உச்சியிலிருந்து உச்சத்திற்கு! வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

உச்சியிலிருந்து தொடங்குவது சிகரத்தில் ஏறுவதற்கு அல்ல, சிரமங்களை வெல்வதற்கு.  நம்பிக்கையின் உச்சியிலிருந்து எந்தச் செயலையும் நாம் அணுக வேண்டும்.  வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.
உச்சியிலிருந்து உச்சத்திற்கு! வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

உச்சியிலிருந்து தொடங்கு - 40

உச்சியிலிருந்து தொடங்குவது சிகரத்தில் ஏறுவதற்கு அல்ல, சிரமங்களை வெல்வதற்கு.  நம்பிக்கையின் உச்சியிலிருந்து எந்தச் செயலையும் நாம் அணுக வேண்டும்.  வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.  அது நம் ஆற்றலை முழுமையாய் அடைவது, நம் அறிவை முழுமையாய்ப் பயன்படுத்துவது. அதைச் செய்ய நம்பிக்கையின் சிகரத்திலிருந்து முயன்றால் மட்டுமே முடியும்.  நம்மால் முடியும் உழைப்பதற்கு, நம்மால் முடியும் உருவாக்குவதற்கு, வியர்வை சிந்துவதற்கு, காயங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு, தடைகளைத் தாண்டுவதற்கு, துயரங்களைத் துடைத்தெறிவதற்கு என்ற எண்ணமிருந்தால் நாம் எந்தச் செயலையும் உச்சியிலிருந்து தொடங்குகிறோம் என்று பொருள்.

உச்சியிலிருந்து தொடங்குவது என்பது கருணையின் உச்சியிலிருந்து தொடங்குவது. விழிப்புணர்வின் உச்சியிலிருந்து தொடங்குவது. கருணை என்பது அடுத்தவர்கள் மீது வைத்திருப்பது மட்டுமல்ல, நம்மீதும் வைத்திருப்பது. அடுத்தவர்கள் மீது வன்முறையைச் செலுத்தாமல் இருப்பது மட்டுமல்ல அகிம்சை, நம் மீதும் செலுத்திக் கொள்ளாமல் இருப்பதும்தான் அகிம்சை. இன்னொருவர் விரலை வெட்டாமல் இருப்பது மட்டுமல்ல வன்மம், நம் விரலை வெட்டிக்கொள்ளாமல் இருப்பதும்தான் வன்மம். நம் மீது அன்பு செலுத்தாமல் உலகத்தின் மீது எப்படி அன்பு செலுத்த முடியும்? நம்மை நேசிக்காமல் அடுத்தவர்களை எப்படி நேசிக்க முடியும்?

விழிப்புணர்வின் உச்சத்திலிருப்பவர்கள் தற்கொலையும் ஒருவித கொலையே என்பதை உணர்கிறார்கள். அவர்கள் எல்லா நேரமும் உன்னிப்பாகச் செயல்படுகிறார்கள். அந்த உச்சத்திலிருந்து வாழ்வை அணுகுகிறபோது சுவர்களும் கதவுகளாகும், பாதைகளும் மலர்ப் படுக்கையாகும், பாலையும் சோலையாகும், பாறாங்கல்லும் பஞ்சு மெத்தையாகும்.

நம்மிடம் இருக்கும் தகுதியை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இலக்கை நிர்ணயித்துக் கொள்வதும், சில நேரங்களில் நம் தகுதியை அதிகப்படுத்திக்கொள்வது போல நோக்கத்தை வரையறுத்துக்கொள்வதும் அவசியம். அதற்குப் பிறகு நம்பிக்கையின் உச்சத்திலிருந்தும் உச்சபட்ச உழைப்பிலிருந்தும் அதை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.  சில நேரங்களில் உடல் சோம்பல் முறிக்கும், அதை தட்டிக் கொடுப்பதற்கு உச்சியிலிருந்து  தொடங்குவது அவசியம். நம் பாதையில் சில கேளிக்கைகள் நம்மை வசீகரிக்கும்படி கண் சிமிட்டி கையசைக்கும். அதைப்பொருட்படுத்தாமல் இருக்க உச்சியை நினைத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் நம்மை மயக்கும் மாய பிம்பங்கள் நம் கவனத்தைத் திருப்ப முயற்சி மேற்கொள்ளும். அவற்றை உதாசீனம் செய்ய உச்சியிலிருந்து தொடங்க வேண்டும்.  

