சும்மா... அதிருதுல்ல...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

"விருமாண்டி'  படத்தைப் பலதடவை பார்த்திருப்பதாகச் சொல்லி ஓர் இளைஞர் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கப் போவதைப் போல எழுந்தார்.  
சும்மா... அதிருதுல்ல...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 31
"விருமாண்டி'  படத்தைப் பலதடவை பார்த்திருப்பதாகச் சொல்லி ஓர் இளைஞர் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கப் போவதைப் போல எழுந்தார்.  

"உட்காருங்க, உட்காருங்க'' என்று அவரை நான் உட்கார வைத்து விட்டு, "அந்தப் படத்திற்காக ஜல்லிக்கட்டைப் பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்திருப்பார் அவர். 

மாடு வளர்ப்பவர்கள்,  மாடு பிடிப்பவர்கள், ஜல்லிக்கட்டின் வாடிவாசல், என்பதோடு, நின்னுகுத்திக் காளை, மயிலக்காளை, மச்சக் காளை என்று ஜல்லிக்கட்டு மாட்டு வகைகளைப் பற்றியும் பலமான கள ஆய்வு செய்த பிறகுதான் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்ஷனும் செய்யத்தொடங்கினார்'' என்றேன் நான். 

"இதெல்லாம் சரிதான், ஆனா கேள்வி கேட்ட நக்கீரரை நம்ம சிவபெருமான் நெத்திக் கண்ணுல எரிச்சது ஏன்னு இன்னும் சொல்லவே இல்லையே?''  என்று
மீசைக்காரர் மீண்டும் தொடங்க,
"ஆரம்பிச்சுட்டாருய்யா ஆரம்பிச்சுட்டாருய்யா'' என்று ஒருவர் எழுந்து வடிவேல் பாணியில் நடித்துக் காண்பித்தார்.

அப்போது ஆகாயத்தில் ஒரு எரி நட்சத்திரம் கிழக்கில் இருந்து மேற்கில் சீறிப்பாய்ந்தது.

"அடடே!, என்ன அழகு பார்த்தீர்களா? எரி நட்சத்திரம் ஆகாய மத்தாப்புப் போல ஜொலிக்கிறதே'' என்று ஒருவர் சொன்னார்.

அப்போது அருகில் இருந்த கடல்சார் பொறியியல் பேராசிரியர், "ஐயா, அது எரி நட்சத்திரம் இல்லை, விண்ணில் இருந்து வருகின்ற எரிகற்கள் (Meteor).

சந்திரன் அல்லது பூமியினுடைய புவிஈர்ப்பு விசையின் வட்டச்சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக்கும் இதுபோன்ற பொருட்கள், பெருங்கற்கள், பூமியின் புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும்போது பூமியை நோக்கி வரும் வேகத்தில் எரிந்து போய் விடுகின்றன. இதைத்தான் நாம் எரி நட்சத்திரம் என்கிறோம்''  என விளக்கம் கொடுத்தார். 

உடனே, தமிழ்மணியும் "கேட்டீங்களா, அறிவியல் செய்தியை வகுப்புல சொல்லிக் கொடுத்தா மாணவர்களுக்குப் புரிய மாட்டேங்குது.  அத சாய்ஸ்லயும்
விட்டுறாங்க, ஆனா விஞ்ஞானத்த வாசிக்கிறவங்களக் காட்டிலும், நேசிக்கிறவங்க சொல்றப்பதான் அந்த  விஷயங்கள் நம்மள யோசிக்க வைக்கிறது. மேலிருந்து வேகமாக வருகிற பொருள் மட்டுமில்ல, பூமியிலிருந்து நாம அனுப்புற ராக்கெட் போன்ற செயற்கைக்கோள்களும் பூமியின் புவிஈர்ப்பு விசையைக் கடக்கும் போது அதன் ஒரு பகுதி எரிந்து போவதைப் பார்த்திருக்கிறோம்'' என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் வைத்திருந்த குடுவைத் தண்ணீரை ஒரு மடக்குக் குடித்தார். 

