நீர்கேட்டதும் நீர் தானே? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

கடற்கரை மணலில் நெருப்பு மூட்டப்பட்டு சுற்றிலும் ஆட்கள் பரபரப்பாய் வேலை செய்துகொண்டிருக்க "அங்கேதான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இரவு உணவு எல்லாம்'' என்று தமிழ்மணி சொல்ல,
நீர்கேட்டதும் நீர் தானே? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 27

கடற்கரை மணலில் நெருப்பு மூட்டப்பட்டு சுற்றிலும் ஆட்கள் பரபரப்பாய் வேலை செய்துகொண்டிருக்க "அங்கேதான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இரவு உணவு எல்லாம்'' என்று தமிழ்மணி சொல்ல, "அடடே, ஒளியும், ஒலியும் பார்த்து எவ்வளவு நாளாச்சு?'' என்று ஹெட் போன் பாட்டி சொல்ல "தப்போசை'அதிரத் தொடங்கியது.

நிலவு வெளிச்சம் எங்கும் குளுமையாய் பரவியிருக்க, நாங்கள் அத்தனைபேரும் அந்த இடம் நோக்கிப்போய் அமர்ந்தோம். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வந்த இளைஞர் ஒருவர் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டி "தமிழன்டா' என்ற எழுத்துக்களோடு கூடிய  டீ சர்ட் போட்டு இடுப்பு வேட்டியை ஜல்லிகட்டு மாடு பிடிக்கச் செல்பவர்களைப் போல தார்ப்பாய்ச்சி கட்டி,  தன் கையிலிருந்த சிலம்பு கம்பை சக்கரம் போல கரகர என்று சுழற்றிப் பின்அப்படியே ஆகாயத்தில் அந்தர்பல்டி அடித்து மண்ணைத் தொட்டு வணங்கி சபையில் இருந்த எங்களுக்கு  ஒரு வணக்கம் சொன்னார். நாலாபக்கமும் கைதட்டலும் விசிலோசையும் தூள் பறந்தது. 

"சபையோருக்கு வணக்கம். நாடு செழிக்க வேணும், நல்ல மழை பெய்ய வேணும்; மக்கள் செழிக்க வேணும், மாடு கன்று வாழ வேணும், உலகம் செழிக்க வேணும், ஒற்றுமையாய் வாழ வேணும்'' என்று அவர் சொல்ல இன்னொரு இளைஞர் தவிலோடு வந்து அதை தன் வாசிப்பால் ஆமோதிக்க, அவர் சொன்ன அதே செய்தியை ஒரு சிறிய நாயனத்தில் இன்னொருவர் வாசித்துக் காட்ட , மீண்டும் கைதட்டல் "மகாஜனங்களே... இன்னைக்கு நிகழ்ச்சியிலே நம்ம தமிழனோட வீர விளையாட்டு , பண்பாட்டு நாடகம், அப்பப்பப்ப பாட்டு... அதுக்கப்புறம்'' என்று சொல்லத் தொடங்க "நிப்பாட்டு' என்று சொல்லியபடி கோமாளிக்குல்லாய் போட்ட ஒருவர் மின்னல் போல தோன்றி காலில் சலங்கை குலுங்க ஓர்  ஆட்டம் போட்டுக் காட்டினார். என்னருகில் உள்ள தமிழையா,  "பார்த்தீர்களா ஐயா, இதுதான் நம் பண்பாட்டு மரபு. எந்தக் கலைஞர்கள் மேடைக்கு வந்தாலும் நாட்டையும் மக்களையும் இயற்கையையும் வாழ்த்திவிட்டுத்தான் தங்களுடைய பணியைத் தொடங்குவார்கள்'' என்றார். நானும், "உண்மைதான் ஐயா, நம் இலக்கியங்கள் எல்லாம் நம் தமிழ்ப் புலவர்களால் படைக்கப்பட்டிருந்தாலும் அது உலக மக்களுக்குத்தான் என்னும் பொருளோடு "உலகு' எனும் சொல் வரும்படி படைத்திருப்பார்கள். சான்றாக, மணிமேகலைக் காப்பியத்தில், 
"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி'
 எனச் சீத்தலைச்சாத்தானார் பாடியிருப்பாரே!'' என்று நான் சொன்னேன்.

எங்களருகே இருந்த ஹெட் போன் பாட்டி, "பொதுவா கடவுள் வாழ்த்து பாடித்தானே நிகழ்ச்சியைத் தொடங்குவது வழக்கம்?'' என்று கேட்டார். 

"தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும், நாட்டு வாழ்த்துப் பாடியும் தானே சில இடங்களில் தொடங்குவாங்களே?'' என்று இன்னொரு பெரியவர் கேட்டார். உடனே தமிழையா, "நீங்கள் சொல்வதெல்லாம்  உண்மைதான். கடவுளை, நம் மொழியை, நம் நாட்டை வாழ்த்திப்பாடுகிற மரபுகள் பிற்காலத்தில்தான் வந்திருக்க வேண்டும். இயற்கையைப் பாடுகின்ற மரபுதான் ஆதிகால மரபாக இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தைப் பாடிய இளங்கோவடிகள்,
திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும்; மாமழை போற்றுதும் என்று கண்ணுக்குத் தெரிகின்ற, உலக உயிர்களைச் வாழச் செய்கின்ற செழிக்கச் செய்கின்ற இயற்கையைப் பாடிவிட்டுப்  பிறகுதான் பூம்புகார் போற்றுதும் என நாட்டையும், சோழ மன்னனையும் வாழ்த்திப் பாடியிருப்பார்'' என்று கூறினார்.

