கண்டதும் கேட்டதும் 2: பி.லெனின்

வார்த்தைகள் உருவாகாத காலத்தில் நான் வாழ்கிறேன் என்பேன்.  எப்போதோ எழுதிக் கிழித்துப்போட்ட எனது வரிகள்:
கண்டதும் கேட்டதும் 2: பி.லெனின்

ஆண்டவன் படைப்பிலே
ஆதியிலே ஜாதி பேதமில்லே
அவையெல்லாம் பாதியிலே
மனிதர்களால் வந்த தொல்லை
நந்தனின் சரித்திரம் அருமை 
நான் உரைப்பேன் அதன் பெருமை.
படித்த  அதிமேதாவிகள் என்னை,  "நீங்க Low profile-ல இருக்கீங்க''  என்பார்கள். Low profile High profile தெரியாததில் வாழ்க்கையைச்  சந்தோஷமாகவும் துக்கமாகவும் வாழ்கிறேன். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் நேர்மறையாக வாழ முடிகிறது.

இது அனுபவத்தால் மட்டும் வந்ததாக நான் எண்ணவில்லை. ஆழ்ந்து யோசித்ததால் வந்ததாக நான் எண்ணுகிறேன். மேதாவிகள் அதற்கு பெயர் கூட  சூட்டிவிடுவார்கள்.

வார்த்தைகள் உருவாகாத காலத்தில் நான் வாழ்கிறேன் என்பேன்.  எப்போதோ எழுதிக் கிழித்துப்போட்ட எனது வரிகள்:
தற்பெருமை, அகங்காரம்
நீக்கி இதைப்  படியுங்கள்!
அகழ்வாராய்ச்சிக்கு
அகப்படாத
புதை மணலில் புதையல்கள்.
புதைய வேண்டும்
நானும்!

மறைந்தும் மறையாமல் என்னுள்  இருக்கும் குழந்தைகளில் ஒருவர் J.P. சந்திரபாபு. பாட்டும், நடனமும் ஏன் நடிப்பும் கூட அவரால் எனக்கு வந்தது. அவர் "காசு கொடுத்து ஆங்கிலப்  படங்களைப்பார்'' என்பார்.

"எனக்கு ஆங்கிலம் புரியாதே'' என்றேன்.  
"பாக்கறவனெல்லாம் புரிஞ்சுதான் பாக்கறானா?'' என்றார்.
"எதையுமே பாத்துக்கிட்டே இருடா, ஆங்கிலப் படங்கள் மாத்திரம் இல்ல, மற்ற எல்லா விஷயங்களும் புரியும்'' என்பார்.

எனக்கு ஆங்கிலம்  பள்ளிக்கூடத்தில் தெரிந்து கொண்டதை விட ஆங்கிலப்  படங்களைப் பார்த்தும்,  ஆங்கிலோ இந்தியர் குடியிருப்பு பகுதி வீட்டுக்கருகில் இருந்ததாலும்,  ஓரளவுக்குப்  பயம் இல்லாமல் ஆங்கிலம் பேசுவேன்.

கல்லூரி வாசலை மிதிக்காத நான், கல்லூரிகளுக்குள் நுழைந்து எனக்குத் தெரிந்த சினிமாக்களை பாடமாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எடுப்பேன்.
இந்தி படங்களின் பாடல்களை இந்தியை தமிழில் அந்தச் சமயத்தில் வரும் பாட்டுப் புத்தகங்களை வைத்து மனப்பாடம் செய்வேன்.

(உ.ம்)  சுகானா சபர் ஏ மோசம் யகி...  என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும் . அதை அப்படியே படிப்பேன்.  புரசைவாக்கத்தில் பள்ளிப்பருவத்தில் இந்தப் பாடலை நண்பர்களிடம் பாடிக் காண்பிப்பேன். 

"டேய் எப்டிடா இந்தி பாட்டு பாடறே?'' என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள்.

"எனக்கு இந்தி தெரியும்'' என்று பொய் என்று தெரியாமலே சொல்லியிருக்கிறேன். ஆனால் முகேஷ் என்ற பாடகர், இந்திப்பாடகர். அவர் இந்தி வார்த்தைகளை வேறுவிதமாக உச்சரிப்பதைக் கேட்டு, புரசைவாக்கத்திலிருந்து தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவுக்கு வந்து 5 ரூபாயில் இந்தி - தமிழ் அகராதியை வாங்கினேன். அதன் மூலமாக இந்தி டியூஷனோ, ஆசிரியரோ இல்லாமல் பண்டிட் வகுப்புக்குரிய standard-ஐ அடைந்தேன்.

பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா போன்ற தேர்வுகளை எழுதாமலே இந்தி பாடல்கள் மூலமாக எழுத, பேச, வகுப்பு நடத்தவும் தெரிந்துகொண்டேன்.

அப்போதுதான் எவ்வளவு குழந்தைகளையும், இளைஞர்களையும் இந்த மதிப்பெண் என்ற விஷயம் அவர்களுடைய கற்பனைத்திறனை ஓர் எல்லைக்குப்  பிறகு போகாமல் தடுக்கிறது என்பதை  உணர்ந்தேன்.

