அண்டவியல் யூகங்களைத் தெளிவுபடுத்திய சமன்பாடு!

இந்திய விஞ்ஞானிகளில் சத்யேந்திரநாத் போஸ், ஜெகதீச சந்திர போஸ், சர். சி.வி.ராமன், மேகநாத் சாஹா, ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
அண்டவியல் யூகங்களைத் தெளிவுபடுத்திய சமன்பாடு!

இந்திய விஞ்ஞானிகளில் சத்யேந்திரநாத் போஸ், ஜெகதீச சந்திர போஸ், சர். சி.வி.ராமன், மேகநாத் சாஹா, ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். முன்னோர்களான இவர்களைப் பின்பற்றியே பின்னேர்களாக இளம் விஞ்ஞானிகள் படை உருவானது. அத்தகைய முன்னேர்களில் இடம் பெறத்தக்க தகுதி கொண்டிருந்தும் தேசிய அளவில் கவனம் பெறாது போனவர், கோட்பாட்டு இயற்பியல் மற்றும் அண்டவியல் விஞ்ஞானி அமல்குமார் ராய் செளத்ரி. 

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் (General Relativity Theory) விடுபடாத புதிர்களைப் போக்கும் விதமாக ராய் செளத்ரி உருவாக்கிய சமன்பாடு, கோட்பாட்டு இயற்பியலில் முக்கிய இடம் பெறுகிறது. அதற்கு ராய் செளத்ரி சமன்பாடு (Raychaudhuri equation) என்றே பெயர். 

பொது சார்பியல் கோட்பாட்டில் ஒருமைகள் (Singularities) எழுவதைத் தவிர்க்க முடியாது என்ற அவரது கருத்து, பென்ரோஸ்- ஹாக்கிங் ஒருமைத் தேற்றத்தை நிரூபிக்க உதவுகிறது. பெருவெடிப்பு, ஈர்ப்பு விசையை விஞ்சும் கிரகங்களின் சுழற்சி உள்ளிட்ட வியப்பான அண்டவியல் (Cosmology) யூகங்களை தெளிவடையச் செய்வதாக இச்சமன்பாடு கருதப்படுகிறது. 

இயற்பியலாளரான ராய் செளத்ரி, கணித அடிப்படையில் இந்த சமன்பாட்டை 1954-இல் உருவாக்கியபோது யாருமே அவரைப் பொருட்படுத்தவில்லை. ஆதரவற்ற சூழல் காரணமாக அவருக்கே அதை வெளிப்படுத்தும் துணிவு இல்லாதிருந்தது. ஆனால் நமது நாட்டின் இலக்கணப்படி, வெளிநாட்டு விஞ்ஞானிகள் பலரும் அதைப் பாராட்டிய பிறகு, ராய் செளத்ரிக்கு உரிய மரியாதை கிடைத்தது. 

தனது ஆராய்ச்சிக் காலத்தில் பல தடைகளைச் சந்தித்தபோதும் துவளாமல் பணியாற்றியதன் பயனை ராய் செளத்ரி அப்போது பெற்றார். தனக்கு நேரிட்ட இடையூறுகள் யாருக்கும் நேரக் கூடாது என்ற மன உறுதியுடன், பிற்காலத்தில் தான் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது நூற்றுக் கணக்கான இளம் விஞ்ஞானிகளை உற்சாகமாக வழிநடத்தினார் அவர்.

அதன்விளைவாக, அவர் பணியாற்றிய கொல்கத்தா மாநிலக் கல்லூரியிலிருந்து அசோக் சென் போன்ற புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலர் உருவானார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டினார். அவரை ஏ.கே.ஆர். என்றும், அமல்பாபு என்றும் அவரது மாணவர்கள் கொண்டாடுகிறார்கள். 

பிரிக்கப்படாத இந்தியாவில், கிழக்கு வங்கத்தின் பாரிசாலில் 1933, செப். 14-இல் பிறந்தார் அமல்குமார்.  கணித அறிஞரான அவரது தந்தை கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியராக இருந்தார். அதன் விளைவாக, சிறு வயதிலேயே கணிதம் மீது அமலுக்கு ஆர்வம் ஏற்பட்டது.   

உள்ளூரில் தீர்த்தபதி பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற அமல்குமார், கொல்கத்தா ஹிந்து பள்ளியில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். பள்ளியில் பயிலும்போதே, அவரது கணித ஆசிரியர் கணக்குகளுக்குக் கூறிய படிநிலைகளைவிட வேகமாகத் தீர்வு காணும் படிநிலைகளை அவர் உருவாக்கி வியப்பில் ஆழ்த்தினார். 

பிறகு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1942-இல் பி.எஸ்சி. பட்டம் பெற்ற அவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார் (1944).

பிறகு ஆராய்ச்சிப் படிப்புக்காக ஜாதவ்பூரில் இயங்கும் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science - IACS) 1945-இல் சேர்ந்தார். 

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வியாளர் மகேந்திர சர்க்காரால் நிறுவப்பட்ட கல்லூரி அது. ஆனால் அங்கு தனது ஆர்வத்துக்கு முற்றிலும் எதிரான துறையில் ஆய்வுகளை நிகழ்த்துமாறு அமல்குமார் பணிக்கப்பட்டார். 

