தோல்விகளை நேசிப்போம்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

நாம் எல்லாரும் வெற்றியையே விரும்புகிறோம். சிகரத்தைச் சேர்ந்தால் கிடைக்கும் அங்கீகாரமும், பரிசுகளும், பாராட்டும்
தோல்விகளை நேசிப்போம்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

உச்சியிலிருந்து தொடங்கு-19
நாம் எல்லாரும் வெற்றியையே விரும்புகிறோம். சிகரத்தைச் சேர்ந்தால் கிடைக்கும் அங்கீகாரமும், பரிசுகளும், பாராட்டும் நம்மை பரவசப்படுத்துகின்றன.  வெற்றியைப் பெற்ற பிறகு ஒருவர் எதை வேண்டுமானாலும் பேசலாம். அதைச் சமுதாயம் அப்படியே வழிமொழிகிறது. எந்த வகையில் வெற்றியை அடைந்தாலும் அதை உலகம் ஏற்றுக் கொள்கிறது.  

வெற்றி தரும் களிப்பையும், மகிழ்ச்சியையும் அசைபோடுகிற அனைவரும் அதுவே முக்கியம் என்று கருதுகிறார்கள். இளைஞர்களின் இதயத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக விதைக்கப்படுகிறது. தோல்வியடைந்தவர்கள் பார்வையாளராகக்கூட அனுமதிக்கப்படாத அரங்கத்தில் வெற்றி மாயாஜாலம் காட்டி மின்னுகிறது.  

தோல்வி ஆழமாக இருக்கிறது.  கடல் கரைகளில் ஆழமில்லாததால்தான் அலைகள் எழும்புகின்றன. தோல்வியின் மூலமே நாம் மனிதர்களை அடையாளம் காண முடியும்.  யார் உண்மையான நண்பர்கள் என்பதை தோல்வி நமக்கு காதுகளில் வந்து கிசுகிசுத்துவிடுகிறது. வெற்றியடைகிறபோது பலரும் அதைச் சொந்தம் கொண்டாட போட்டிபோட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். தோல்வியில் உடையும்போது தாங்கிப் பிடிக்க வருபவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள். அவர்களே நம்பகத் தன்மை வாய்ந்தவர்கள்.  

தோல்வி நம் பலவீனங்களை நமக்கு உணர்த்துகிறது. அந்த நொடியில் நம்முடன் இணைந்திருக்க விரும்புகிறவர்கள் மேன்மையானவர்கள். வறட்சி வருகிறபோது வாழுகிற மரங்களே ஜீவ மரங்கள்.  மழை பெய்யாத போதும் ஓடுகிற நதிகளே ஜீவ நதிகள்.  தோல்வி வரும்போது துவளாதே என்று தோளில் தட்டித் தருபவர்களே ஜீவாத்மாக்கள்.  

வெற்றி அதீத நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தோல்வி தாக்குப் பிடிக்கும் சக்தியைத் தருகிறது.  வழக்கமான முறையில் வெற்றி பெறுவதைவிட வித்தியாசமான செயலில் தோல்வியுறுவது மகத்தானது. எல்லாரும் சென்ற பாதையில் சென்று  இலக்கையடைவதை விட நாமே ஒரு பாதையை உருவாக்க காயப்படுவது சிறந்தது.  அதன் மூலம் வேறொருவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் உருவாக்குகிறோம் என்கிற திருப்தி கட்டாயம் ஏற்படும்.

ஆப்ரகாம் லிங்கன் மகனின் ஆசிரியருக்கு  எழுதிய கடிதத்தில் எதைப் போதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.  ஏமாற்றுவதைவிட தோற்பது கெளரவமானது என்றும், தோற்கும்போது எப்படி கம்பீரமாக நடந்துகொள்வது என்றும் போதிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார்.  எல்லாத் தோல்விகளும் அற்பமானவையல்ல.  மகத்தான லட்சியத்திற்காக போராடித் தோல்வியடைவது சாதாரண சாதனையைச் செய்வதைவிட மேம்பட்டது.  

வெற்றியே பெறாதவர்களின் தோல்வியைவிட, தோல்வியே பெறாதவர்களின் வெற்றி ஆபத்தானது. அவர்கள் அதுவரை பெற்ற எல்லாவற்றையும் ஒரே தோல்வியில் இழந்துவிடப் போகிறார்கள் என்பது உண்மை. இனி நாம் தோல்வியே அடையமாட்டோம் என்கிற மமதையில் அவர்கள் ஏற்படுத்தும் அழிவுகள் ஏராளம். அப்படிப்பட்ட பலரை நாம் சரித்திரத்தில் சந்தித்திருக்கிறோம்.  

தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்கள் முதல் முறை பெற்ற வெற்றியின் அனுபவத்தை ஒற்றி எடுத்து அடுத்த முயற்சியில் இறங்கக் கூடாது. வித்தியாசமாக முயல்பவர்கள் மட்டுமே தலைவர்களாக தலைநிமிர்வார்கள். ஒரே உத்தியை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் எதிரிகளும் எச்சரிக்கையடைந்துவிடுவார்கள்.  

சின்னச் சின்னச் தோல்விகளுக்குப் பின் பெரிய வெற்றியைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்.  எனவே தோல்வியில் கலங்காமல் தொடர்ந்து செல்கிற மனப்பான்மை அவசியம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் படித்து முடித்ததும் பல்வேறு பணிகளுக்கு முயற்சி செய்தார்.   முதலில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மனுபோட்டார்.  அவருடைய ஒட்டுமொத்த தகுதியறிக்கை வசீகரமாக இருந்தது.  ஆனால் அவரோ, விலுவிலுவென்று சதைப்பிடிப்பின்றி இருப்பார்.  

பொதுவாகவே ஆளுமை என்றால் அது உடலைப் பொறுத்தது என்கிற எண்ணம் பலருக்கு இருக்கிறது.  அவர் சான்றிதழ்களைச் சரி பார்த்த தலைமையிடம் நேர் காண்பதற்காக அந்த மாவட்ட கிளையின் அதிகாரி ஒருவரை அனுப்பிவைத்தார்.

வீட்டில் வேட்டியோடும், பனியனோடும் இருந்த அவர் வந்திருந்த அதிகாரியை வரவழைத்து அமரச் செய்துவிட்டு அவசரஅவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டுவந்தார். அவர் உடலமைப்பைப் பார்த்த அந்த அதிகாரி, பேருக்கு இரண்டு கேள்வி கேட்டுவிட்டுச் சென்றார்.  அவர் அனுப்பிய அறிக்கை சாதகமாக இல்லாத காரணத்தால் என் நண்பருக்கு அந்த நிறுவனத்தில் பணி கிடைக்கவில்லை.  

முதல் அனுபவமே தோல்வியாக முடிந்துவிட்டதே என எண்ணிய அவர் கொஞ்சம் மனமுடைந்துபோனார்.  நான் அவரிடம் ஆறுதல் சொற்களை அள்ளி வீசினேன்.  அவருடைய உடலைத் தேற்றும்படி கூறினேன்.  அவரும் உடற்பயிற்சிகள் செய்யவும், சத்தான உணவை உட்கொள்ளவும் தொடங்கினார்.

உடலில் பொலிவு சேரச் சேர அவருடைய தன்னம்பிக்கையும் அதிகரித்தது.

அதற்குப் பிறகு பல போட்டித் தேர்வுகளை எழுதி இன்று டெல்லியில் உயர்ந்த அரசுப்பணியில் உட்கார்ந்திருக்கிறார். சில நேரங்களில் நாம் பெறுகிற தோல்விகள் பெரிய வெற்றிக்காக என்று கருதிக்கொள்வது அவசியம்.  

குடிமைப்பணித் தேர்வுகளில் பல தேர்வர்கள் முதல்நிலைத் தேர்வில் இரண்டு மூன்று முறை தகுதி பெறாமல் இருந்து விடுவதுண்டு.  ஆனால், அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு எங்கே தவறினோம், எந்த இடத்தில் தயாரிப்பு அவசியம் என பரிசீலித்து தங்களைப் பழுதுபார்த்துக் கொண்டு முன்னேறுகிறவர்கள் முதல் 10 இடங்களைப் பிடிப்பதும் உண்டு.  தோல்வி தருகிற படிப்பினையை கூர்ந்து கவனிப்பது அவசியம்.  

இளம் வயதிலேயே தோல்விகளைச் சந்தித்துப் பழகுவது உணர்ச்சி மேலாண்மையை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறையாகும்.

