கண்டதும் கேட்டதும் 5: பி.லெனின்

என் தாத்தா அகர்சிங்  சென்னை பாரிமுனையில் உள்ள சௌகார்பேட்டை மார்வாடிகளைப்  பார்க்க வரும்போது என் பெரியப்பாவும் கூடவே வருவார்.
கண்டதும் கேட்டதும் 5: பி.லெனின்

வண்ணங்கள்  வேற்றுமைப்பட்டால் - அதில் 
மானுடர் வேற்றுமை இல்லை. 
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
 யாவர்க்கும் ஒன்று எனல் காணீர்.
-மகாகவி பாரதியார்
என் பெரியப்பா ஹுக்கும் சிங்,  என் தந்தை பீம்சிங் இருவரின் திருமணத்தைப் பற்றி பார்ப்போமா!

என் தாத்தா அகர்சிங்  சென்னை பாரிமுனையில் உள்ள சௌகார்பேட்டை மார்வாடிகளைப்  பார்க்க வரும்போது என் பெரியப்பாவும் கூடவே வருவார்.

மார்வாடிகளுக்குச் சொந்தமான கோசாலை (பசுக்கள் நிரம்பிய இடம்) தாக்கர் சத்திரத்தில் இப்போதும் உள்ளது. அங்கேயிருந்து பாலை வாங்கினார்கள். அந்தக் காலத்தில் அடுப்புக்கரி வியாபாரம் நன்றாக நடந்ததால் அந்த வியாபாரத்தையும் தொடங்கினார்கள்.

தாக்கர் சத்திரம் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கும், பெரம்பூருக்கும் இடையே உள்ளது.

பெரியப்பாவும் தாத்தாவும் இன்னும் சில பொந்தில் வகுப்பைச் சேர்ந்தவர்களும் சைக்கிளில் பாலையும் கரிமூட்டைகளையும் ஏற்றிக் கொண்டு பாரிமுனை சௌகார்பேட்டை மார்வாடிகளுக்கு விநியோகம் செய்தார்கள்.

அவர்கள் செவ்வனே அந்த வேலையைச் செய்வதைக் கண்ட ராகவாச்சாரியார் என் அம்மா சோனா, பெரியம்மாக்கள் ஜெயலட்சுமி, பத்மாவதி, லெட்சுமி இவர்களுக்கு வைஷ்ணவ சாதியில் மாப்பிள்ளை கிடைக்காததால் ஏற்கெனவே நான் எழுதியதுபோல் என் அம்மாவின் அம்மா (அவ்வா) காமாட்சிபாய் மராட்டிய வகுப்பைச் சேர்ந்தவர்.

நல்ல உழைப்பாளியான என் பெரியப்பாவுக்கும் தனது முதல் மகள் ஜெயம்மாளுக்கும் ராகவாச்சாரி மணம் முடித்து வைத்தார். என் தாய் மாமன் கிருஷ்ணனுக்கு (இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு) அதேபோல் முதலியார் வகுப்பைச் சேர்ந்த அம்மாவுக்கும் வைஷ்ணவ அப்பாவுக்கும் பிறந்த ரங்கநாயகி (எ) ரங்கம்மாளை கலப்புத் திருமணம் செய்து வைத்தார்.

ஏன் இதையெல்லாம் எழுத வேண்டும்?  என்ற கேள்வி உங்களுக்கு ஏற்படுவது இயல்பே!

அந்த காலகட்டத்திலேயே பலருடைய குடும்பங்களில் சாதி மறுப்பு திருமணங்களும் மதம் மாறிய திருமணங்களும் நடந்தன என்பதைச் சொல்லவே என் குடும்ப வரலாற்றை எழுதினேன்.

கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள், அவர்களின் வாரிசுகள் மிக நேர்த்தியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

இப்போது வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களை காதலித்து, தோல்வி அடைந்துவிட்டால் பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கொலை செய்வது அல்லது தற்கொலை செய்துகொள்வது போன்றவை அதிகமாகிக்கொண்டே வருகிறது.

ஜாதி, மத பேதம் அதிகமாக இருந்த அந்த காலகட்டத்தில் கலப்புத் திருமணங்கள் வெகுவிமர்சையாக நடந்தேறின. போராட்டக்களமாக வாழ்க்கை இருந்தபோதும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம்கொடாமல் நேர்மறையாக வாழ்ந்தார்கள்.

இன்றைய இளைய சமுதாயமும் அவர்களின் நடுத்தர வயது பெற்றோர்களும் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை பாடத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் அவா.

காதல் என்ற பெயராலோ வேறெதற்காகவோ உயிர்ப்பலிகள் வேண்டாம். இந்தக் கருத்தைப் பிரதிபலிப்பதுபோல் நான் இயக்கிய "சொல்லத்துடிக்குது மனசு' என்ற படத்தின் பாடல் ஒன்றின் வரிகள்:
"சீதையை ராவணன் தூக்கிட்டு போனது
அது ஒரு காலமென்ன!
ராவணன் பேரில ஆசப்பட்டு
சீதைகள் இப்போது போவதென்ன!
அட போனா போகட்டு(ம்)
ஆனா ஆகட்டு(ம்)
வேணா கவலைகள் வீணா!
சீதா இல்லாட்டி கீதா இல்லாட்டி ராதா இங்கில்லையோ!'
"ராவணன் பேரில ஆசப்பட்டு
சீதைகள் இப்போது போவதென்ன' 
- என்ற வரிகளை அப்போதைய சென்சார் நீக்கிவிடும்படி சொன்னது கூடுதல் தகவல்.