"இன்னும் கேளுங்க, ஆற்றல், நிறை, ஒளியின் வேகம் இவற்றை அடிப்படையாக வைத்துதான் "ஜெர்மனியின்' இயற்பியல் விஞ்ஞானியாகிய "ஐன்ஸ்டீன்'  E= mc2    என விளக்கியிருக்கிறார்'. இதில் E-என்பது (ENERGY) ஆற்றல், M - என்பது நிறை (MASS) C  -என்பது ஒளியின் வேகம்.  நாம் பொதுவாக கார், ரயில், விமானம் போன்றவற்றைக் கண்ணால் பார்க்கிறோம், அதன் வேகத்தை உணர்கிறோம். ஆனால் ஒளியின் வேகத்தை நம்மால் உணர முடியாது, இந்த ஒளியின் வேகத்தை வைத்துக் கொண்டுதான் புவிஈர்ப்பு விசையின் தன்மையை "ஐன்ஸ்டீன்' விளக்கிக் காட்டியிருக்கிறார்'' என்று அவர் சொல்லச் சொல்ல எங்களோடு அமர்ந்திருந்த பெரியவர்கள் பலரும் அகில இந்திய வானொலியில் "மன்கி பாத்'  இந்திச் செய்தி கேட்பது போல அப்பாவியாய் உட்கார்ந்திருந்தார்கள். 

"எரி நட்சத்திரமுன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு இம்புட்டு விஞ்ஞானச் செய்தி பேசினாங்களே, இந்த விஞ்ஞானங்கள, விஞ்ஞானிகளப் பத்தி உங்க தமிழ்
இலக்கியத்துல ஒண்ணும் சொல்லலையா?'' என்று எப்போதும் போல நம் மீசைக்காரர் சற்றே கேலிக் குரலில் கேட்டார். 

"சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிவியல் அறிவோடுதான் இருந்திருக்கிறார்கள். அதிலும் "கணியன் பூங்குன்றன்' என்ற புலவரைப் பற்றிக்
கேள்விபட்டிருக்கிறீர்களா?''  என்று நான் கேட்க, 
"யாதும் ஊரே...  யாவரும் கேளிர்...'' என்று பாடல் குரல் ஒன்று செம்மொழி பாடல் போல் ஒலிக்க,
"யாதும் ஊரே... யாவரும் கேளிர் 
அன்பே எங்கள் உலக தத்துவம்'' என்ற "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படப் பாடல் வரியை  இளைஞர்கள் எதிர்பாட்டுப் பாடினார்கள். 

"நன்றி... நன்றி...'' என்று நான் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கணியன் பூங்குன்றன் எனும் புலவர் கவிதைகளைப் படைத்ததோடு காலத்தைக் கணிக்கும், நிமித்தகாரனாகவும்(சோதிடராக) இருந்திருக்கிறார் என்பதை அவர் பெயரைக் கொண்டே அறிகிறோம். அதனால் அக்காலத் தமிழர்களுக்கு வானியல் அறிவும், கோள்கள் குறித்த  தெளிவும் இருந்திருக்கின்றன என்பது ஆச்சரியமான செய்திதான்'' என்றேன் நான். 

உடனே, தமிழ்மணியும் "ஐயா, இன்றைக்கு இருக்கிற விஞ்ஞானிகளப் பத்தி அதிலேயும் குறிப்பா நான் சொன்ன "ஐன்ஸ்டீனைப் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த கவிதை ஒன்று உண்டு. கவிதையின் தலைப்பு:
E = MC2
He erased Hiroshima with a piece of chalk’
எனும் இந்தக் கவிதையை, 
E = MC2' என்று ஐன்ஸ்டீன் கரும்பலகையில் எழுதினான்,   ஹிரோஷிமா எனும் நகரம் அழிந்தது' என்று இன்றைக்கு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற
கலாப்பிரியா என்கிற புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது தெரியுமா?''  என்று கேட்டார்.  நானும் உடனே, "பார்த்தீர்களா,  இலக்கியம்
என்பது காலத்தின் கண்ணாடி என்பதற்கேற்ப நம் கவிஞர்களும் காலத்திற்கேற்ப கவிதை வடிவங்களைப் படைத்துத் தருகிறார்கள்'' என்றேன். 

இந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தமிழையா, "பொதுவாக நாம் தமிழ் இலக்கியங்களில் மரபு, சந்தம், பொருட்சுவை, பக்தி இவற்றை மட்டுமே
பார்த்து ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வகையில் ரசித்து விட்டுச் சென்று விடுகிறோம். நம் கடல்சார் பொறியியல் பேராசிரியரைப்போல, பொறியியல் படித்த தமிழ்மணி ஐயாவைப்போல, அறிவியல் அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களை நம்மோடு சேர்ந்து கற்றுத் தெளிந்தால், தங்களது அறிவியல்
நுண்ணோக்கியால் (MICROSCOPE) பார்த்து நமக்கும் புதிய செய்திகளை விளக்குவார்கள்.  நம் தமிழும் இன்னும் புது வண்ணத்தில் அல்லவா மிளிரும்?
அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் "வாழும் வள்ளுவம்' என்றொரு நூல் எழுதியுள்ளார். அறிவியல் அறிஞரான அவர் பார்வையில் வள்ளுவரின் குறட்பாக்கள் வைரச் சுடர்மணிகளாய் ஜொலிக்கின்றன''  என்று மகிழ்வோடு கூறினார். 

