ஒரு தேனான செய்தி!

கலப்படம் இல்லாத இயற்கையான பொருள்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
ஒரு தேனான செய்தி!

கலப்படம் இல்லாத இயற்கையான பொருள்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சர்க்கரைப் பாகு கலப்படம் இல்லாத சுத்தமான தேன், மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுவதால், தரத்தின் அடிப்படையில் அதிக விலை கொடுத்து வாங்கவும் நுகர்வோர் தயங்குவதில்லை. அந்த வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் தொழிலாக தேன் உற்பத்தி தொழில் மாறி வருகிறது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தேன் உற்பத்தி செய்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தொழிலாகவும் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வேளாண்மை பல்கலைக் கழம் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

"மலைத்தேனீ, இத்தாலிய தேனீ, அடுக்குத் தேனீ (இந்திய தேனீ), கொம்புத்தேனீ, கொசுத் தேனீ என 5 வகையான தேனீ இனங்கள் இந்தியாவில் உள்ளன. இதில், ஒவ்வொரு தேனீ உற்பத்தி செய்யும் தேனுக்கும் தனிச் சிறப்பு உள்ளது. தேன் உற்பத்தி மட்டுமின்றி, தேனடையில் உள்ள மெழுகு மற்றும் தேனீக்கள் விற்பனை மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும்'' என்கிறார் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள பன்னியாமலையைச் சேர்ந்த க.குணசேகரன்.

இதுதொடர்பாக அவர் நம்மிடம் பேசியதாவது:
"இளங்கலை சட்டம் பயின்றுள்ள நான், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இத்தொழிலைத் தொடங்கினேன். மதுரை வேளாண்மைக் கல்லூரியில் தேனீ வளர்ப்பு குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பின், தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒருநாள் பயிற்சியாக தேன் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதற்காக ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 25 தேன் பெட்டிகள் வைத்து, தேன் உற்பத்தியைத் தொடங்கலாம். மழை இருந்தால் அனைத்து வகையான தாவரங்களிலுமுள்ள பூக்கள் மட்டுமின்றி, இளந்தளிரிலும் தேன் அதிகமாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் வாரத்திற்கு ஒரு பெட்டியிலிருந்து 1.5 கிலோ தேன் எடுக்க முடியும்.

உள்ளூரில் வறட்சியான நேரத்தில், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட சுற்றுப்புற மாநிலங்களுக்கு பெட்டிகளை எடுத்துச் சென்று, தேன் உற்பத்தியைத் தொடரவும் வாய்ப்புள்ளது. கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யப்படுவதால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்க கூடிய தொழிலாக இது உள்ளது.

இத்தாலிய தேனீக்கள் மூலம் அதிக தேன் உற்பத்தி செய்ய முடியும். இந்த முறையில் வட இந்தியாவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கொசுத் தேனீக்கள் மூலம் குறைந்த அளவிலேயே தேன் கிடைக்கும். இதனால், இந்த வகை தேனீக்களை வளர்க்க யாரும் விரும்புவதில்லை. ஆனால், இந்த தேனில் அதிக மருத்துவ குணம் உள்ளதால், கிடைப்பதற்கரிய பொருளாக மாறி வருகிறது. விலையும் அடுக்குத் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனை விட 10 மடங்கு அதிகம்.

தேனீக்கள் உற்பத்தி மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். 3 தேன் அடை, 500 வேலைக்கார தேனீக்கள் மற்றும் ஒரு ராணி தேனீயுடன் கூடிய 1 பெட்டியை ரூ.2ஆயிரத்திற்கு விற்பனை செய்யலாம். தேன் அடையிலிருந்து கிடைக்கும் மெழுகு கிலோ ரூ.450க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேனீக்கள் வளர்க்கும் பகுதியில், அனைத்து வகையான பயிர்களிலும் (தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த செயற்கையினால்) அதிக மகசூலைப் பெற முடியும்'' என்றார்.
- ஆ.நங்கையார் மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com