நேர்முறை எண்ணங்கள் மட்டுமே மேலோங்கி நிற்பவர்கள் வாழ்க்கையை உச்சியிலிருந்து தொடங்குகிறார்கள். அவர்களை அடுத்தவர்களின் ஏளனங்களோ, பரிகாசங்களோ திசைதிருப்புவதில்லை. காலையில் எழுகிறபோதே இந்த நாளை எதனால் நிரப்பப் போகிறோம் என்று நாம் முடிவு செய்கிறோம். உச்சியிலிருந்து தொடங்குபவர்கள் தங்கள் பொழுதை மலர்களால் நிரப்புகிறார்கள், மணத்தினால் நிரப்புகிறார்கள், இனிமையால் நிரப்புகிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் கொண்டு அடிவாரத்திலேயே தங்கிவிடுகிறவர்கள் தங்கள் பொழுதை விரக்தியால், வெறுப்பால், சோர்வால் நிரப்பி சுகம் அடைகிறார்கள்.  

வாழ்க்கையை படிப்பு, பதவி, பணம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறவர்கள் அதன் அடிவாரத்திலேயே தங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு வாசித்து மகிழ நேரமில்லை. பகிர்ந்துகொள்ள மனமில்லை, கொண்டாட அவகாசம் இல்லை, அடுத்தவர்களுக்கு பணியாற்ற மனமில்லை.  இப்படிப்பட்டவர்களை சமூகம் உச்சிமுகர்ந்து கொண்டாடினாலும் அவர்கள் உச்சியிலிருந்து தொடங்கவில்லை என்பதுதான் பொருள். அவர்கள் வாழ்க்கையின் இறுதியில் நாம் யாருக்கோ நிரூபிக்க நினைத்து ஏமாந்து விட்டோம் என்று வருத்தப்பட்டு வாழ்வார்கள்.  

உச்சியிலிருந்து தொடங்குபவர்கள் எல்லா சூழல்களையும் தனதாக்கிக் கொள்கிறார்கள்.  அவர்களை புதிய கண்டத்தில் விட்டாலும் அங்கிருக்கும் வம்சாவளியினரிடம் நட்போடு பழகத் தொடங்குகிறார்கள். அடர்ந்த காடுகளில் பயணிக்கும்போதும், மரங்களோடும், கொடிகளோடும் பேசத்
தொடங்குகிறார்கள்.  

மில்டன் எரிக்சன் என்பவர் மனவியல் வல்லுநர். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். மற்றவர்களோடு எப்படி இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு.  கல்லூரியில் படிக்கும்போது வகுப்புக்குப் பணம் கட்ட முடியாத சூழல். வீடு வீடாகச் சென்று புத்தகங்களை விற்று தொகையைச் செலுத்த வேண்டிய சூழல்.  

ஒரு விவசாயியின் வீட்டிற்குச் செல்கிறார். அவருக்கோ புத்தகங்களின் மீது துளியும் விருப்பமில்லை. பன்றிகளை வளர்ப்பதில் மட்டுமே அவருக்கு ஆர்வம். அவரிடம் புத்தகம் விற்க முயலாமல் எரிக்சன் அந்த பன்றிகளின் முதுகை சொரிந்து விட ஆரம்பித்தார்.  அவருக்குப் பன்றிகளை வளர்த்த அனுபவமுண்டு. பன்றிகள் மற்றவர்கள் முதுகுசொரிந்துவிடுவதை நேசிக்கின்றன என்கிற சங்கதி அவருக்குத் தெரியும். அவர் செய்யச் செய்ய பன்றிகள் வாகாக முதுகைக் காட்டின. அந்த விவசாயிக்கு மிக்க மகிழ்ச்சி.  பன்றிகளை நேசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நுட்பம் தெரியும் என்று சொல்லி பூரித்துப் போனார்.  எரிக்சனை இரவு உணவிற்கு தங்க வைத்ததோடு அவர் புத்தகங்களை வாங்கிக் கொள்ளவும் சம்மதித்தார்.  