அதற்குள் நிகழ்ச்சியைத் தொடங்கிய இளைஞரைப் பார்த்து,  கூட இருந்த அந்தக் கோமாளி "இம்புட்டு பேசுறியே ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்ல இப்ப ஸ்கோர் தெரியுமா உனக்கு?'' என்று கேட்டவுடன் அங்கிருந்த இளைஞர்கள் பலர் "அப்பிடிக்கேளு'' என்று கைதட்டி ஆரவாரமாய் வரவேற்றார்கள். 

"ஏன்டா, நா மண்ணைப்பத்தி, மழையைப்பத்தி மனுச வயித்துக்கு தேவையான சோறைப்பத்திப் பேசினா... நீ ஸ்கோரைப்பத்தியா கேட்கிற?'' என்று அவனை மடக்கினார். 

"அப்படியா?, இந்தக்கூத்து முடிஞ்சவுடனே நெத்திலி மீன்குழும்பு ஊத்தி நெல்லுச் சோத்த தின்னுக்கிட்டே ஸ்கோர் என்ன மச்சின்னு? எங்கிட்ட வருவேல்ல...  அப்ப இருக்க உனக்கு!'' என்று சொல்லிவிட்டு வேகமாய்க் கூட்டத்தை ஓரு சுற்றுச்சுற்றி வெறுங்கையில் அவன் பந்து வீச உட்கார்ந்திருந்த மூன்று இளைஞர்கள் ஆகாயத்தில் பாய்ந்து அந்த இல்லாத பந்தைப் பிடித்து "அவுட்' என்று கத்தினார்கள்.

இவற்றையெல்லாம் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த பேத்தி "இவங்களுக்கு  எல்லாமே தெரியுமா? அல்லது எதுவுமே தெரியாதா?'' என்று அப்பாவியாய் கேட்டது. அதற்குள் அந்தக் கூத்தில் அடுத்தக் காட்சி தொடங்கியது.

"இப்ப நாங்க ஓர் ஓரங்க நாடகம் போடப் போறோம்'' என்று மூன்று பேர் நடுவில் வந்து நிற்கத் தவில்காரரும், நாயனக்காரரும் ஓரமாய் ஒதுங்கி  மெதுவாய் வாசிக்கத் தொடங்கினார்கள்;. 
"ஓரங்க நாடகம், வாட் இஸ் த மீனிங் கிரான் மா?'' என்று பேத்தி கேட்க,  "ஒன் ஆக்ட் ப்ளே'' என்று ஹெட் போன் பாட்டி பேத்திக்கு விளக்கம் சொல்ல, "அப்படின்னா என்ன?'' என்று இன்னொருவர் அவரிடத்திலே கேட்க, "பேசம நாடகத்த பாருங்கய்யா பார்க்க பார்க்க புரியுமுல்ல!'' என்று ஒருவர் சத்தம் போட்டார்.

அப்போது நடுவில் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குச் சிலபேர் காய்ந்த கட்டைகள் போட நெருப்புக் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீ வட்டத்தை மேலே தாண்டிக் குதித்த ஓர் இளைஞன் முன்னே வந்து, "இந்த ஓரங்க நாடகம் நம் மண்ணின் வீரம் சார்ந்தது'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இரண்டு பேர் சிறைக்கம்பி கதவு போன்ற ஒன்றைக் கொண்டுவந்து மணலில் நிறுத்த, விறுவிறு என்று இரண்டு பக்கமும் இளைஞர்கள் ஒருவர் தோள்மீது ஒருவர் ஏற, அது ஒரு சிறைக்கூட மதில் சுவராக நொடியில் மாறியிற்று. 

அச்சிறைக்கதவின் வெளியே ஒரு காவலன் கையில் வேலோடு முன்னும் பின்னும் நடந்தான். சிறைக்குள்ளே அரசரைப்போல தோற்றம் கொண்ட ஒருவர் வெளியில் இருந்த காவலனை நோக்கி, 
"காவலரே, தாகம் அதிகமாய் இருக்கிறது பருகுவதற்கு நீர் கிடைக்குமா?'' என்று கேட்க அதைக் கவனிக்காதது போல் இருந்த அந்தக் காவலன், 
"நீர்; கேட்டது நீர்தானே?'' என்று சிலேடையாக அவரைக் கேலிபேசினான். அந்த கேலியைச் சகித்துக்கொண்ட அந்த மனிதர், 
"ஆம் காவலரே, நீரே தரவேண்டும். அதையும் நீரே தரவேண்டும்'' என்று தயங்காமல் கம்பீரமாகச் சொன்னார். "அடடே, என்ன அருமையான சிலேடை'' தமிழ்மொழி தமிழ்மொழிதான்! என்று கரம் குவித்து வணங்கினார் தமிழையா. அவரைப்போலவே நானும் மகிழ்ந்தேன். மற்றவர்கள் எங்களைப் பற்றி கவலைப்படாமல் நாங்கள் அனுபவித்த தமிழின் அழகையும் புரிந்து கொள்ளாமல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