உடனே, ஹெட்போன் பாட்டி தன் பேத்தியிடம் "நோட் திஸ் புக் நேம்''.. . என்று சொல்லிவிட்டு, "ஐயா சொல்லுங்க வாழும்'' என்று கேட்டு நிறுத்த "வள்ளுவம்''
என்று முடித்தார் தமிழையா. 

"உண்மைதாங்க, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  "பெரியாழ்வாரின்' வளர்ப்பு மகளான சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளாகிய "ஆண்டாள்' பாடிய திருப்பாவைப்
பாடல்களை அறிவியல் கண்கொண்டு நோக்கினால் பல ஆச்சரியங்கள் நமக்குக் கிடைக்கும்.  உதாரணமாக, 
"புள்ளின் வாய் கீண்டானை  பொல்லா அரக்கனை' எனும் ஒன்பதாவது பாசுரத்தில் "வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்பதற்கான அறிவியல் பொருளை நாம் படித்துப் புரிந்து கொண்டாலே அதிர்ந்து போவோம்'"' என்று நான் சொன்னேன். 

"நீங்க சொல்கிற செய்திகளக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல'' என்று ஓர் இளைஞர் "சிவாஜி' பட "ரஜினி' மாதிரி ஆக்ஷனோடு கேட்டார். நானும் லேசாகச்
சிரித்தபடி, "இப்ப நீங்க கேட்ட இந்த அதிருதுல்ல கூட "ஆண்டாளுடைய  திருப்பாவையில' வருது தெரியுமா?''  என்று கேட்டேன். 

"அட நாராயணா, இது அந்த வசனத்த எழுதுன எழுத்தாளருக்குத் தெரியுமா?'' என்று அந்த இளைஞர் என்னிடம் வியப்போடு கேட்டார். 

"நிச்சயமாகத் தெரியும், அந்தப் படத்துக்கு வசனம் எழுதுனவரு யாரு தெரியுமா?''  என்று நான் கேட்க,
"சுஜாதா'' என்று மகிழ்ச்சியோடு விடை சொன்னது பேத்தி.
"ஆச்சரியமா இருக்கே, "அவள் ஒரு தொடர்கதையில' தொடங்கி, நடிகர் திலகம் சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், அஜித் வரைக்கும் கூட நடிச்ச அந்த சுஜாதான்கிற நடிகை இவ்வளவு பெரிய எழுத்தாளரா?''  என்று ஒருவர் ஆச்சரியப்பட்டார்.

"யோவ், அந்த சுஜாதா வேற. இந்த எழுத்தாளர் சுஜாதா ஆம்பளையா!.. அவர் பேரு கூட ராமராஜனோ, ரங்கராஜனோன்னு வரும்''  என்று மற்றொருவர் இழுக்க... 
"ரங்கராஜன்தான், ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் ஏற்கெனவே எழுத்துலகில் ரா.கி ரங்கராஜன்னு ஒருத்தர் இருந்ததால இவர் சுஜாதான்னு தன் மனைவியோட பேருல எழுத ஆரம்பிச்சாரு. எனக்கு நல்ல நண்பர் மட்டுமில்லை, குருவும் கூட. நான் ஒரு முறை  சென்னையில் அவரோட வீட்டுல அவர்ட்டப் பேசிக்கொண்டிருந்த போது "அதிருதுல்ல' என்ற வார்த்தை திருப்பாவையில்தானே வருகிறது? என்று கேட்டேன். அவர் மிக்கமகிழ்ச்சி அடைந்தவராக, "உண்மைதான் நீங்க ஒருத்தர்தான் இதைப்பத்தி என்கிட்ட கேட்டிருக்கிறீங்க, அந்தச் சொல் திருப்பாவையில எந்தப் பாட்டுல வரும் தெரியுமா? என்று அவருக்கே உரிய குறும்போடு  
என்னிடம்  கேட்டார்'' என்றேன்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com