அந்த "மானை'ப் பாருங்கள்.. அழகு! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

இராவணனைப் பார்த்து மாரீசனானவன், "இராவணா நீயோ மாயவித்தைகளில் வல்லவன். நீயே ஏன் இராமனைப்போல் உருமாறி சீதையை நம்ப வைத்து,
அந்த "மானை'ப் பாருங்கள்.. அழகு! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 5

இராவணனைப் பார்த்து மாரீசனானவன், "இராவணா நீயோ மாயவித்தைகளில் வல்லவன். நீயே ஏன் இராமனைப்போல் உருமாறி சீதையை நம்ப வைத்து, அவளை அழைத்துக்கொண்டு வரக்கூடாது?'' எனக் கேட்க, அதற்கு இராவணன் சொன்ன பதில் என்ன என்று நான் கேட்க, ஹெட்போன் பாட்டி எழுந்து சொன்ன பதிலால் நான் மலைத்துப்போனேன். அந்தப் பாட்டி என்ன சொன்னது தெரியுமா? 

மாரீசனைப் பார்த்து இராவணன், "அட மக்கு மாமா... நான் இராமனாக உருமாறிவிட்டால் என்னால் எப்படி அடுத்தவன் மனைவி மீது ஆசை கொள்ள முடியும்? உருவத்திற்கேற்ற உள்ளமும், உணர்வும் வந்துவிடாதா  என்றுதானே சொன்னான்?'' என்று ஹெட்போன் பாட்டி கேட்டுவிட்டு, "அம்பிகளா இது இராமாயணத்துல இல்ல.  இமயஜோதி சிவானந்தர் சொன்ன கதையாக்கும்'' என்று கிராஸ்டாக்காகச் சொல்லிமுடிக்க, எல்லாரும் சந்தோசமாகக் கைதட்டினார்கள். நானும் பாட்டிக்கு வணக்கம் செலுத்தி, "அருமையாகச் சொன்னீர்கள். உங்கள் பேரென்ன?'' என்று கேட்டேன். 

"ஆண்ட்ராய்டு அம்புஜம்னு அகிலமே சொல்லும்'' என்று ஸ்டைலாகச் சொன்னது பாட்டி. மீண்டுமொரு கைதட்டல். நான் என் பேச்சைத் தொடங்கினேன்.

"பாட்டியம்மா சொன்ன செய்தி, வித்தியாசமானதுதான். நாம் எதுவாக மாறுகிறோமோ, அதற்கேற்ப நம் குணமும் செயல்களும் அமையும். அதனால், உயர்பொருளைச் சிந்தித்து வெற்றிச்செல்வத்தை எட்டிப் பிடிக்கவேண்டும்'' என்று நான் சொல்லிக்கொண்டு வரும்போதே,
"அது சரிங்க... நீங்க இந்த உலகத்துல இதுவரைக்கும் பார்க்காத ஒன்னுன்னு என்னமோ சொல்லீட்டு வந்தீங்க. அதுக்குள்ள அந்தப் பாட்டி ஊடால வந்திருச்சு. நீங்களும் இராமாயணத்த ஆரம்பிச்சுட்டீங்க. எங்களுக்குக் கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு'' என்று மணலைக் குவித்து உட்கார்ந்திருந்த ஒருவர் சொன்னார்.

"சரியாச் சொன்னீங்க. ஆகாயத்தில் பிறந்தாலும் கழுகின் பார்வை, தன் இரையாகிய உணவின்மீது இருப்பதுபோல, சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிடக் கூடாது. நன்றி ஐயா'' என அவருக்கு வணக்கம் போட்டுவிட்டு மேலும் தொடர்ந்தேன். 

