அரசுத் தேர்வு எழுத கிராமத்தில் பயிற்சி!

"அரசு வேலையா? அதெல்லாம் நமக்குக் கிடைக்காது. நிறையக் காசு செலவு செய்தால்தான் அரசு வேலை கிடைக்கும். நகரங்களில் மிகச் சிறந்த பள்ளிகளில் படித்து,
அரசுத் தேர்வு எழுத கிராமத்தில் பயிற்சி!

"அரசு வேலையா? அதெல்லாம் நமக்குக் கிடைக்காது. நிறையக் காசு செலவு செய்தால்தான் அரசு வேலை கிடைக்கும். நகரங்களில் மிகச் சிறந்த பள்ளிகளில் படித்து, நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைக்கும். என்னைப் போன்ற கிராமத்தானுக்குக் கிடைக்குமா? செல்வாக்கு உள்ள மனிதர்கள் பழக்கமாக இருந்தால்தான் அரசு வேலை கிடைக்கும்.'

இவ்வாறு அரசு வேலை  கிடைப்பது பற்றி   நிறைய தவறான எண்ணங்கள் இருக்கின்றன.

"கிராமப்புறத்திலிருக்கும் மாணவர்கள் தங்களுடைய கடுமையான முயற்சியினால், உழைப்பினால், ஒரு பைசா செலவு இல்லாமல் அரசு வேலைகளைப் பெற முடியும்'' என்கிறார் இராச.முகுந்தன்.

சென்னைக்கு அருகே உள்ளே உள்ள கும்மிடிப்பூண்டியில் "சொந்தம் கல்விச்சோலை' என்ற பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து... 
"கிராமப்புறத்தில் வாழும் மாணவர்களின் வீட்டில் அவர்கள்தாம் முதல் தலைமுறை மாணவர்களாக இருப்பார்கள். அவர்கள் என்ன மேல் படிப்பு படிக்க வேண்டும்? என்ன பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்? என்பன போன்ற தகவல்களைச் சொல்லித் தர அவர்களுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். 

கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 2012 இல் ஃபர்ஸ்ட் குரூப் தேர்வில் பாஸôகிவிட்டார். தன்னைப் போல கிராமத்தில் வாழும் பிற மாணவர்களும் இவ்வாறு தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த அவரை நான் சந்தித்தபோது, இந்தப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நாமே அரசு வேலைகளுக்கான பயிற்சிகளைக் கொடுத்தால் என்ன? என்று எங்களுக்குத் தோன்றியது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதன் தந்த மேலான ஆலோசனைகளின் உதவியால், ஓர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை உள்ள வாடகை இடத்தில் "சொந்தம் கல்விசோலை'யைத் தொடங்கினோம்.

நாங்கள் எதிர்பாராத அளவில் பெண்கள் நிறையப் பேர் பயிற்சி பெறச் சேர்ந்தார்கள். ஆனால் ஆறு மாதத்துக்கு மேல் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாடகை இடத்தைத் தந்தவர் போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால், என்ன செய்வதென்று விழித்துக் கொண்டு இருந்தோம். பலரிடம் உதவி கேட்டோம். யாரும் உதவ முன் வரவில்லை. அப்போதுதான் எம்.சேகர் என்பவரைச் சந்தித்தோம். அவர் தனது 15 சென்ட் நிலத்தை பயிற்சி மையத்துக்காகக் கொடுத்தார். அந்த இடத்தைச் சரி செய்து, பயிற்சி மையம் அமைக்க உதவி செய்தார். 

எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி அவர் உதவி செய்தது எங்களை உருக்கிவிட்டது. அதற்குப் பின்பு நிறைய நாற்காலிகள், ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் என நிறையப் பொருட்களை நன்கொடையாகக் கிடைத்தன. இப்போது எங்களிடம் 250 பேர் பயிற்சி பெறுகின்றனர். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்கள்  இங்கு வந்து படிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு பாடத்தில் திறமையானவராக இருப்பார். அவர் பிற மாணவர்களுக்கு உதவுவார்.

பயிற்சி வகுப்புகளை எடுக்க, எங்களிடம் பயின்று தேர்ச்சி பெற்று அரசு வேலை கிடைத்தவர்கள் ஆர்வமாக வருகிறார்கள். பிற இடங்களில் பயிற்சி வகுப்பு மையங்களை நடத்துபவர்களும் இங்கு வந்து இலவசமாகப் பயிற்சி தருகிறார்கள். மொத்தம் 15 ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

எந்த அரசுப் பணிக்கு அறிவிப்பு வந்திருக்கிறதோ? அதற்கான பயிற்சி வகுப்புகளை நாங்கள் நடத்துகிறோம். விஏஓ தேர்வு, குரூப் 1, குரூப் 2, ரயில்வே என உடனடியாகத் தேர்வு எழுத வேண்டியவற்றுக்குப் பயிற்சி அளிக்கிறோம். 

எங்களிடம் பயிற்சி பெற்ற 150 பேர் தேர்வு எழுதி அரசு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். கிராம நிர்வாக அதிகாரி வேலை முதற்கொண்டு, வருமானத்துறை, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை, பத்திர பதிவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல அரசுத்துறைகளில் வேலை கிடைத்துச் சென்றிருக்கிறார்கள். 

ஒவ்வோராண்டும் நடத்தும் ஆண்டு விழாவை, அந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தவர்களைப் பாராட்டும் விழாவாக நடத்துகிறோம். அவர்கள் நாங்கள் கொடுத்த பயிற்சியினால், அவர்களுக்கு அரசு வேலை கிடைத்ததை மிகவும் நன்றியுடன் கண்ணீர் மல்க பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களே மனம் உவந்து தங்களுடைய முதல் மாதச் சம்பளத்தை நன்கொடையாக கொடுக்கிறார்கள். பயிற்சி மையத்துக்கு வந்து பிற மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். 

விதவைகள், மாற்றுத்திறனாளிகள், மிகவும் ஏழை மாணவர்கள் தவிர, பிற மாணவர்கள் தங்களால் இயன்றதை கல்விக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பணம் கட்ட முடியவில்லை என்பதற்காக யாரும் வகுப்பு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 

இந்தப் பயிற்சி மையத்தை நடத்துவதில் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ரகு, அப்புக்குட்டன், இப்போதும் பயிற்சி மையத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் எம்.சேகர் போன்ற நல்ல உள்ளங்கள் இல்லாவிட்டால், நாங்கள் இந்தத் தன்னலமற்ற சேவையைத் தொடர்ந்து செய்ய முடியாது'' என்றார். 
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com