வெற்றிக்கு வழி!

எம்.எஸ்.நாகராஜன், இன்று "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின்  சீனியர் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்.
வெற்றிக்கு வழி!

எம்.எஸ்.நாகராஜன், இன்று "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின்  சீனியர் ஸ்போர்ட்ஸ் மேனேஜர். 27 நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு விளையாட்டுப் பயிற்சி தரும் பணியின் மேலாளராக இருக்கிறார். 

சொன்னால், வியப்படைவீர்கள்! எம்.எஸ்.நாகராஜனுக்கு ஆரம்பத்தில் அரசுப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி கொடுப்பதில் உள்ள ஆர்வத்தின் காரணமாக, அரசுப் பணி என்று பாராமல், அந்த வேலையை விட்டு விலகியிருக்கிறார். 

சென்னை கிண்டியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்:
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.  1978 -79 இல் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட்  படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மயிலாப்பூர் அகாதமி என்ற அமைப்பு ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்தியது. அந்தப் போட்டியை என்னை முன்னின்று நடத்தச் சொன்னார்கள். அதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான உடற்பயிற்சியில் எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது. 

உடற்கல்வியியல் படிப்பில் பட்டம் பெற்ற உடனேயே சென்னை லயோலா கல்லூரியில் அசிஸ்டன்ட் பிசிகல் டைரக்டர் வேலை கிடைத்தது. ஓராண்டு அங்கே வேலை. அப்போது அரசுப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் வேலை கிடைத்தது. அதில் சேர்ந்து வேலை செய்தேன். அந்த வேலையில் இருந்தால், மாற்றுத் திறனாளிகளுக்காக எதுவும் செய்ய முடியாது என்று தோன்றியது. அதனால் அரசுப் பள்ளி வேலையை உதறிவிட்டு வந்துவிட்டேன். 

அதன் பிறகு ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் "பார்வையற்றவர்களுக்கான உடற்பயிற்சி கல்விப் பணி' திட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். அந்தப் பணியில் சேர்ந்தேன்.

அந்தப் பணிக்காக எனக்குப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து பயிற்சியாளர்கள் வந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என் கண்களை கட்டிவிட்டு பயிற்சி அளித்தார்கள். பார்வையற்றவர்களுக்கு உடற்பயிற்சி கல்வி அளிக்க எனக்கு அது உதவியது. 

21 ஆண்டுகள் அங்கேயே பணிபுரிந்து கொண்டிருந்தேன். அரசுப் பணியை விட சம்பளம், சலுகைகள் எல்லாம் குறைவுதான் என்றாலும் மனதிருப்தி இருந்தது. 
2002 - இல் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத்' என்ற நிறுவனத்தில் தேசிய விளையாட்டு இயக்குநர் பணி கிடைத்தது. இப்போது  "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின்  சீனியர் ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருக்கிறேன். இதன் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. 

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா,  ஜப்பான்,  நியூஸிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட 27 நாடுகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி தருவதுதான் இப்போது என் முதன்மையான வேலை. 

இதற்கிடையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 2005 - இல் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ், பாரா ஒலிம்பிக்ஸ் கல்வியில் டிப்ளமா படிப்பைத் தொடங்கினார்கள். அந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டம் முதற்கொண்டு எல்லாவற்றையும் உருவாக்க நான் உதவியாக இருந்தேன். 

நானே மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக விளையாட்டுப் பயிற்சிகள் அளித்து அவர்களைச் சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்கி இருக்கிறேன். அது தவிர, என்னிடம் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள், இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் 21 நாடுகளில் பயிற்சி அளித்து வருகிறார்கள். 

2006 - இல் கரியப்பா என்ற மாணவர் என்னிடம் பயிற்சி பெற வந்தார்.  அவர் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்த பவர் லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அயர்லாந்தில் நடந்த சைக்கிள் பந்தயங்களில் தங்கம், வெள்ளி மெடல்களை வென்றார். 

கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த  பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற டி.மாரியப்பனைப் பற்றி என் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு 2012 இல் தேசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பங்கு கொண்டு விளையாட உதவியாக இருந்தேன். இன்று அவர் சர்வதேச அளவில் வெற்றி பெற்ற வீரராக இருக்கிறார். 

நான் அரசுப் பள்ளி ஆசிரியராகவே இருந்திருந்தால், ஒரு பள்ளிக்குள்ளேயே முடங்கிப் போயிருந்திருப்பேன். உலகின் பலநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. அந்த வேலையை விட்டு விட்டு எனக்குப் பிடித்தமான துறைக்கு வந்ததால்தான் இப்போது பல நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். எனவே இளைஞர்கள் ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பிடித்தமான துறையில் சேர்ந்து முன்னேற  முயல வேண்டும். பெற்றோரின் நிர்பந்தத்துக்குப் பயந்து பிடிக்காத வேலையில் சேரக் கூடாது'' அதுதான் வெற்றிக்கு வழி'' என்றார்.
- ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com