படி...அரசுப் பணியை பிடி! 

மத்திய, மாநில அரசின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதைக் காணலாம்.
படி...அரசுப் பணியை பிடி! 

மத்திய, மாநில அரசின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதைக் காணலாம். ஆனால் அனைவராலும் வெற்றி பெற இயலுவதில்லை. அல்லது வெற்றி தள்ளிப் போகிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து, குறைகளைப் போக்கிக் கொண்டாலே லட்சியத்தில் பாதியை வென்றதற்குச் சமம்.

பாடத்திட்டம்: ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு விதமான பாடத்திட்டம் வெளியிடப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த பின், பாடத் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு திட்டமிட வேண்டும். பாட திட்டத்தின் அளவு, நம் கைவசம் இருக்கும் நூல்கள், இன்னும் தேர்வுக்குத் தயாராகத் தேவையான நூல்கள், தயாரிப்புக்கான கால அளவு இவற்றைத் தான் முதலில் திட்டமிட வேண்டும். பாடதிட்டத்தை முழுவதுமாக படித்து முடித்துவிட்டாலே தேர்வுக்கான தயாரிப்பில் 70 சதவீதம் நிறைவடைந்துவிடும்.

தயாரிப்பு: தேர்வுக்குத் தயாரிப்பதில்தான் ஒருவரின் வெற்றியே அடங்கி இருக்கிறது. அனைவரிடமும் ஒரே மாதிரியான புத்தகங்களே இருக்கின்றன. ஆனால் ஒருவர் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறுகிறார். ஆனால் மற்றொருவரோ தோல்வியைத் தழுவுகிறார். இதற்குக் காரணம், நாம் அந்த புத்தகத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்தினோம் என்பதே. 

திட்டமிடல்: தேர்வுக்கான தயாரிப்பு என்பது ஒரு நீண்ட காலத் திட்டம். ஓவ்வொரு பாடத்துக்கும் தினசரி இத்தனை மணி நேரம் என கால அட்டவணை தயார் செய்து அதைத் தவறாமல் பின்பற்றி வர வேண்டும். படித்தது மறக்காமல் இருக்க வார இறுதி நாள்களில் வாரம் முழுவதும் படித்தவற்றை மீண்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். பழைய வினாத்தாள்களை எடுத்து அவற்றுக்கு விடையெழுதிப் பழக வேண்டும். இந்த நடைமுறையைத் தவறாமல் சரியாகப் பின்பற்றுபவர்கள் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை.

எளிதாகப் படிக்கும் வழி: எல்லோருக்குமே பிடித்த பாடம், பிடிக்காத அல்லது ஆர்வம் குறைவான பாடம் என கட்டாயமாக இருக்கும். பிடித்த பாடம் எளிதாக மனதில் பதியும். பிடிக்காத பாடத்தை எத்தனை முறை படித்தாலும் அது மனதில் ஏறாது. இதுவே பலரின் பிரச்னையாகும். ஆனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரிப்பவர் விருப்பு, வெறுப்பின்றி அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டிய கட்டாயமுண்டு.  எனவே முதலில் நூல்களை, பாடங்களை, தகவல்களை விரும்பி நேசித்து படித்து பழகவேண்டும்.

ஓரிரு முறை கேட்கும் பாடல், நாம் பார்த்த திரைப்படம் போன்றவை நம் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது போல நினைவில் நிற்கிறது. இதற்கு காரணம், நாம் எவ்வித கட்டாயமும் இன்றி, அதனை ரசித்து ஏற்றுக் கொள்வதுதான். இதே மனோபாவத்தில் பாடங்களையும் அணுகவேண்டும்.

நிஜ மாதிரி முன்னுதாரணங்கள்: ஒருவர் விலங்கியல் பாடத்தை படிக்கும்போது, சுவாச மண்டலம், ரத்தம், என்சைம்கள் என பலவற்றைப் படிக்க வேண்டியிருக்கும். இவற்றைப் படிக்கும்போது நம் உடலையே ஒரு மாதிரியாகக் கொண்டு, படிக்கும் ஒவ்வொரு பாடமும், நம் உடலில் ஓவ்வொரு நொடியும் தினசரி நிகழும் நிகழ்வு என தன் உடலையே உதாரணமாக கருதிப் படிக்க வேண்டும். இப்படி பாடங்களை மனதில் படம் போல ஓடவிட்டுப் படித்தால் எவ்வளவு நாட்களானாலும் மறக்கவே மறக்காது. இவ்வாறு படிக்கும் பாடங்கள் அடுத்தடுத்து வரும் அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும். தேர்வுக்குத் தயாரிப்பவரின் பொது அறிவையும் வளர்க்க உதவும்.

பொது அறிவு: முன்பு பாடங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, இன்று அதே அளவுக்கு பொது அறிவுத் தகவல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் தேர்வுக்கு தயாரிப்பவர் தினசரி நாளிதழ்களை வாசித்து அதில் வரும் சர்வதேச, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் அறிவியல், பொருளாதாரம், விளையாட்டு என பல்துறை சார்ந்த பொது அறிவை பெருக்கிக் கொள்வது அவசியம். மேலும், இவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டால் பின்னால் மறுவாசிப்புக்கு உதவியாக இருக்கும்.

கணக்கு: தேர்வுகளில் கணிதப் பாடங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை போட்டியாளரின் புத்திக்கூர்மையை, விரைவாகச் சிந்தித்து செயல்படும் திறனை, சிக்கலான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறனைக் கண்டறியப் பயன்படுகின்றன. எனவே போதுமான அளவுக்கு கணிதத் திறனையும் பயிற்சிகள் மேற்கொண்டு வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.

அனைத்துத் துறை அறிவும் பெற்ற, ஆளுமைத் திறன் பெற்றவரே அரசுப் பணியைப் பெறவேண்டும் என்ற கணிப்பில் அரசு இத்தகைய எல்லைகளை வகுத்து போட்டியாளர்களை எடையிடுகிறது.

எனவே அரசுப் பணிகளுக்கு போட்டியிடுபவர் அரசு வகுத்த எல்லைகளையும் மீறிய தனித்திறன் தனக்குண்டு என்பதை நிருபித்தே இப்பணிகளைப் பெற இயலும். முயன்றால் அனைத்தும் சாத்தியமே. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கை நோக்கியதாக இருந்தால், வெற்றி நிச்சயம்.
- இராம. பரணீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com