வார்தா புயலில் வாக்கிங் போனவர்கள்!

கடல்சார் பொறியியல் பேராசிரியர் தனது ஐபேடில் காட்டிய படங்களில் என்னதான் இருந்தன?
வார்தா புயலில் வாக்கிங் போனவர்கள்!

உன்னோடு போட்டிபோடு! - 7

கடல்சார் பொறியியல் பேராசிரியர் தனது ஐபேடில் காட்டிய படங்களில் என்னதான் இருந்தன?
முதல் படத்தில் ஒரு துறைமுகம்... அதன் கரையில், சூறாவளி அலைகளால் பந்தாடப்படும் ஒரு பழையகால மரக்கப்பல்... 
அடுத்த படத்தில், அந்தக் கப்பலுக்கு மேல் பறக்கும் ஒரு ஹெலிகாப்டர்.
மூன்றாவது படத்தில், அதிலிருந்து போடப்படும் சில குண்டுகள். 
நான்காவது படத்தில் அமைதியான கடலும், அதில் அழகான மரக்கப்பலும்.
அந்தப் படங்களைக் காட்டிப் புன்னகையோடு எங்களை அவர் பார்க்க, நாங்கள் ஒன்றும் புரியாமல் அவர் முகத்தைப்பார்த்தோம். "இது ஜப்பான்நாட்டுத் துறைமுகம்தானே?'' என்று அந்த ஹெட்போன் பாட்டி கேட்க, "ஆமா பாட்டி... அவா கொடி அந்தத்துறைமுகத்துல பறக்கிறது பாரு'' என்று அந்தப்பாட்டியின் பேத்தி சொல்ல, அந்தப் பேத்தியையும் பாட்டியையும் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெயகாந்தனின் "யுகசந்தி' கதையில் வரும் பாட்டி போலவும், சுஜாதாவின் விஞ்ஞானக்கதைகளில் வரும் பேத்தி போலவும் அவர்கள் எனக்குத் தோன்றினார்கள்.
 இப்போது பேராசிரியர் தொடங்கினார். "இந்த மரக்கப்பல் முழுவதும் மரத்தாலேயே செய்யப்பட்டது'' என்று அவர் சொல்லத் தொடங்க, "என்ன சார் மரக்கப்பல மரத்துல செய்யாம, மசால் வடையிலயா செய்வாங்க?'' என்று அந்த மீசைக்காரர் கேட்க, "அதில்லைங்க. இது முழுவதும் மரத்தால் செய்யப்பட்டது. நம் நாட்டில் கேரள மாநிலத்தில்...'' உடனே நான் சட்டென்று, "அவர் சொல்கிற மரக்கப்பலுக்கு அர்த்தம் தெரியுமா? மரம் தவிர வேறு எந்த உலோகமும் இதில் பயன்படுத்தப்படவில்லை. ஆணி, இரும்பு, தகரம் போன்று எதுவுமில்லாமல் முழு மரத்தைக் குடைந்து அதில் சில பகுதிகள் பொருத்தப் பெற்றிருக்கும். சரிதானே சார்?'' என்று நான் கேட்டேன்.
"எக்ஸாக்ட்லி. மிகச் சரியாகச் சொன்னீர்கள்'' என்று அவர் எனக்குக் கை கொடுத்தார். "என்ன சார் ரெண்டு பேரும் கதை விடுறீங்க? ஒரு போட்டாவ செவத்துல மாட்டணும்னா கூட ஆணியிலதான் தொங்க விடணும், நீங்க என்னடான்னா, ஆணியே புடுங்க வேணாம்னு சொல்றீங்களே?'' என்று அவர் கேலியாகக் கேட்டார். கூட வந்தவர்களும், "அதான?'' என்றார்கள்.
 அப்போது அங்கிருந்த மீனவர் ஒருவர் வந்து, "ஐயா சொல்றது சரிதான். சரியான மரத்த தேர்ந்தெடுத்து, அதன் நடுப்பகுதிய அப்பிடியே கொடஞ்சு எடுத்தா மெதக்குற தோணி வந்துரும். கட்டைகளைப் பொருத்துறப்ப, ஒரு கட்டையோட துவாரத்துல இன்னொரு கூர்மையான முனைய சுத்தி மரச்சக்கைய வச்சு இறுக்குனா... எந்தப் புயல்லயும் ஆடாது, அசையாது. இப்படிப்பட்ட மரக்கப்பல்களை ஆதிகாலத்துல செஞ்சிருக்காங்க. இப்படிப்பட்ட தொழில்முறை இப்போதும் கேரளாவில் வழக்கத்திலுள்ளது'' என்று விளக்கிச் சொன்னார்.
"நான்கூட ஒரு கதைல படிச்சிருக்கேன். கடலுக்கு நடுவுல காந்த மலை (Magnetic Mountain) இருக்குமாம். அதுக கிட்ட போற கப்பல்கள்ல இருக்கக்கூடிய ஸ்குரூவ லூஸ் பண்ணி இரும்ப இழுத்து அத மோத வச்சிருமாம்'' என்று அந்தப்பேத்தியும் தன் பங்குக்கு ஒன்று சொன்னது.
"இப்ப எல்லாரும் சேர்ந்து என்ன தான்னய்யா சொல்ல வர்றீங்க?'' என்று சிலர் கோபமாகக் கேட்க, கடல்சார் பொறியியற்பேராசிரியர் தொண்டையைச் செறுமிக்கொண்டு சொல்லத் தொடங்கினார்.
"ஐம்பதாண்டுகளுக்கு முன்னால கேரளாவுல இந்த மாதிரி செய்யப்படுற தொழில்நுட்பத்தைக் கேள்விப்பட்டு ஜப்பானிய அரசாங்கம், கேரளாவிலிருந்து இந்த மாதிரி ஒரு மாடல் மரக்கப்பலை வாங்க முடிவு செய்தது. அந்தக் கப்பலை இயக்கும் முறையை ஜப்பானியர்களுக்குக் கற்றுத் தர நம்மவர்கள் சிலபேரும் அதில் பயணம் செய்தார்களாம். ஜப்பான் துறைமுகத்திற்கு அருகில் வந்தபோது பெரும் சூறாவளியும் புயலும் ஏற்பட்டது. மரக்கப்பலை துறைமுகக் கடலலைகள் பேயாட்டம் ஆட வைத்தன. கப்பலிலிருந்தவர்கள் பயந்துபோனார்கள். பாடுபட்டுக் கொண்டு வந்த  கப்பலும்போய், போனால் திரும்பி வராத உயிரும் போய்விட்டால் என்ன செய்வது? என்று பயந்துகொண்டிருந்தபோது, உடன்வந்த ஜப்பானியக்கப்பல் கேப்டன், நம்மவர்களைப்பார்த்துக் கவலைப்படவேண்டாம். இந்தக்கடலலைகளை அடக்கிவிடலாம். என்று கம்பீரமாகச்சொன்னாராம்'' என்று பேராசிரியர் சொல்லிக் கொண்டு வந்தபோது,