கணிதமும் இயற்பியலும் தான் அமல்குமாரின் விருப்பம். மாறாக, அங்கு உலோகவியலில் ஆய்வு செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டார். அதனால் விரக்தி அடைந்த அவர், இடைக்காலத்தில் ஆசுதோஷ் கல்லூரியில் இரண்டாண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

எனினும் அவரது ஆராய்ச்சி மனம் ஆய்வுகளில் ஈடுபடவே ஏங்கியது. எனவே மீண்டும் 1952-இல் ஐசிஏஎஸ் நிறுவனத்தில் நிபந்தனைகளுடன் ஆராய்ச்சியாளராகப் பொறுப்பேற்றார். அங்கு கொடுக்கப்பட்ட பணிகளை விருப்பமில்லாத போதும் நிறைவேற்றி வந்தார். அச்சமயத்தில் உலோகவியலில் இரு ஆய்வறிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.

அந்தக் காலகட்டத்தில் அவர் மிகவும் தனிமை விரும்பியாக மாறினார். அப்போது மாறுபடு வடிவியல், பொது சார்பியல் கோட்பாடு ஆகியவை குறித்து தனிமையில் ஆழ்ந்த ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.

பொது சார்பியல் கோட்பாடு குறித்த புரிதல்கள் பெரிய அளவில் ஏற்படாத காலம் அது. எனவே அதுதொடர்பான ஆராய்ச்சி வீணானது என்ற கருத்து நிலவியது. அத்தகைய அலட்சியச் சூழலில், ஆய்வாளராகத் தொடர வேண்டுமானால் உலோகவியலில் ஆராய்ச்சி செய்தாக வேண்டிய நிர்பந்த நிலையில், 1954-இல் தனது அரிய கண்டுபிடிப்பை அமல்குமார் உருவாக்கினார். அதுவே ராய் செளத்ரி சமன்பாடாகும்.

எனினும், கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அஞ்சி அதை அவர் வெளியிடத் தயங்கினார். எனினும், 1955-இல் அவரது சமன்பாடு உலக விஞ்ஞானிகளின் பார்வைக்குச் சென்றபோது, அவர்கள் அதன் பெருமையை உடனே கண்டுகொண்டார்கள். குறிப்பாக ஜெர்மனியைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியலாளர் பாஸ்கல் ஜோர்டான், அமல்குமார் ராய் செளத்ரியின் சமன்பாடு குறித்து விஞ்ஞானிகளிடையே பரவலான கருத்தை உருவாக்கினார். 

அதையடுத்து, அந்தச் சமன்பாட்டையே ஆய்வேடாக மாற்றி ஐசிஏஎஸ்-சில் சமர்ப்பித்த அமலுக்கு 1969-இல் டி.எஸ்சி. பட்டம் வழங்கப்பட்டது. அவரது தனிமை தவத்துக்கு இறுதியில் கிடைத்த வெற்றி அது.

அதன் பிறகு 1961-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் கோட்பாட்டு இயற்பியல் (Theoretical Physicis) பேராசிரியராக இணைந்த அவர், சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது, தனக்கு நேரிட்ட தடைகள் தனது மாணவர்களை அணுகாது, அவர்களை உற்சாகப்படுத்தி பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளச் செய்தார். அதன் விளைவாக அற்புதமான பல இளம் விஞ்ஞானிகள் உருவாகினர். 

வெளிநாடுகளில் புகழ்பெற்ற அண்டவியல் விஞ்ஞானியான ஜெயந்த் விஷ்ணு நார்லிக்கர் 1972-இல் நாடு திரும்பியபோது, அவர் ராய் செளத்ரியின் மகிமையை உணர்ந்து அதை வெளிப்படுத்தினார். அதன் பிறகே அவருக்கு புதிய மரியாதை கிடைத்தது. ராய் செளத்ரி குறித்த நார்லிக்கரின் நூல் அறிவியல் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டியதாகும்.

2005, ஜூன் 18-இல் முதுமை காரணமாக அவர் உயிரிழந்தபோதுதான், அவரது சிறப்புகள் முன்னாள் மாணவர்கள் வாயிலாக ஊடகங்களில் வெளிப்பட்டன. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆராய்ச்சிக்கும் கல்விப் பணிக்கும் செலவிட்ட அமல்பாபுவுக்கு உரிய சிறப்புகள் அரசால் செய்யப்படவில்லை என்பது வேதனை அளிப்பதாகும்.

கர்மயோகிகள் பலனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்நாள் இலக்கை பூர்த்தி செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள்.  ராய் செளத்ரி சமன்பாடு ஒன்று போதும், அமல்பாபுவின் பெருமையை உலகம் உணர. அவரது மாணவர்கள் உலக அளவில் முத்திரை பதிக்கும்போதெல்லாம் அங்கு அவரது பெயரும் உச்சரிக்கப்படுகிறது. இதைவிடச் சிறப்பு வேறு எது?
- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com