வரங்களும் - சாபங்களும்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

நம் புராணங்களில் வரம் கொடுக்கிற போதே அதற்கு விதிவிலக்கும், சாபம் கொடுக்கிறபோதே அதற்கு விமோசனமும் சொல்லித்தான் கொடுப்பது வழக்கம்.
வரங்களும் - சாபங்களும்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 12

"நம் புராணங்களில் வரம் கொடுக்கிற போதே அதற்கு விதிவிலக்கும், சாபம் கொடுக்கிறபோதே அதற்கு விமோசனமும் சொல்லித்தான் கொடுப்பது வழக்கம்."
"வெல்ல முடியாத நிவாதகவச காலகேயர்கள் திகைக்கும் வண்ணம் அர்ச்சுனன் தன் தேரைத் திருப்பியவுடன், அவன் பயந்து ஓடுவதாக நினைத்த நிவாதகவசர்கள் தங்கள் கைகளைத் தட்டிச் சிரித்து, வாயில் அடித்தபடி தங்கள் மூக்கின் மீது வியப்போடு அவரவர் ஆள்காட்டி விரலை வைத்தார்கள்... அடுத்த நொடியில் அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது'' என்று நான் சொல்லி நிறுத்தினேன்.
 "ஐயோ இதென்ன டிவி சீரியல்ல தொடரும் போடுறப்பெல்லாம் சஸ்பென்ஸ் வைக்கிற மாதிரி நிறுத்துறீங்களே...   ரொம்பப் பதட்டமாகுதையா... உடனே சொல்லுங்க'' என்று கையில் சூடாக இருந்த பனங்கிழங்கைப் பார்த்தபடியே அவசரமாய்க் கேட்டார்கள். அங்கே அமர்ந்திருந்தவர்கள்.
"எப்பவுமே கதை சொல்றப்ப நிறுத்தி நிறுத்தித்தான் சொல்லணும். அப்பத்தான் கேக்கிற நமக்கு ஆர்வம் கூடும்'' என்று சொன்ன பெரியவர் என்னைப் பார்த்து, "நீங்க தொடருங்கையா'' என்றார்.
 "கைதட்டி, வாயில் அடித்தபடி கத்திச் சத்தமிட்டுத் தங்கள் மூக்கின் மேல் விரலை வைத்த அத்தனை அசுரர்களும் ஒரு நொடியில் வெடித்துச் சிதறிப் போனார்களாம்'' என்று நான் சொல்ல, எல்லாரும் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 
"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு''  என்று  "கலகலப்பு' படத்தில் விமல் மாதிரி ஒருவர் கேட்டார்.
"இதுக்குத்தான் புராணத்தை நம்பாதீங்கன்னு நான் மட்டுமில்ல, எங்க ஐயாவும் அப்பவே  சொல்லியிருக்காரு. நான் சொன்னேன்ல'' என்று மீசைக்காரர் தன் மீசையைக் கோபத்தோடு முறுக்கினார்.
அவர்கள் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட நான் மீண்டும் சொல்லத் தொடங்கினேன்.
 "எப்படிப்பட்ட வலிமையான மனிதர்களுக்கும் ஒரு "வீக் பாயிண்ட்'  இருக்கத்தானே செய்யும்? இப்படி யோசித்துப் பாருங்களேன்' என்று நான் சொல்ல...
 " ஐ  திங்க் அவங்க எல்லாரும் தங்களுடைய "நோஸ்ல' விரல் வச்சாங்களே அதுதான் அவங்களுக்கான "டெலிட்  பாய்ண்ட்'. ஆம் ஐ கரெக்ட்?'' என்று பேத்தி கேட்டவுடன், ஹெட்போன் பாட்டி  ஒரு குதி குதித்து,  
"சரியாச் சொன்னடி என் செல்லப் பேத்தி'' எனப் பாராட்டியதும். நான் வியந்து போனேன். 
 "இவர்களில் யார் பாட்டி, யார் பேத்தி? யாருக்கும்  தெரியாத செய்தியை பூரித்துச் சொல்லும் இந்த இளம் குழந்தை பேத்தியா? குதித்துக் குதித்து புதிய செய்திகளை ஏற்கும் இந்தப் பாட்டியா?' இப்படி யோசித்த நான்.