என் தந்தை பீம்சிங் ஆறாவது வகுப்புவரை திருப்பதியில் படித்துவிட்டு, சென்னைக்கு தன் தமையனார் ஹுக்கும் சிங்குடன் புரசைவாக்கத்தில் உள்ள முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பைத் தொடர்ந்து இப்போதைய ப்ளஸ் 2 அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து முடித்தார்.  என்னுடைய பெரியப்பாவின் மனைவி ஜெயம்மாளின் சகோதரி சோனாம்பாளை திருமணம் செய்து கொண்டார்.

என் தந்தை சிறுவயது முதலே காந்தியவாதி.  அந்தக் காலகட்டத்தில் சர்காவில் (ராட்டினம்) நூலை நூற்று காதிக்கடையில் கொடுத்து இரண்டு வேட்டியும் சட்டையும் வாங்கியதாகக் கூறுவார். என் அம்மாவுக்கு காதியில் கல்யாணப் புடவை எடுத்து திருமணம் நடந்ததாக என் அம்மாவும் சொன்னார்.  அந்தத் திருமண போட்டோவை பல நாள்கள் நான் வைத்திருந்தேன்.  ஒருநாள் காணாமல் போய்விட்டது. அந்த நாளிலிருந்து இதுவரை அந்தப் புகைப்படம் காணாமல் போனது குறித்து வருத்தம் உள்ளது.

திருமணத்தை நடத்திய என் தாய்மாமன் கிருஷ்ணன், அவருடைய சகோதரி என் தாய் சோனாம்பாளுக்கு கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தன மலையை ஒரு கையில் தாங்கி நிற்பதுபோல் வெள்ளியினால் ஆன ஒரு படத்தைப் பரிசளித்து, ""சோனா இந்தப் படத்தை ஏன் உனக்குக் கொடுக்கிறேன் தெரியுமா? எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் கிருஷ்ணன் இந்த மலையைத் தாங்குவதுபோல் நீயும் தாங்க வேண்டும்''  என்று அவர் சொன்னதை என் தாய் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்தி அன்றும் நினைவுகூர்வார்.  கிருஷ்ணன் மாமாவும் இந்தச் சம்பவத்தை என்னிடம் கூறியிருக்கிறார்.

காலம் போகப் போக அவர் அம்மாவுக்குச் சொன்ன மற்றொரு வாக்கியம். வாக்கியம் என்று சொல்வதைவிட தீர்க்கதரிசனம் என்று சொல்லலாம். ""சோனா நான், உன் சகோதர சகோதரிகள் எல்லாம் உனக்கு முன்பாக இறந்து போய்விடுவோம். நீ கடைசியாக இறப்பாய்''. அவரின் வாக்கு பலித்தது. என் தாய் கடைசியாக ஆறு வருடங்களுக்கு முன்பு மறைந்தார்கள். தந்தையின் மறைவுக்குப் பின் ஒரு தாய் மூலமாக அவருடைய மக்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். பல வீடுகளில் நான் பார்த்த நிஜம்.

இந்த யதார்த்தத்தைச் சித்திரிப்பது போன்ற ஒரு பாடல், என் தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த, "பார் மகளே பார்' திரைப்படத்தில் இடம்பெற்றது.
"தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை.
தாயின் வாழ்வு மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை!'
பீம்சிங்கை என் தாய்மாமன் கிருஷ்ணன் தன்னுடன் உதவி இயக்குநராக, பஞ்சுவிடம் எடிட்டராக, லேபில் (பிலிம் கழுவும் இடம்)  டெக்னிஷியனாகப் பணிபுரிய வழி செய்தார்.

பீம்சிங் "பூமாலை', "ரத்னகுமார்',  "பணம்' போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராக, உதவி எடிட்டராகப் பணிபுரிந்து கொண்டே, என் தாத்தாவின் முதலாளியான அகர்சந்தை, தாத்தா அகர்சிங்குடன் போய் பார்த்து வந்து கொண்டிருந்தார். திருப்பதியில் படித்ததால் தெலுங்கும், சென்னையில் படித்ததால் தமிழும், மார்வாடிகள் பழக்கம் இருந்ததால் இந்தியும் நன்றாகவே பேசுவார்.

அந்த காலகட்டத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் வெளிவந்த "ஆந்திர பிரபா' என்ற பத்திரிகையில் உதவி எடிட்டராகப் பணிபுரிந்தார் என் தந்தை. நெல்லூரைச் சேர்ந்த தெலுங்கு நடிகர் நாகபூஷணம். (தமிழில் எம்.ஆர்.ராதா ஏற்று நடித்த பாத்திரங்களை தெலுங்கில் நடித்தவர்) எழுதிய தெலுங்கு நாடகங்களில் நடித்து, இயக்கிய அனுபவத்தால் சுலபமாக சினிமாவில் காலூன்றவும் முடிந்தது என்று என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்குப் பாடும் திறனும், நடிப்பும் பள்ளிக்கூட நாடகங்களில் நடித்ததால் வந்தது.

"ரத்னகுமார்' திரைப்படத்தில்  பானுமதிக்கு தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிக்கொடுத்தபோது, ""பீம் வருங்காலத்தில் நீ  நல்ல திரைக்கதை ஆசிரியராகவும், டைரக்டராகவும் வருவாய்'' என்று பானுமதி ஆசிர்வதித்திருக்கிறார்கள்.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com