கண்டதும் கேட்டதும் 1: பி.லெனின்

எங்கேயோ கேட்ட  பாட்டு. பிறகு நினைவுக்கு வந்தது நான் இயக்கிய  ""சொல்லத் துடிக்குது மனசு'' என்ற படத்தில் கவிஞர் மு.மேத்தா எழுதிய பாடல் என்று.
கண்டதும் கேட்டதும் 1: பி.லெனின்

"எவ எவனோ எழுதினதே 
எழுத்துக் கூட்டிப் படிச்சுப்புட்டு 
நீ படிக்க வேண்டியதே வுட்டுபுட்டே 
எம்படிப்பும் உம்படிப்பும் 
அவன் படிப்பும் எவப்படிப்பும் 
 அனுபவமா வந்துத்துன்னா வேறேயப்பா
வேறயப்பா.''
எங்கேயோ கேட்ட  பாட்டு. பிறகு நினைவுக்கு வந்தது நான் இயக்கிய  ""சொல்லத் துடிக்குது மனசு'' என்ற படத்தில் கவிஞர் மு.மேத்தா எழுதிய பாடல் என்று.  பல நேரங்களில் நான் எழுதிவிட்டு எழுதினதைப் பத்திரப்படுத்தாமல் கிழித்துப் போட்டுவிடுவேன்.  ஏன்? பல நேரங்களில் எனக்குத் தோன்றியவை எல்லாம் நான்தான் முதலில் சிந்தித்தேன் என்ற எண்ணம் இருந்தது.  ஆனால் எல்லாப் பதிவுகளும் முன்பே சொல்லப்பட்டும், பேசப்பட்டும், எழுதப்பட்டும் இருப்பதைக் கண்டு எனக்கு உதித்தவை ஒன்றும் புதிதல்ல என்று தேர்ந்தேன். 

சிறு வயது முதல் இன்று வரை வெளியில் சுற்றித் திரிவதுதான் எனக்கு வேலையாக இருக்கிறது. வெளியில் என்று இங்கு குறிப்பிடுவது இயற்கையை.  இயற்கையைத் தேடி சென்றபோது, செடி, கொடி, மரம், காய், கனி, நீர், நெருப்பு, ஆகாயம், வெயில் போன்ற எல்லாவற்றிலும் இயற்கை உள்ளதை அறிந்து கொண்டேன். இயற்கையின் அருள்குணம் கெட்டு ஏன் இவ்வளவு ஏமாற்றங்களைக் கொடுக்கிறது? என்று சிந்தித்தபோது,  அது மனிதனோடு உறவாடுவதால் மனித குணங்கள் அதற்கும் வந்துவிட்டதோ?   என்று தோன்றியது.

மனிதர்களிடையே இருந்த குழந்தைத்தனம் மறைந்து, சிந்திக்கத் தொடங்கியவுடன் எல்லாம் மாறுபடுகிறது. மனிதர்கள் என்பதில் நானும் இருக்கிறேன். 

ஒவ்வொருவரிடமும் எந்த வயதிலும் ஒரு  குழந்தைத்தனம் கூடவே வருவதை நான் கவனித்திருக்கிறேன். ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் பாடலைப்போல் "எவ எவனோ எழுதினதே - வேற வேறயப்பா'' போல் அனுபவம் மட்டும் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது என்று என்னுள் திடமான நம்பிக்கையை வளர்த்தது. காலம் மாறிவிட்டதாக மனிதர்கள் காலத்தின் மீது பழி போடுகிறார்கள். காலம் என்றும் ஒன்றாகத்தான் இருந்தது; இருக்கிறது;  இனியும் இருக்கும்.  நம்மில் உண்டாகும் காட்சிகள்தான் வெவ்வேறாக இருக்கும் (பாரதியாரின் பாடல்: காலம் என்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்) புதன், சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் குளியல் குளிப்பேன். "என்னைய கூட ஒரு சமயத்தில் மறந்துவிட்டாலும் எண்ணெயத் தேய்க்க மட்டும் விட்டுடாதே! அதுவும் தொப்புளில் முதலில் எண்ணெய்யை வைத்துக் கொள்'' என்று என் அம்மா சொல்வார்கள். 