 "சரியாச் சொல்லீட்டீங்க. எப்படி இதச் சொல்ல முடிஞ்சது?'' என்று கேட்டேன்.
 "யார் தலையில கைவச்சாலூம் அவன் எரிஞ்சு பஸ்மமாப் போகணும்னு வரங்கேட்ட பத்மாசூரன் மறந்துட்டுத் தன் தலையில தானே கைவச்சு அழிஞ்சானே, அது போலத்தான் இதுவும்?  இதத்தான் என் பேத்தி "டெலிட் பாயிண்ட்'னு சொல்லியிருக்கா! சரிதானே?'' என்று ஹெட்போன் பாட்டியும் விடாமல் காலட்சேபம் செய்தது.
 "அட நீங்க ரெண்டு பேரும்  கொஞ்சம்  சும்மா இருங்கம்மா,  அவருக்குச் சொல்ல வந்த கதை மறந்து போயிரப் போகுது' என்று வேகமாகப் பேசிய பெரியவர். என்னைப் பார்த்து, 
"ஐயா, நீங்களே சொல்லுங்க. அந்த நிவாதகவச காலகேயர்கள் எப்படி அழிஞ்சு போனாங்க'' என்று ஆர்வத்தோடு கேட்டார்.
"நம் புராணங்களில் வரம் கொடுக்கிற போதே அதற்கு விதிவிலக்கும், சாபம் கொடுக்கிறபோதே அதற்கு விமோசனமும் சொல்லித்தான் கொடுப்பது வழக்கம். அதன்படி எல்லா வலிமையையும் பெற்றிருந்த அந்த நிவாதகவச காலகேயர்களுக்கு ஒரு சாபமும் இருந்தது. அதாவது டெலிட் பாயிண்ட். எந்த ஆயுதமும் அவர்களைத் தாக்க முடியாது. அதனால் அவர்களின் உயிரும் போகாது. ஆனால் தங்கள் மூக்கில் தாங்களே தங்கள் விரலை வைத்தால் அவர்கள் அழிந்து  ஒழிந்து போவார்கள். இந்த ரகசியத்தைத் தனது அறிவால் அறிந்தான் அர்ச்சுனன். அதான் போர்க்களத்தை விட்டு ஓடுவதுபோல நடித்தான். வெற்றியும் பெற்றான்'' என்று நான் கதையைச் சற்றே நிறுத்திப் பனங்கிழங்கைக் கையில் எடுத்தேன்.
 ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் கைதட்டி மகிழ்ந்தார்கள். 
"ஒரு நிமிஷம் இருங்க...'' என்று சொன்ன ஹெட்போன் பாட்டி. "இப்ப ஐயா சொன்னதெல்லாம் நம்ப முடியாத புராணக் கதையின்னுதான் இங்க சிலபேர் சொல்லுவீங்க  (அந்த மீசைக்காரரைப் பார்த்தபடி) ஆனா, ஆங்கில, இலக்கியங்கள்ல, குறிப்பா அமெரிக்க அறிவியல் கதைகளை அடிப்படையா வச்சு எடுத்த ஹாலிவுட் படங்கள்ல இப்படிப்பட்ட செய்திகளை நாம இப்பக் கூடப் பார்க்கலாம் தெரியுமா?'' என்று ஆணித்தரமாகச் சொல்ல, பேத்தியும் தொடர்ந்தது,
"யெஸ். " ஜார்ஜ் லூகாஸ்'  அப்படிங்கிற ஹாலிவுட் டைரக்டர் "ஸ்டார் வார்ஸ்'  அப்படின்னு ஒரு படத்தை எடுத்தார். இப்பக் கூட அதோட மூணாம் பாகம் வந்திருக்கு... அதுல கிரகங்களுக்குள்ள சண்டவர்றதும், அத "எர்த்ல'  இருந்து போயி மனிதர்கள் ஜெயிக்கிறதும் காட்டப்படுது. தட் இஸ் இங்கிலீஸ் "நிவாதகவச காலகேய வதைச் சருக்கம்'' என்று முடித்தது.