"இங்கிருந்த மீனவ நண்பர் ஒருவர், இந்தப் பகுதியில் காணப்படும் அரிய உயிரின வகையாகிய கடல்தாமரை எனக் காட்டினார்.  Sea anemone  (சீ அனிமோன்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்  இதனுடைய அறிவியல் பெயர்  Actinioidia (ஆக்டி - நியாய்டியா). கடல்நீரில் தாமரை மலர்போல் மலர்ந்திருக்கும் அந்த உயிரினம், எந்தச் சிற்றுயிர் தன்மீது பட்டாலும் அதனை உள்ளிழுத்து உண்டுவிடுமாம்'' என்று நான் சொல்ல, "ஐயோ நான் காலைல அங்கதான பல்டி அடிச்சுக் குளிச்சேன்'' என்று ஒருவர் கத்த, "கவலைப்படாதீங்க அதுக்குத்தான் அடிபட்டிருக்கும்'' என்று அவர் மனைவி, அவருக்கு ஆறுதல் சொன்னார்.

நான் சிரித்துவிட்டு, "அந்தக் கடல்தாமரையை நான் கண்ணால் பார்த்ததால் ஒத்துக்கொண்டேன். இங்கே இராமாயணக்கதை ஏன் வந்ததென்றால், உடல் பொன்னாகவும், கால்கள், வால், செவிகள் வைர இழைகளாகவும், கண்கள் கோமேதகமாகவும் ஒரு மான் வந்து நிற்க, அப்படி ஒரு மானே இந்த உலகத்தில் இருக்க முடியாது. இது, அசுரர் மாயை எனத் தம்பியாகிய இலக்குவன் சொன்னான். அந்த மானைக் கண்ட சீதை, மயங்கிச்சொன்ன வார்த்தைகள் எவை தெரியுமா?'' என்று நான் முடிக்குமுன்,
"அதுவோ பொன்மான் கேட்கும் நானோ பெண்மான்
நீயோ அயோத்தியின் கோமான்.. சீமான்.. கமான்''
என்று சொல்லியிருப்பாள் என்று ஒரு பெண் அபிநயத்தோடு சொல்ல, கூட்டம் முழுவதும் பொன்மானைக் கண்ட சீதையைப்போல மயங்கியது. நானும் கைதட்டிவிட்டு, இவர்கள் சொன்னதுபோல்,
"அந்த மானைப் பாருங்கள் அழகு அது வேண்டுமென்று சீதை சொன்னது உண்மைதான். அப்போது இராமன், சீதையின் ஆசையை நிறைவேற்ற எண்ணி இலக்குவனை நோக்கி,
தம்பி, இந்த உலகத்தில் முறையாகக் கற்றறிந்த சான்றோரும்கூட நிலையில்லாத இந்த உலகத்தின் உண்மையை முழுமையாய் அறிந்திருக்க முடியாது. பல்லாயிரங்கோடி உயிரினங்களில் நாம் பார்க்காதவற்றை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் எனக் கேட்கின்றான், இராமன்.
இதனைக் கம்பர்,
நில்லா உலகின் நிலை, நேர்மையினால் 
வல்லாரும் உணர்ந்திலர்  மன்  உயிர்தாம் 
பல் ஆயிரம்கோடி பரந்துளதால்  
இல்லாதன இல்லை - இளங்குமரா
எனக் கூறும் அழகைப் பாருங்கள் நம் வாழ்வில் பிடிவாதமாக ஒன்றை மறுக்கும்போதுகூட, ஆதாரத்தோடு மறுத்தால்தான், அந்த வாதத்திற்குப் பலம் உண்டு'' என்று நான் சொல்லி முடிக்க, எல்லாரும் மகிழ்வோடு உணவு உண்ணச்செல்ல, சிலர் கடல்தாமரையைப் பார்க்கச்செல்ல,
"அலைகடல் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் அலையில்லாத கடல் உண்டா? அல்லது அலையைத்தான் அடக்க முடியுமா?'' என்று ஒரு கல்லூரி மாணவி கேட்க,
 "அறிவியலால் முடியும், இராமனின் அம்பினாலும் அலை அடங்கிய கதை தெரியுமா? என்று உடன்வந்த கடல்சார் பொறியியல் பேராசிரியர் (Marine Engineering) பதில் கேள்வி கேட்க, எங்கள் உள்ளத்தில் அலையடிக்கத் தொடங்கியது. ஏன் தெரியுமா?
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com