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்
அலைகள் ஓய்வதில்லை

அப்பிடின்னு  பாடுனது பொய்யா, அலைகள் ஓய்வதில்லைன்னு நம்ம பாரதிராஜா படம் எடுத்தது பொய்யா?'' என்று சிலர் கேட்க, "பொறுங்கடா'' என்று நெருப்புடா ஸ்டைலில் சொன்ன ஹெட்போன் பாட்டி, "வார்தா புயல்ல வாக்கிங் போனவிங்க மாதிரி கேள்வியா கேட்டுக்கிட்டு... நீங்க சொல்லுங்க சார்... அந்தக் கேப்டன் என்ன சொன்னார்?'' என்றதும், "மகிழ்ச்சி'' என்று தொடங்கிய பேராசிரியர், மீண்டும் விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
"அலையை அடக்குவதாகச் சொன்ன அந்தக் கேப்டன் தலைமை அலுவலகத்திற்குத் தகவல் சொல்ல, சட்டென்று ஆகாயத்தில் சில ஹெலிகாப்டர்கள் பறந்து வந்து அந்த மரக்கப்பலைச் சுற்றி அரை கி.மீ.க்கு நீர்க்குண்டுகளைப் பொழிய, கடலுக்குள் போன அந்தக் குண்டுகள், அலைகளை உள்ளிழுக்க அந்த இடத்தில் கடல், அலைகளற்று அமைதியானதாம். இராமாயணத்தில் இராமன் அம்பினால் மட்டுமில்லை, அறிவியலாலும் இதைச் சாதிக்கலாம்'' என்று அவர் பெருமையாகச் சொல்ல, எல்லாரும் மீண்டும் அவரது ஐபேடை வாங்கிப் பார்த்தோம். 
"விஞ்ஞானிகள் நெனச்சா, அலைய அடக்குறது மட்டுமில்ல... கடல் தண்ணிய கூட வத்த வச்சுடுவாங்க போலிருக்கே'' என்று ஆச்சர்யத்தோடு ஒருவர் சொல்ல, "இது உங்க தமிழ் இலக்கியத்துல முந்தியே இருக்குன்னு சொல்லிருங்களேன்யா'' என்று அந்த மீசைக்காரர் கேள்வியை விடாமல் கேட்க, "கடலை வற்றச் செய்த படலம், ஆகாயத்தில் தொங்கும் நகரங்களை அழித்த படலம் என்று ஆயிரம் செய்திகள் தமிழிலக்கியங்களிலுண்டு'' என்று நான் பெருமையாகப் பட்டியலிடத் தொடங்க, ஹெட்போன் பாட்டி சந்தோஷத்தோடு என்னுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டது.
"வற்றிய கடலாம்.. தொங்கும் நகரங்களாம்.. இதென்ன ஹாரிபாட்டர் ஏழாவது பாகமா?'' என்று அந்தப் பேத்தி திகைக்க..
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com