வேலை வாய்ப்புகள் தரும் உயர் படிப்பு!

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்ப புதிய தொழில் நுட்பங்களும் தேவைப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள் தரும் உயர் படிப்பு!

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்ப புதிய தொழில் நுட்பங்களும் தேவைப்படுகின்றன.

புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது, மேம்படுத்துவது, சமூகத்திற்குப் பயன்படும் ஆய்வுகள் மேற்கொள்வது குறித்த படிப்புகளை எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (நெட்ஒர்க்ஸ்) முதுகலை இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு வழங்குகிறது.

இந்த படிப்பு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ளது.

இந்த படிப்பு குறித்து கல்லூரி முதல்வர் மகேந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"இந்த படிப்பில் மடிக்கணினி, கணினி, சாட்டிலைட் கம்யூனிகேசன், வயர்லெஸ் தொலை தொடர்பு விஞ்ஞானம் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
இந்த படிப்பில் சேருவதற்கு பி.இ.கணினி அறிவியல், பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ. மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம் பொறியியல் படிப்பில் ஏதாவது ஒரு படிப்பு படித்திருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் 60 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி ஆண்டுக்கு 18 மாணவர்கள் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வழங்குகிறது.

இந்த பட்ட ப் படிப்பின் தொடக்கத்தில் புள்ளிவிவரங்கள், வடிவமைப்பு மற்றும் மேலாண்மை கணினி வலையமைப்பு, மேம்பட்ட தரவு கட்டமைப்பு மற்றும் வழிமுறை, மேம்பட்ட தர கட்டமைப்பு ஆய்வு பாடங்கள் ஆகியவை நடத்தப்படும். குழுவாக இணையதள வடிவமைப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

பின்னர் கணினி அறிவியலின் கோட்பாடு, இணையதள புரோகிராமிங், இணையதள தகவல் பாதுகாப்பு குறித்து பாடங்கள் நடத்தப்படும். தகவல் தொடர்பான ஆய்வுப் பயிற்சி அளிக்கப்படும். பிணைய நெறிமுறை மற்றும் பாதுகாப்பு குறித்து குழு ஆய்வு பயிற்சி அளிக்கப்படும்.

மென் பொருள் உருவாக்கம், கணிதத்திறன், வழிமுறை, கோட்பாடு மற்றும் கணினி அறிவியல் தத்துவங்கள், பல்வேறு கணினி மற்றும் இணையத் தொழில் நுட்பங்கள் குறித்த பாடங்களும் பயிற்சியும் அளிக்கப்படும். பின்னர் வயர்லெஸ் இணையதளம் குறித்த பாடம் நடத்தப்படும். இறுதியில் நெட் ஒர்க் தொடர்பான திட்ட அறிக்கையை மாணவர்கள் தயாரித்து கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தத்தில் இது ஒரு கணினி நெட் ஒர்க்ஸ் ஆராய்ச்சி படிப்பாகும்.

இந்த படிப்பு மூலம் மாணவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆய்வு செய்து, தொழில்நுட்பத்திலும், சமூக வளர்ச்சியிலும் பங்கு பெறலாம். தொழில் நுட்பங்களில் சமீபகாலங்களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக கணினிப் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிகரித்து வருகின்றன.

எம்.இ.கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (நெட்ஒர்க்ஸ்) பிரிவு மாணவர்களுக்கு நெட் ஒர்க்கிங், கணினி ஆய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

மாணவர்கள் சிறப்பாக ஆய்வு செய்து, திறமையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com