வேலை தேடுங்கள்... புதிய முறையில்!

பெரும்பாலான இளைஞர்கள் இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் தங்களுக்கான வேலையைத் தேடுவதில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
வேலை தேடுங்கள்... புதிய முறையில்!

பெரும்பாலான இளைஞர்கள் இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் தங்களுக்கான வேலையைத் தேடுவதில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

ஆனால், 70 சதவீத வேலைவாய்ப்புகளுக்கு விளம்பரம் செய்யப்படுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியாத செய்தி. மறைந்திருக்கும் இந்த வேலைகளைத் தேடுவதற்கு அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.

மறைந்திருக்கும் வேலைவாய்ப்புகள் வாய்வழிச் செய்தியாகவே பரவுகிறது. இவை இணையதளத்திலோ, செய்தித்தாள்களிலோ வராது. இதுபோன்ற வேலைகளைப் பெற இளைஞர்கள் சில உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கேற்ற வேலை உள்ள நிறுவனங்களில் உங்களுக்கு யாரையெல்லாம் தெரியும், உங்களைத் தெரிந்தவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை முதலில் பட்டியலிட வேண்டும்.

பிறகு அந்த நிறுவனங்களில் தொழிலாளர்கள், அலுவலர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உரையாடல் அந்த நிறுவனத்தின் மனிதவளத்துறையுடன் மட்டுமானதாக இருக்கக் கூடாது. இந்தத் தொடர்பின் வழியாக அந்த நிறுவனத்தில் உள்ள உண்மையான வேலை நிலவரம், நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அந்த நிறுவனத்தில் தற்போது வேலை வாய்ப்பு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அங்கு உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், அதற்கு அவர்கள் விளம்பரம் செய்யும் முன்பு அதை அறிந்துகொள்ளும் வகையில் அங்குள்ளவர்களோடு தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக இதுபோன்ற மறைந்திருக்கும் வேலைவாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள நம்மூரில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள், அவர்களது உறவினர்கள், நமது உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், சமுதாய குழுக்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு குழுக்கள், தொழில்ரீதியான அமைப்புகள் என எவ்வளவு விரிவடைந்துள்ளதோ, அந்த அளவுக்கு நாம் நல்ல வேலைவாய்ப்புகளை அணுகுவது எளிதாக இருக்கும்.

சில ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல்படி, இதுபோன்ற ஒரு வலைப்பின்னல் தொடர்புகள் மூலமாகவே சுமார் 60 முதல் 70 சதவீத பணியிடங்கள் திறன்மிக்கவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதாகத் தெரிகிறது. எஞ்சிய 30 முதல் 40 சதவீத பணிகள் மட்டுமே முறையான விளம்பரங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக விளம்பரங்களில் கேட்கப்படும் மிகை அனுபவம், கல்வித்தகுதி போன்றவை விண்ணப்பங்களை வடிகட்டும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

அண்மைக்காலமாக சர்வதேச அளவில் பணியாற்ற ஆர்வம் காட்டும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. இதில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் எப்போதுமே வாழ்க்கை இயக்கத்துக்கான சிறந்த இடங்களாக உள்ளதால், இளைஞர்களை வசீகரித்து வருகின்றன. இதில், இப்போது ஐரோப்பாவும் சேர்ந்துள்ளது.

மெக்ஸிகோ, பிரேசில் நாடுகளில் பொறியியல், வாழ்வியல், நிதி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

உலகளாவிய வேலைவாய்ப்பை எதிர்நோக்குவோர், அதிக வாய்ப்புள்ள நாடுகளை அறிந்து வைத்திருப்பது அவசியம். அவ்வாறு முதலிடத்தில் உள்ளதாகக் கருதப்படுவது ஆஸ்திரேலியா. வேலைவாய்ப்பும், வணிக வளர்ச்சி மிக்கதாகவும் உள்ள ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவுகள் பிறநாடுகளைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். என்றாலும், இந்த நாட்டின் மேற்கு கடற்கரை நகரங்களின் சுரங்கப் பகுதிகளில் உள்ள அதிக வேலைவாய்ப்பும், இந்நாட்டின் இதமான கோடைகாலமும் இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது.

அடுத்து அதனருகே உள்ள நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெலிங்டன், குயின்ஸ்லாண்ட் நகரங்களில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கும் அண்மைக்காலமாக வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன என்றாலும், தங்குமிடத்தின் வாடகை மலிவாகவே உள்ளது. விவசாயம், விருந்தோம்பல், கட்டுமானம் போன்ற தொழில்களை அடிப்படையாகக் கொண்ட வேலைகள் கிடைக்கின்றன.

அடுத்து, உலக மக்களின் தோழமை மிக்க நாடாக கனடா மாறியுள்ளது. இங்கு தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, புதிய தொழில் நிறுவனங்கள் நிறைய தொடங்கப்பட்டு வருவதால், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. ஆங்கிலம், பிரெஞ்ச் இரண்டும் பேசத் தெரிந்த பட்டதாரிகளுக்கு இங்குள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலையான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனி, பட்டதாரி இளைஞர்கள் கவனம் செலுத்துவதற்கான மிகச் சிறந்த இடமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு மிக்கதாகவும், வாழ்க்கைச் செலவுகள் குறைந்த, செளகரியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான இடமாகவும் ஜெர்மனி உள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் வலுவான தொடர்பில் இருக்கும் இந்த நாட்டின் மேற்கு நகரங்கள் வேலைவாய்ப்பு மிக்கவையாக உள்ளன.

வேலைவாய்ப்பு தருவதில் 5 ஆவது இடத்தில் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்காவை நோக்கியே இன்றைய பெரும்பான்மையான பட்டதாரிகளின் பார்வை உள்ளது. இங்கும் திறன்மிக்கோருக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. உத்தி தெரிந்து இங்கு வேலைக்கு சேருவோர் இங்கேயே தங்கிவிடுவது அதிகமாக உள்ளது.

இதேபோல, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ஹாங்ஹாங், ரஷ்யா போன்ற நாடுகள் வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டியலில் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com