மனிதர்களுக்குப் போட்டியாக வரும் ரோபோக்கள்!

மின்னல் வேகத்தில் முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் இயந்திரங்களில் புகுந்து பல்வேறு வேலைகளில் இருந்தும் மனிதர்களை
மனிதர்களுக்குப் போட்டியாக வரும் ரோபோக்கள்!

மின்னல் வேகத்தில் முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் இயந்திரங்களில் புகுந்து பல்வேறு வேலைகளில் இருந்தும் மனிதர்களை வெளியேற்றி வருகின்றன.  இன்று நம்முடைய வேலைகளில் புகுத்தப்படும் ரோபோக்கள் நம்முடைய வேலைகளை நம்மை விட வேகமாகவும், துல்லியமாகவும், குறைந்த செலவிலும் செய்து முடித்துவிடுவதால் அங்கு மனித  ஆற்றல்  குறைக்கப்படுகின்றது.

ரோபாட், இயந்திரங்கள், கணினி மென்பொருள்கள் போன்றவற்றால் வேலை இழப்பு ஏற்படும் துறைகள் குறித்து அறிஞர்கள் அவ்வப்போது ஆராய்ந்து அதுகுறித்து  தோராயமான  மதிப்பீடுகளை அறிவித்து  நம்மை  எச்சரித்து வருகின்றனர். எனவே, ரோபோக்களால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ள துறைகள், வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ள துறைகளை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். 

London Design and Engineering University Technical College இல் கடந்த செப்டம்பர் 2016-இல் நுழைந்துள்ள United Kingdom - இன் முதல் வகுப்பறை ரோபோ ஆசிரியர் Pepper கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Moley Robotics என்ற புதிய நிறுவனம் 100 சதவீதம் தானாக இயங்கும் புத்திசாலித்தனமான ரோபோ சமையல்காரரை (Chef) உருவாக்கியுள்ளது. 

தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக ரோபோ பயன்பாட்டில் இருந்தாலும், தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது. Apple மற்றும் Samsung நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்களை வழங்கக் கூடிய Foxcann நிறுவனம் 60 ஆயிரம் தொழிலாளர்களை குறைத்துள்ளதாகவும், சீனாவின் Everwin Precision Technology நிறுவனத்தில் 90 சதவீதப் பணியாளர்களுக்குப் பதிலாக ரோபோக்களைப் பயன்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சையில் ரோபோக்கள் முன்னரே இருந்தாலும், தற்போது மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, கண் அறுவைச் சிகிச்சை வரை முன்னேறியுள்ளன. 

Pepper ரோபோக்கள் ஆசிரியர்களுக்கு மாற்றாக மட்டுமல்லாமல், அங்காடிகளில் சில்லறை விற்பனையாளராகவும் செயல்படத் தொடங்கியுள்ளன. நெஸ்லே நிறுவனம் ஜப்பான் நாடு முழுக்க சுமார் 1000 மளிகை மற்றும் காபி கடைகளில் பெப்பர் ரோபோக்களை சில்லறை விற்பனையாளர் பணியில் பயன்படுத்தி வருகிறது. 

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பாதுகாவலர் பணியில் ரோபோக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காவலாளிகளைப் போல அனைத்துப் பணிகளையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன. K5 ரோபோக்கள் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் வேலி அலுவலகங்களிலும், அங்குள்ள ஷாப்பிங் மால் போன்றவற்றிலும் காவலாளி பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

The Australian Centre for Field Robotics  என்ற நிறுவனம் கால்நடைகளை மேய்க்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.  உலகின் முதல் ரோபோ பண்ணை (Robot Farm) ஜப்பானில் உருவாகி வருகிறது. இங்குள்ள ரோபோக்கள் பயிர் நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்கின்றன.

மருந்தாளுநர் பணியிலும் Latest Robotic Prescription Dispensing Systems பயன்படுத்தப்படுகிறது. இதனால், மனிதத் தவறுகளால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதேபோல, ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள், வரவேற்பறை பணியாளர்கள், தொலைபேசி விற்பனையாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், கணக்காளர், சுற்றுலா வழிகாட்டி, நூலகர், மருத்துவமனை நிர்வாகி போன்ற பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமித்துவிட்டன. 

வருங்காலத்தில் 89 சதவிகிதபேருந்து ஓட்டுநர்கள், 90 சதவிகித மேற்கூரை அமைக்கும் பணியாளர்கள், 94 சதவிகித கணக்காளர்கள், 95 சதவிகித துணை சட்ட அறிஞர்கள், 96 சதவிகித  துணை சமையல்காரர்கள், 97 சதவிகித காசாளர்கள், 98 சதவிகித கடன் ஆய்வாளர்கள், கடன் அதிகாரிகள், 99 சதவிகித தொலைபேசிவழி விளம்பரதாரர்கள் பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் என கருதப்படுகிறது.

எனினும், ரோபோக்களால் அனைத்து வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படாது என்றும்,   ரோபோவை உருவாக்கவும், கண்காணிக்கவும் மனித ஆற்றல் தேவைப்படும் என்பதோடு, ஒரு தொழில் மறையும் போது, புதியதொரு தொழில் தோன்றும் எனவும் சில வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

உலகில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தையும் மனிதர்கள்தாம் பயன்படுத்த வேண்டும்.  ரோபோக்களால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு பெரும்பாலான மக்களுக்கு வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டால் உற்பத்தியாகும் பொருட்களை யார் வாங்குவார்கள்?  அதனால் எல்லாத் தொழில்களும் முடங்கி நடத்த முடியாத நிலையே ஏற்படும். எனவே  முழுக்க முழுக்க இயந்திரமயமாக்குதல் உலகில் எப்போதுமே சாத்தியமில்லை. 

எனினும்,  எனக்கு இந்த வேலை மட்டும்தான் தெரியும் என்று இனி எவரும் இருந்துவிட  முடியாது.  ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களை தெரிந்து வைத்திருப்பதும், நம் பணியில் ஏற்படும் அன்றாட மாற்றங்களை உள்வாங்கி நாள்தோறும் புதிதாகத் தயாராவதும், நாம் பணியாற்றும் நிறுவனத்தில் நம் பணியல்லாத பிறவற்றிலும் கவனம் செலுத்தி கற்றுக்கொள்வது மட்டுமே நம்மை வேலையிழப்பில் இருந்து காப்பாற்றும்.
-இரா. மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com