மதிப்பெண்களை விட உணர்தல், பார்த்தல், அதிலிருந்து நம்மை வெளிப்படுத்துதல்தான் உண்மையானது என்று தேர்ந்தேன்.  "தேர்ந்தேன்' என்ற வார்த்தைப் பிரயோகம்கூட வள்ளலாருடையதுதான்.
 "எத்துணையும் பேதமுறாது  எவ்வுயிரும்  
தம்முயிர்போல் எண்ணி  உள்ளே
ஒத்துரிமை உடையவராய்  உவக்கின்றார்  
யாரோ  அவர் உளம்தான் 
சுத்த சித்துருவாம்  எம்பெருமான் நடம்புரியும்
 இடம் என நான் தேர்ந்தேன்'
- என்கிறார்.
தேர்ந்தேன் - தெளிவடைந்தேன் என்று எந்த தமிழ் பண்டிதரிடமும் போகாமல் எனக்குள் இருக்கும் உணர்வே அதை வெளிப்படுத்தியது. இப்படியெல்லாம் பேசினாலோ, எழுதினாலோ  "லெனின் ரொம்ப ஆன்மிகம் பேசுகிறார்'' என்று சொல்கிறார்கள்.  எனக்கு ஆன்மிகத்தை, ஆத்மாவை, விஞ்ஞானத்தை, அஞ்ஞானத்தை ஒன்றுக்கொன்று வேறுபடுத்திக்கொள்ளத் தெரியாது.

ஒன்று மட்டும் தெரிகிறது.  நாம் மனிதனாக எல்லாவற்றையும் சரணாகதி என்ற எண்ணத்தோடு வாழ்ந்தால், இயற்கை அதன் வாயிலைத் திறந்துகொண்டேயிருக்கும். அதைத்தான் சொர்க்கவாசல் என்று நான் சொல்கிறேன். சிறு வயதிலிருந்து, இளைஞர்கள், பெரியவர்கள் வரை இன்றளவும் பேய், பிசாசு, பூதம், பில்லி, சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வாழ்க்கைக்கு இன்றியமையாதது. "நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு'.  ஒவ்வொன்றையும் நம்பும்போதுதான் அதன் மூலம் தெளிவும் பிறக்கிறது. பிறக்கிறது என்றாலே புதிதாக உருவாகிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

புரசைவாக்கத்தில் முன்பு மேனா தெரு என்று இருந்த பெயர் இப்போது மீனாட்சி தெருவாக மாறியுள்ளது. மேனா தெருவுக்கு அருகே மில்லர்ஸ் ரோடு. இப்போது அதே பெயரில் அழைக்கப்படுகிறது. அதைச்சுற்றி பொன்னியம்மன் கோயில், சுடுகாடு (ஓட்டேரி).

நான் தமிழ்நாட்டின் சுடுகாடுகளை ஏறக்குறைய பார்த்திருக்கிறேன். அவற்றுள் இதுதான் பெரிய சுடுகாடு என்று நான் நினைக்கிறேன். 

மில்லர்ஸ் ரோட்டின் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி தற்போது சட்டக்கல்லூரி விடுதியாக இயங்கி வருகிறது. மில்லர்ஸ் சாலையிலிருந்தது என்னுடைய  "அவ்வா' வீடு.  அவ்வா என்றுதான் என் பாட்டியை அழைப்பேன்.  அவர் தஞ்சாவூரை ஆண்ட சிவாஜியின் மகன் "சரபோஜி அரண்மனையில்' பிறந்தவர்.  அவ்வாவிடம் அவருடைய தாய் தந்தையரைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன். தனக்குத் தெரியாது என்றார். அரண்மனையில் ஏதோ தாதி வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அங்கு வந்த வைஷ்ணவர் ராகவாச்சாரிலு என்பவரை மணந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அவர், ஏற்கெனவே மணமாகி இறந்துபோன முதல் மனைவியின் பால் குடி மாறாத குழந்தை ராம்சேஷுவுக்காக  இவரைத்  திருமணம் செய்துகொண்டிருக்கிறார். பாரதியார் வீட்டுக்கு அருகே "தவோன உற்சவ பங்களா' என்று அழைக்கப்படும் வீட்டில் குடியேறினார்கள். தவோன பங்களா என்று ஏன் பெயர் வந்தது?  என்று கேட்டபோது, அங்கு "தவனம்' என்று செடி அதிகம் இருந்ததால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்றனர். இப்போதும் தவனம் அங்கே அதிகமாகக் காணப்படுகிறது.

பின்குறிப்பு:
அத்தியாயத்தின் முதலில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடல் வரிகள், "ஜெயபேரி' என்ற தெலுங்கு படத்தின் மொழி மாற்ற திரைப்படமான "கலைவாணர்' திரைப்படத்தில் இடம் பற்றவை. பாடலாசிரியர்: மருதகாசி
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com