இணைய வெளியினிலே!

மரம் நடுவிழா என்பதையே ஃபேஷன் ஆக்கிவிட்டார்கள். தலைவரின் பிறந்தநாள் என்றால் பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறார்கள்
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
* நல்லவர் ஒருவர் இருந்தாலும் மழை பெய்யுமாம்,
ஒருவர் கூட இல்லையா?
- சுப்ரமணியம் ராமசாமி 

* மரணம் இரண்டு வகைகளில் 
நிகழ்கிறது.
உயிர் பிரிவதால்.
தன்னம்பிக்கையை இழப்பதால்.
- பரிமேலழகன் பரி

* அட்வைஸ் என்பது 
விளக்கெண்ணெய் மாதிரி...
கொடுக்கிறது ஈஸி...
குடிக்கிறது கஷ்டம்.
- பெ. கருணாகரன்

* மரம் நடுவிழா என்பதையே ஃபேஷன் ஆக்கிவிட்டார்கள். தலைவரின் பிறந்தநாள் என்றால் பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறார்கள். ""வைக்கிறது சரி...  எவ்வளவு சார் தழையுது?'' என்று கேட்டால் பதில் இருக்காது. மரம் வைப்பதை மனப்பூர்வமாகச் செய்கிறவர்களிடம் கேட்டால் கதறுகிறார்கள். 
"போன வருஷம் அறுநூறு மரம் வெச்சோம்... வெறும் ஐம்பதுதான் சார் தப்பிச்சிருக்கு'' என்று அழாத குறைதான். தண்ணீர் பிரச்னை... ஆடுகள் தின்றுவிடும் பிரச்னை... வழிப்போக்கர்கள் கிள்ளியே கொல்லும் பிரச்னை என்று ஆயிரம் பிரச்னைகளைச் சொல்கிறார்கள்.
- வா.மணிகண்டன்

* என்ன ஒரு புத்திசாலித்தனம்..
நம்ம பசங்களை நம்ப முடியாதுன்னு 
ரயிலுக்கே
செயின் சுத்தி பூட்டு போட்டுட்டாங்க.
- சந்தோஷ் இசைப்பிரியன்

* எப்பவும் முத்தின அறிவாளியாட்டமா
சிந்திச்சி... சிந்திச்சி... 
சின்னச் சின்ன சந்தோஷங்களை 
இழந்துடாதீங்க.
- சுசித்ரா சரவணன்

வலைத்தளத்திலிருந்து...
ஒருவனுக்கு பிறந்த ஊர் என்பது வெறும் பிறந்த இடத்தை மட்டும் குறிக்கின்ற ஓர் இடம் மட்டுமே என நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பிறந்த ஊர் என்பது நம் முன்னோர்களின் பன்பாட்டுக் கலாசாரங்களை தன் வழியாக அடுத்த தலைமுறைக்கு கடத்துகிற, செழுமைப்
படுத்துகிற ஒரு களமாகவே இருக்கிறது.
எல்லா ஊர்களிலும் காலத்தால் அழிக்க முடியாத நிறையத் தடயங்களை நாம் காணமுடியும். அவை குளங்களாக, தெருக்களாக, வீடுகளாக, கோவிலாகக் கூட இருக்கும். ஏன் சில இடங்களில் அவ்வூரின் வரலாற்றை அவ்வூரைச் சுற்றியுள்ள பாறைகளும் குன்றுகளும் இன்றளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இரட்டைச் சுனை, பாம்படிச்சான் பாறை, கோட்டிக் கல் என்று பாறைகளின் பல்வேறு உருவங்கள் இன்றளவும் என் ஊரின் வரலாற்றைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டே இருக்கின்றன. 
எனக்கு நகரம் பெரும் மயானமென்றே தோன்றுகிறது. அது தன்னை நோக்கி வருகின்றவர்களை இழுத்து மென்று வெறும் சக்கையாக்கி கீழே துப்புகிறது. ஆகவேதான் நான் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறேன். பிறந்த குழந்தை தன் தாய் மடி தேடி ஓடி வருவதைப் போன்று ஒவ்வொருவரும் தன் பிறந்த ஊரைத் தேடி ஓடி வருவதன் நுட்பம் இதுவே. 
நிறைய நண்பர்கள் சொல்வதுபோல நகரம் வாழ்வதற்கான அனைத்து வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறது எனும் கூற்றை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. நிறைய வாசல்கள் இருக்கலாம். எண்ணற்ற வழிகள் இருக்கலாம். ஆனால் இருக்கவும் புழங்கவும் ஒரே ஒரு வீடு அவசியம் தானே? அந்த ஒரு வீடு தான் நம் பிறந்த ஊர். 
http:kalabairavan.blogspot.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com