விளையாட்டுக்களில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து கைகுலுக்க வேண்டும்.  விளையாட்டில் பெறுகிற வெற்றியை விட விளையாட்டுப் பெருந்தன்மை மிகவும் முக்கியம். வெற்றி பெற்றவர்களும் எக்காளம் போடுவதைவிட்டு தோல்வியுற்றவர்களிடம், "நீங்கள் நன்றாக விளையாடினீர்கள்'' என்று குறிப்பிடவேண்டும்.  இதுபோன்ற பண்புகள் ஒருவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றன.  

சிலர் குழந்தைகளோடு விளையாடும்போது அவை மகிழ வேண்டும் என்பதற்காக தோற்றுப்போவார்கள். இது அந்தக் குழந்தைக்கு தன்முனைப்பை வலுப்படுத்திவிடும்.  நாம் எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். பிறகு எங்கு சென்றாலும் தோற்றால் அழுதுகொண்டு வீட்டிற்கு வரும்.  சில போட்டிகளில் தோற்றால் அந்தக் குழந்தைக்கு பெற்றோர்கள் பரிசு வாங்கித் தருவதுண்டு. இவையெல்லாம் ஒரு குழந்தையை நோஞ்சானாக்கும் நடவடிக்கைகளாகும். பெற்றோர்கள் குழந்தைகளோடு விளையாடும்போது சில நேரங்களில் தோற்பதும் தேவை, அப்போதுதான் குழந்தைக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.  ஆனால் எல்லா நேரங்களிலும் தோற்று குழந்தைக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவது அவர்கள் எதிர்காலத்தை மழுங்கடித்துவிடும்.  

தோல்வியையே சந்திக்காத சிலர் முடிவெடுக்காத முன்ஜாக்கிரதைப் பேர்வழிகளாக  மாறிவிடுவார்கள்.  ஒருவேளை நாம் முடிவெடுத்துத் தோற்றுவிட்டால் என்ன செய்வது என பயந்து அடுத்தவர்களிடம் அந்தப் பொறுப்பை தள்ளிவிடுவார்கள்.  சட்டை எடுப்பதற்குக்கூட வேறொருவர் துணை அவர்களுக்கு வேண்டும். மற்றவர்கள் முடிவெடுத்தால் அதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக அவர்களைப் பற்றி புகார் சொல்லி மகிழ்ச்சியடைவார்கள்.  இப்படிப்பட்ட மனிதர்கள் சில நேரங்களில் உயர்ந்த பதவிகளில் இருக்கும்போது அந்த நிறுவனமே நிலைகுலைந்து போய்விடும்.  எல்லா முடிவுகளும் தேங்கிக் கிடக்கும். கோப்புகள் ஆயிரக்கணக்கில் குவியும். அவர்களோ வெளிவட்டாரத்திற்குத் தெரியும் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டு சுறுசுறுப்பான பேர்வழியாக காட்டிக் கொள்வார்கள்.  குளிக்காமல் நறுமண திரவம் பூசிக்கொள்வதைப் போல அவர்கள் செயல்பாடுகள் இருக்கும்.  

தோல்விகள் கேவலமானவையல்ல என்கிற உணர்வு சின்ன வயதிலிருந்தே ஊட்டப்பட்டால் நாம் பல தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.  சின்ன வயதில் தேர்வுத்தாளைத் திருத்துகிறபோது தன்னுடைய சிவப்புப் பேனாவை தவறுகளை அடிக்கோடிடுவதற்காகப் பயன்படுத்தாமல் நல்ல விடைகளையும், தகவல்களையும் பிரதானப்படுத்த பயன்படுத்தியதாக "என் சிவப்புப் பேனா' என்கிற புத்தகத்தில் ஆசிரியராக இருந்த மாடசாமி எழுதுகிறார். 

நாம் ஒவ்வொரு தோல்வி ஏற்படுகிறபோதும் அதை ஏற்றுக்கொள்ளவும் அதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளவும் பழக வேண்டும்.  மிகச் சிறந்த மனிதர்களே தோல்வி ஏற்படுகிறபோது கலங்கி விடுகிறார்கள். காரணம் அவர்களுடைய உணர்ச்சி மேலாண்மைக் குறைவு.

தோல்வி பெறுவதும் வாழ்க்கையில் ஓர் அம்சம்.  நம்மைவிடத் தகுதியானவர்கள் பெறுகிற வெற்றியை நாம் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே உச்சபட்சக் கல்வியாக இருக்கும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com