அந்த வயதில் தொப்புள் ஏன் இருக்கிறதென்று யோசித்தேன். விஞ்ஞானம் படிக்கும் முன்பே அதன் வழியாக (தொப்புள்கொடி) அம்மா சாப்பிட்ட உணவு எனக்குள் போயிற்று என்று. நான் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது ஏன் பேசவில்லை, கண் திறந்து ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விகள் எழத் தொடங்கின. நான் மட்டும்தான் அதைப்போல சிந்தித்தேன் என்று நினைத்திருந்தபோது என் வயதொத்தவர்களும் அதே கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதானிருந்தார்கள்.

விஞ்ஞானரீதியாக அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றும் என்னைப்போல் சாதாரண மனிதர்களிடம் இதைப் பற்றிக் கேட்டால் பதில் தெரிவதில்லை.

ஒரு வேலை கரு உருவாகும்போது முதலில் தொப்புள்தான் உருவானதோ? என்ற கேள்வி இதுவரை உள்ளது. என் ஆயாவிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர் "எனக்குத் தெரியல. ஆனா நீ சொல்றது சரிதான்னு நினைக்கிறேன்'' என்று சொன்னார். 

அவர் பசு, எருமைகளை வளர்த்தார். அவற்றிடமிருந்து பால் கறந்து, தயிராக்கி, வெண்ணெய், நெய் போன்றவற்றை வீட்டிற்கும் வெளியில் உள்ளவர்களுக்கும் கொடுத்தார். அவருடைய மகள் - என் அம்மா சோனாம்மாளுக்கும் அந்த மாடு வளர்க்கும் முறை ஒட்டிக்கொண்டது. மாடுகளுக்கு தெலுங்கில் பெயர் கூட வைத்தார்கள். கோபாலபுரம் அவ்வா மாடு (கோபாலபுரத்தில் இருந்ததால் அந்தப் பெயர், அவ்வா என்றால் தமிழில் பாட்டி, ஆயா என்று அர்த்தம் கொள்க) சோனாமாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

தமிழில் வயது முதிர்ந்த பெண்களை அவ்வை என்று அழைப்பதுன்டு. என் ஆசிரியர் "ஒள'வையார் என்றே எழுதச் சொன்னதாக நினைவிருக்கிறது. 

ஒருமுறை இசையமைப்பாளர் இளையராஜா வீட்டில் பசுமாடு இருந்தது. "அதைப் பராமரிக்க சரியான ஆள் இல்லை. உங்க அம்மாவை பார்த்துக் கொள்ள சொல்லுங்க' என்றார். அப்போது என் அம்மா பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் பிறந்த குன்றத்தூரில் இருந்தார். 

அங்கிருந்த பசும்புற்களைத் தின்ற மாடு நன்றாகப் பால் கறந்தது. பாலை இளையராஜா வீட்டுக்குத் தினமும் அனுப்பி வந்தார்கள். எனக்கும் மாடு வளர்க்க ஆசை. எந்த விலங்கையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள நம்மால் முடியவில்லையென்றால் யாருக்காவது கொடுத்து விடவேண்டும் என்பது அம்மாவின் அறிவுரை... இல்லை அறவுரை. 

"இல்லேன்னா அது குடுக்கற சாபமே குடும்பத்த நிர்க்கதியாக்கி விடும்'' என்பார்கள். குன்றத்தூரில் மாடுகளை கொடுத்துவிட்டு அம்மா ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு வந்தார்கள். நன்றாக இருந்தவர் படிப்படியாக உடல் உபாதைகளுக்கு ஆளானார்கள். மாடுகளைப் பிரிந்த ஏக்கமோ!

ஒரு நாள் நானும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது அதிகம் படிக்காத அம்மா என்னிடம், "ஏன்டா, மனுஷன் ஒருத்தனுக்குத்தான் சிரிக்கத் தெரியும்னு சொல்றாங்களே, மிருகங்களும், பறவைங்களும் சிரிக்கலேன்னு இவங்களுக்குத் தெரியுமாடா'' ன்னு! கேட்டார்கள்.  வளர்த்தவங்களுக்கு எதிரா மாடு சாபம்குடுக்குமா என்பதுதான் அப்போது எழுந்த கேள்வி.

இப்படி, இயற்கையோடும், இயற்கையை நேசித்தவர்களோடும் வாழ நேர்ந்ததால், பல நேரங்களில் நான் பேசுவதிலும், எழுதுவதிலும், கோபப்படுவதிலும், சிரிப்பதிலும் அது பிரதிபலிப்பதாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் ஏடாகூடமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போது "ஏடாகூடம்'' என்றால் என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com