தாவர அறிவியல்: புதுமையான  ஆய்வுகள்!வேலை வாய்ப்புகள்! 

மனிதர்களின் வாழ்வோடு தினமும் அங்கம் வகிப்பவை தாவரங்கள். எதைச் சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் எனத் தாவரங்களைப்
தாவர அறிவியல்: புதுமையான  ஆய்வுகள்!வேலை வாய்ப்புகள்! 

மனிதர்களின் வாழ்வோடு தினமும் அங்கம் வகிப்பவை தாவரங்கள். எதைச் சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் எனத் தாவரங்களைப் பற்றித் தொடங்கிய ஆராய்ச்சி அறிவு, பல அரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டிருக்கிறது. தாவரஅறிவியல் படிப்புகளுக்கு அனைத்து நாடுகளிலும் தனிமவுசு உள்ளது. 

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தாவரஅறிவியலுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இவற்றைப் பயிலும் மாணவர்கள் பலர் ஆசிரியப்பணி அல்லது அரசுப் பணியை மட்டுமே தேடி நிற்கிறார்கள். ஆனால், தாவரஅறிவியல் படித்தவர்கள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினால் அதன்மூலம் வருவாயை எளிதாகப் பெருக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.  

மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியைத் தூண்டும் வகையில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாவரஅறிவியல் துறை நவீன ஆய்வுக்கூடங்களுடன் மேம்படுத்தப்பட்ட முதுநிலை தாவரஅறிவியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பேராசிரியர் பி.ரவிச்சந்திரன் கூறியதாவது: 
 "உடல் உபாதைகளைத் தீர்க்க தாவரங்களை மருந்தாக்கும் பழக்கம் மனிதர்களிடம் உருவாகியது. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சீன மருத்துவம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மருத்துவ மருந்துகளும் தாவரங்களின் அடிப்படையிலானவையே. அலோபதி தொடங்கி அனைத்து மருந்துவமுறைகளிலும் இப்போதும்கூட தாவரங்களின் பங்களிப்புகள் அதிகமாக உள்ளன. 

மேலும் தற்போது இயற்கை வேளாண்மை, இயற்கை உணவுப் பொருள்கள் போன்றவற்றின் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் தாவர அறிவியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பல்வேறு துறைகளிலும் பெருகி வருகின்றன.

தாவர அறிவியலில் எம்.எஸ்சி, எம்.பில்,  பி.எச்டி போன்றவை முடித்த சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்துதல் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிக வருவாயைத் தரும் வேலைவாய்ப்புகள் உள்ளன. தாவர அறிவியல் ஆராய்ச்சித்துறையில் தாவரங்களை இனம்காணுதல், நுண்ணுயிரியியல், மூலக்கூறியல், பாசியினங்கள், பூஞ்சையினங்கள், மரபியல் என பல்வேறு பிரிவுகளிலும் ஆய்வு செய்ய முடியும். குறிப்பாக ஒரு தாவர இனத்தின் மரபியல் கூறுகளைக் கொண்டுதான் அவற்றின் பழைமை கணக்கிடப்படுகிறது. 

தாவரங்கள் மூலமாக கிடைக்கும் இயற்கைச் சாயம் மற்றும் வாழைநார் கைவினைப் பொருள்கள் போன்ற தாவர மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சர்வதேச அளவில் வர்த்தக வாய்ப்புகளும் தாவர அறிவியல் பட்டதாரிகளுக்கு உள்ளன. 

மாணவர்களிடையே ஆய்வு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவர அறிவியல் துறையில் எம்.எஸ்சி மற்றும் பிஹெச்டி படிப்புகளுக்கு செய்முறைக்கல்வி மிகுந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக அதிநவீன மைக்ரோஸ்கோப்களுடன் கூடிய பிரமாண்ட ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.       மலைப்பகுதிகளுக்கு மாணவர்களை களஆய்வுக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் தாவர அறிவியல் படிப்பவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மிக உதவியாக உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட புற்கள் இனத்தில் 480 வகை புற்கள் தமிழகத்தில் உள்ளன. 

தாவர அறிவியல் துறை ஆய்வுகளுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய வேளாண் துறை, மத்திய சுற்றுச்சூழல் துறை, பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு உள்ளிட்டவை நிதி வழங்கி வருகின்றன. சில நாடுகளில் பல்லுயிர்ப் பெருக்கம் குறைவு, வனப்பகுதிகள் குறைவு, தாவரயினங்கள் குறைவு என்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து  இந்தியாவுக்கு வந்து தாவர அறிவியல் பயில்கிறார்கள். 

தாவர அறிவியல் படித்தவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி, பிரேசில், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

எனவே, தாவர அறிவியல் படித்தால் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறி விடக்கூடாது. எதிலும் புதுமையாகச் சிந்தித்தால், ஆய்வு செய்தால் சாதிக்க முடியும் என்பது தாவர அறிவியலுக்கும் பொருந்தும்'' என்றார் அவர். 
- கோ.முத்துக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com