8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு...பிளஸ் டூ மாணவரின் பிரமிக்கத் தக்க சாதனை!

அகில உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு டஜன் முதல் பரிசுகள்.  எல்லாமே புதிய ஆராய்ச்சிகளுக்காக.
8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு...பிளஸ் டூ மாணவரின் பிரமிக்கத் தக்க சாதனை!

அகில உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு டஜன் முதல் பரிசுகள்.  எல்லாமே புதிய ஆராய்ச்சிகளுக்காக. பதினெட்டு வயதுக்குக் கீழே உள்ளவர்கள் அதாவது கல்லூரியைக் கூட எட்டாத பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார் பிரசாந்த். 

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த அகில உலக அறிவியல் மற்றும் என்ஜினியரிங் கண்காட்சியில் கலந்துகொண்ட 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில், இந்த மே மாதம் முதல் பரிசான 8000 அமெரிக்க டாலர்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு வந்த சாதனையாளர் அவர்.  இதற்காக ஒரு கிரகத்துக்கு இவர் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்!  இது அங்கு வழக்கமாம். கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பரிசு பெற்றவர்கள் வரிசையில் பிரசாந்த் மூன்றாவது இந்தியர். 

அப்பா ரங்கநாதன் சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் ஆய்வுக் கழக விஞ்ஞானி.  பிரசாந்தின் கொள்ளுத்தாத்தா, சேலத்தை அடுத்த வாழப்பாடியில் விவசாயியாக இருந்தவர். அவருடைய ஜீன் கொஞ்சமாவது பிரசாந்துக்குள் இல்லாமல் போகுமா என்ன? 
எதற்காக இப்படி எட்டாயிரம் டாலர்களைத் தூக்கிப் பரிசாகக் கொடுத்தார்கள்? 
க்ளோர்பைரிஃபோஸ் எனப்படும் பூச்சிகொல்லி மருந்து மனித குலத்துக்கும் கால்நடைகளுக்கும் மிகக் கொடியது.  இது பூமியில் துளி அளவு இருந்தாலும் போதும், நிலத்தையும் பயிர்களையும் நாசமாக்கிவிடும்.  இந்தப் பூச்சிகொல்லி மருந்தை, வீடுகளில் கூட எலி - பெருச்சாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவார்களாம். இதில் டாக்ஸிக் ரசாயனம் மிகுதியாக இருக்கும்.  இந்த ரசாயனத்தின் சிறு துளி, கர்ப்பிணிப் பெண்ணைப் பாதித்தால் போதும், பிறக்கும் குழந்தைகள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் தாக்கப்படுவர்.  குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் இது பாதிக்கும்.  இந்தப் பூச்சிகொல்லி மருந்தை நிலத்தில் உபயோகிக்கத் தொடங்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகும், நிலத்தின் 13 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும். அதனால், நிலத்தில் மிச்சம் மீதி இருக்கும் இந்த மருந்தின் அபாயத்தை, நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் அகற்றியாக வேண்டும். அப்போதுதான் மனித குலத்தையும், கால்நடைகளையும் காக்க முடியும்.  ஆனால், சுற்றுச் சூழலுக்கு இசைந்த மாற்று ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்!  இதுதான் சவால்.  பிரசாந்தின் ஆராய்ச்சியில், நிலத்தில் உள்ள இந்த மீதி மருந்தின் பாதிப்பை அகற்ற, நிலத்தின் இயற்கையான பாக்டீரியாவை உபயோகித்தால் போதும்.  பூச்சி மருந்தின் தாக்கத்தை 90 சதவிகிதம் போக்கிவிடலாம்.  இதைச் செய்து காட்டியதால்தான் இந்த மே மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவருக்குப் பரிசு கிடைத்தது! 

கோதுமைக்கும் பார்லிக்கும் பயன்படும் உரங்களில் இரும்புச் சத்து, அயர்ன் ஆக்ஸைட் வடிவில் அதிகமாகவே இருந்தாலும், அதைத் தாவரங்கள் அல்லது பயிர்கள் எளிதாக உறிஞ்சிக் கொள்ள முடிவதில்லை.  ஏனென்றால்,  ஆக்ûஸட் நீரில் எளிதில் கரையாது.  பழக்கத்தில் உள்ள, இரும்புச் சத்து அளிக்கும் உரங்களின் விலை அதிகமாக இருக்கிறது.  அதன் காரணமாக, விவசாயிகள் வாங்க முடியாது என்பது மட்டுமல்ல, நிலத்துக்கும் அது தீமை விளைவிக்கிறது.

ஃபெர்ரோ  ஃப்ளூயிட்ஸ் கோதுமைப் பயிருக்கும், பார்லிக்கும் மாற்று நுண் இரும்புச்சத்தை அளிக்குமா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார் பிரசாந்த். 

அப்போதுதான் இந்தப் பயிர்கள் 20 முதல் 35 சதவிகிதம் அதிகமான உற்பத்தி தரும் என்பதைக் கண்டறிந்தார். இந்த உரம் 70 சதவிகிதம் விலை குறைவும் கூட.

அது மட்டுமல்ல, இதைப் பயன்படுத்தினால் நிலமும் பாதிக்கப்படாது.  இதற்குத்தான் இப்போது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார் பிரசாந்த்.   

இதற்கு முன்னாலேயே, சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தில் இந்த ஆண்டு அமெரிக்காவில் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.  ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற இருக்கும் லண்டன் யூத் இன்டர்நேஷனல் சயன்ஸ் விழாவில் பங்கு கொள்ள பிரசாந்துக்கு அழைப்பு வந்திருக்கிறது. 

இவர் ஏற்கெனவே பெற்ற பரிசுகள் ஏராளம்: ஐஐடி கௌஹாத்தியில் வருடாந்திர டெக்னோ-எக்ஸ்போவில் முதல் பரிசு. ரிக்கோ சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் பரிசு, பிலடெல்பியாவில் 2015 ஆம் ஆண்டு, வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூலில், உலகம் முழுவதிலிருந்தும் 12 குழுக்களாக நூற்றுக்கணக்கான பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்களிடையே ந்டந்த போட்டியில் பரிசு  என்று இவர் பரிசுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது! 
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com