உச்சியிலிருந்து தொடங்குபவர்கள் மனமுடைந்து போவதில்லை. அவர்கள் நீரைப்போல இருக்கிறார்கள்.  ஓடிக்கொண்டிருக்கிற நீர் தடையேற்பட்டால் தேங்கிவிடுவதில்லை.  தடையைச் சுற்றிவளைத்துக் கொண்டு ஓடுகிறது.  தன்னைத் தடுக்கும் பாறையின் மீது மோதி மோதி அதன் சொரசொரப்பான பகுதியையும் வளவளப்பாக மாற்றுகிறது.  

விவேகமான வாழ்க்கைக்கு வழிகாட்டி என்கிற புத்தகத்தை ஆல்பர்ட் எல்லீஸ், ராபர்ட் ஹாப்பர் என்கிற இரு மனவியல் வல்லுநர்கள் எழுதினார்கள்.  நாம் கெட்ட எண்ணங்களையே உற்பத்தி செய்யாவிட்டால் அவை எப்படி நம் இதயத்தில் தங்கும் என்பது அவர்களது கேள்வி. துயரம், கவலை ஆகியவை மனத்தின் நிலைப்பாடுகள். அவற்றை நாமே அதிகப்படுத்திக் கொள்கிறோம். வேலையை இழந்தால் சோர்வு ஏற்படுவது உண்மை.  அதிலேயே நாம் ஆழத் தொடங்கினால் துரும்பாக இருக்கிற கவலை தூணாக மாறுகிறது.

பனிப்பந்துபோல உருண்டு திரண்டு நம்மை மலையாக மாறி சிதைத்துவிடுகிறது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். உச்சபட்ச உணர்வுகளுக்கு ஆட்படாமல் இருப்பதுதான் அவர்களைப் பொறுத்தவரை உச்சியிலிருந்து தொடங்குவது.

நல்ல எண்ணங்களை மட்டுமே ஆதரிப்பது, எப்போதும் உயர்ந்தவற்றையே வாசிப்பது, படிப்பது, நல்ல இசையையே கேட்பது, நல்ல திரைப்படத்தையே பார்ப்பது, நம்பிக்கையானவற்றையே பேசுவது என்று யார் முடிவெடுக்கிறார்களோ, அவர்கள் உச்சியிலிருந்து தொடங்குகிறார்கள்.  

ஒரே ஒரு மாதம் யாரைப் பற்றியும் தவறாகப் பேசுவதில்லை என முடிவெடுத்து செயல்படுத்தினால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். முதலில் நமக்கு பேசுவதற்கு நிறைய இருக்காது. அதிக நேரம் கிடைக்கும். நம்மை யாரும் குறைசொல்லும்படி நாம் நடந்துகொள்ள மாட்டோம். நாம் பேசுகிற சொற்கள் தீட்சண்யமாக இருக்கும். நம்முடைய செயல்பாடுகளில் புத்துணர்வு கூடும். நாம் முன்பு வாசித்ததைவிட அதிகமாக வாசிக்கலாம், அதிகம் எழுதலாம், ஆக்கப்பூர்வமான பலவற்றைச் சிந்திக்கலாம். நம்மை எல்லோரும் நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள். நாம் அமர்ந்திருக்கும் இடம் நட்பு பூக்கும் நந்தவனமாகிவிடும்.

நம்மோடு இணைந்து பணியாற்ற பலரும் போட்டி போடுவார்கள். நாம் செய்கிற செயல்களில் எல்லாம் புதுமை மிளிரும். நாம் திடமாக நம்முடைய இலக்கையும், நோக்கத்தையும் நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.  நாம் கவனிக்கப்படுகிற மனிதர்களாக மாறிவிடுவோம்.  எந்தத் தோல்வியையும் பந்தாடிவிட்டு முன்னேறத் தொடங்குவோம்.  அப்போது நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுக்கிற ஆளுமையாக உருவெடுப்போம். 

விழிப்புணர்வின் உச்சியிலிருந்து தொடங்கி மற்றவர்களையும் அவர்கள் ஆற்றலின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிற இளைய பாரதத்தினராய் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதியதோர் உலகம் செய்வோம்.
(நிறைவு பெற்றது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com