 "ஸ்டார் வார்ஸ்' மூணாம் பாகமா? நம்ப சிங்கம் மூணாம் பாகம் வந்ததப் பார்த்த அந்தப் பயலுக காப்பியடிச்சிட்டான் பாரு?'' என்று கூட்டத்தில் இரண்டு பேர் பேசிக் கொண்டார்கள்.
"ஏய், இப்ப வந்த "அவதார்'  படத்தை மறந்திட்டியா?'' என்று பாட்டி எடுத்துக் கொடுக்க, பேத்தியும், "யெஸ் அவதார் படத்திலே பூமியிலிருந்து போய் வேற ஒரு கிரகத்தை அழிப்பாங்களே, இதெல்லாம் நம் புராணக்கதைகள் மாதிரிதான இருக்கு''  என்று பேத்தி முடித்தது.
 "ஐயா கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமப் போயிறப் போகுது. இப்பவாவது இந்தப் பனங்கிழங்கைத் திங்கலாமா?'' என்று ஒருவர் அழாத குறையாகக் கேட்டார்.
 "ரெடி ஸ்டார்ட்'' என்று யாரோ குரல் கொடுக்க, நாங்கள் கைக்கும் வாய்க்கும் வேலை கொடுக்க ஆரம்பித்தோம்.
 ஹெட்போன் பாட்டி தன் செல்போனில் ஏதோ தேடத் தொடங்க, பேத்தி அந்தப் பனங்கிழங்கை எப்படித் தின்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.
"என்னம்மா பனங்கிழங்கோட வீக் பாயிண்ட்  எதுன்னு யோசிக்கிறியா? '' என்று ஒருவர் கேலியாகக் கேட்டார். 
அப்போது அங்கிருந்த மீனவர், பேத்தியிடமிருந்த பனங்கிழங்கை வாங்கி அதைத் தலைகீழாகப் பிடித்து "இதோ பாருங்க பாப்பா, இதன் அடிப் பகுதிய, இப்படி ரெண்டாப் பிளக்கணும். இதோ நடுவில நரம்பு மாதிரி ஒரு குச்சி இருக்கு பாரு, இத உரிச்சு எடுத்துக் கீழே போட்டுறணும். அதத் திங்கக் கூடாது. இப்ப இந்தக் கிழங்கைக் கொஞ்சம் கொஞ்சமா ஒடிச்சு, நார்ப் பகுதிகளைப் பிரிச்சு எடுத்து, இந்த மாதிரித் துண்டு துண்டா எடுத்து வாயில போட்டா, அல்வா மாதிரி இருக்கும்'' என்று சொல்லிக் காட்டினார்?
பேத்தியும் அதேபோல செய்து சாப்பிட்டுப் பார்க்க, அப்பேத்திப் பெண்ணின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது.
"மிக்க நன்றி ஐயா, நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி நானும் திங்கிறேன்'' என்று அந்தப் பேத்தியும் தின்னத் தொடங்கியது.
அப்போது அந்தக் கிழவர் என்னைப் பார்த்து "ஐயா எதையும் எப்படித் திங்கணும்னு சொல்லிக் குடுக்கலைன்னு வச்சுக்கங்க, கதை தாறுமாறு தக்காளிச் சோறுன்னு ஆகிப் போகும். நம்மள ஆண்ட வெள்ளக்காரனுக்கு எல்லாம் தெரியுமுன்னு பெருமையாச் சொல்லுவாங்க, ஆனா வெள்ளரிப்பழம் மாதிரி இருந்த ஒரு வெள்ளக்காரன் நம்ம ஊர்ல பலாச்சுளை தின்ன கதை தெரியுமா?'' என்று கேலியாகக் கேட்டார்.
"அட... அந்தக் கதைய நீங்க சொல்லுங்க. பனங்கிழங்கை வச்சு உதாரணம் சொன்ன கவிஞரைப் பத்தி நாஞ் சொல்றேன்'' என்று நான் எதிர்க்  கதையைத் தொடங்க...
அத்தனைப் பேரும் வாயை மென்றபடி, காதைத் தீட்டிக் கொண்டு பலாச்சுளைக் கதையைக் கேட்கத் தயாரானார்கள். அப்போது எங்கிருந்தோ ஒரு கடல் நாரைப் பறவை பறந்து வந்து எங்களருகில் அமர்ந்தது...
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com