"தோற்றுப்போனாலும் உங்களது ஆணவம் தீரவில்லை இப்போது நீங்கள் எங்கள் கைதி'' என்று கடுமையாக எச்சரித்த காவலன்,  "நீர் ஆணையிட்டவுடன் ஓடிவந்து பணிசெய்ய இது உமது சேரநாட்டு அரண்மனை இல்லை. இது எங்கள்  சோழநாடு நினைவில் கொள்ளும்'' என்று சொல்லிவிட்டு "யாரடா அங்கே, இவர் ஏதோ கேட்கிறார். முடிந்தால் கொண்டு வா. இல்லையென்றால் இன்று போய் நாளை வா'' என்று அப்போதும் ஏளனக் குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். சிறைக்கம்பிகளுக்குள் இருந்த அந்த மனிதர் இவனது கொடிய சொற்களைக்கேட்டு வருந்தினார். முன்னும் பின்னுமாக நடந்தார். பின் தனக்குள் பேசத் தொடங்கினார்.

"போர்க்களத்தில் வீர மரணம் எய்தாமல், சிறைக்கைதியாக அகப்பட்டுக்கொண்ட எனக்கு மரணத்தைக் காட்டிலும் கொடியது இக்காவலனின் கொடுஞ்சொற்கள். இச்சொற்களைக் கேட்டபின்பும் அவன் கையால் நீர் அருந்தி வாழ்வது நம் மரபிற்கு ஏற்றதன்று.  இதோ ஒரு முடிவெடுக்கின்றேன்'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே,  அந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் மன்னரைப் போல ஒருவர் அமர்ந்திருக்க மற்றவர்கள் உடனிருக்கப் புலவர் ஒருவர் அரசனை வணங்கியபடி நிற்கிறார்.

அரசனும் புலவரே, "ஏர்க்களம், போர்க்களம் எனக் களம் பாடும் புலவர்கள் பலருண்டு. நீர் பாடிய போர்க்களப்பாடல்கள் என்னை மகிழ்வித்தன. உமக்கு என்ன வேண்டும் பொன்னா? பொருளா? வீடா? என் நாட்டின் ஒரு பகுதியா?'' எனக் கம்பீரமாய்க் கேட்டான். 

உடனே, அப்புலவரும் "மன்னா நீர் கேட்ட எதுவும் வேண்டாம். கழுமலம் என்ற ஊரில் நடந்த பெரும்போரில் நீங்கள் வெற்றி வாகை சூடினீர்கள். எம்மன்னர் உம்மிடத்தில் தோற்றார், சிறைப்பட்டார். அவரும் களம் பல கண்ட வீரர்தான். ஆயினும், சிறைப்பட்ட அவரை சிறை மீட்கவே நான் இந்த நூலினைப் பாடினேன். 

இதை உமக்கு காணிக்கையாக்கினேன். எனக்கு பொன் வேண்டாம், பொருள் வேண்டாம் எம்மன்னரின் விடுதலையே வேண்டும். இதுவே நீங்கள் எம் தமிழுக்குத் தரும் பரிசு.  எங்கள் நாட்டுக்குத் தரும் பரிசு''  என கண்களில் நீர் கசிய வேண்டினார். 

அவரின் சொற்களால் நெகிழ்ந்த மன்னன், "புலவரே உமது நாட்டுப்பற்றை உமது பாட்டால் உணர்ந்தேன். உம் மன்னர் மீது நீர் வைத்த அன்பின் மிகுதியை உங்கள் கண்ணீரால் அறிந்தேன்.  இப்போதே தந்தேன் உம்மன்னருக்கு விடுதலையை.  சென்றுவாரும்'' என்று எழுந்து வணங்கினார். அந்த ஆணையைப் பெற்ற அப்புலவர் விரைந்து புறப்பட்டார். 

அப்போது நாடகத் தொடக்கத்தில் வந்த அந்தக் கம்பீரமான இளைஞன் "சான்றோரே, சபையோரே புலவர் பெற்ற ஆணையால் சிறையிலிருந்த மன்னன் சிறை மீண்டானா? தன் நாடு சென்றானா? என்ன நடந்தது என்று தெரியுமா?'' என்று கேட்டான். 

"என்ன நடக்கும்? விளம்பர இடைவேளை விடுவீர்கள் அல்லது பாகுபலி இரண்டுல்ல மாதிரி பாகுபலிய கட்டப்பா ஏன் கொன்றான்? அப்படின்னு கேட்பீங்க?''  என்று சொல்லிக்கொண்டே கோமாளி மேடைக்கு வர, இரண்டு பேர் ஓடிவந்து கோமாளியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்ல மெல்லிய இசையோடு நாடகம் தொடர்ந்தது.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com