தேவையாகும். 1. நமது பின்னணி (கல்வி, முந்தைய பணி அனுபவம், நடைமுறை திறன்), 2. நமது ஆளுமை (குண இயல்பு, ஆர்வம்). இவை இரண்டையும் மதிப்பிட வேண்டும். குறிப்பிட்ட வேலையில் பணிபுரிவதற்கு தேவைப்படும் தகுதிகள் உள்ளனவா? என்பதை மதிப்பிட வேண்டும். வேலைக்கு நாம் தயார் செய்யும் விண்ணப்பப் படிவத்தைக் காட்டிலும், இவை நமக்கு மிகவும் தேவைப்படுகின்றன.    
4. அறிவுரையைக் கேளுங்கள்; முழுவதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்
நண்பர்கள், குடும்பத்தினர் என்று யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அறிவுரை அளிப்பார்கள். உங்களது நலன் கருதி பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருப்பார்கள். ஆனால், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. கட்டாயமில்லை. பிறரது அறிவுரை நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், அந்த அறிவுரைகள் உங்களது தனிப்பட்ட செயல்பாடுகள், வேலை தொடர்பான ஆய்வுக்கு உதவியாக இருக்குமா? என்பது குறித்து சிந்தித்து முடிவெடுங்கள்.
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com