மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்! 

இன்றைய உலகில் மருத்துவத்துறை மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட துறைகளில் ஒன்றாகும். புதிய புதிய நோய்களைப்போல புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. 
மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்! 

இன்றைய உலகில் மருத்துவத்துறை மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட துறைகளில் ஒன்றாகும். புதிய புதிய நோய்களைப்போல புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. 

மேலும் மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான பல மருத்துவக் கருவிகள் - புதிய தொழில் நுட்பங்களுடன் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

மருத்துவக் கருவிகளை வடிவமைக்கவும், அதில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி மேம்படுத்தவும் கற்றுக் கொடுக்கும் உயிரி மருத்துவ பொறியியல் (பயோ மெடிக்கல் என்ஜீனியரிங்) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இந்தப் படிப்பு என்பது மருத்துவம் மற்றும் பொறியியல் இணைந்து அமைக்கப்பட்டதாகும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மிகச் சில கல்லூரிகளிலேயே இந்தப் படிப்பு உள்ளது. கோயம்புத்தூரில் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் என்ற நிர்வாகத்தின் கீழ் டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக்கல்லூரியில் இந்த  "பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்' என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. 

இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி முதல்வர் கே.பொற்குமரன், துறைத்தலைவர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: 
"பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை சிறப்பு பாடங்களாக எடுத்துப் படிப்பவர்கள், அப்பாடங்களில் 60 சதத்திற்கு மேல் எடுத்தவர்கள் இந்தப் படிப்பில் சேரத் தகுதியானவர்கள். இந்தப் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வழங்குகிறது.

பயோ இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயோ மெட்டீரியல், பயோ மெக்கானிக்ஸ், செல்லுலார் என்ஜினீயரிங், டிஸ்யூ என்ஜினீயரிங், ஹியுமேன் பிசியாலஜி அண்டு அனாடமி, மைக்ரோ பயாலஜி அண்டு பேதாலஜி, பயோ கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், பயோ டெலிமெட்ரி, பயோ விர்சுவல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஜெனட்டிக் என்ஜினீயரிங், கிளிக்கல் என்ஜினீயரிங், ஆர்த்தோபேடிக், பயோ என்ஜினீயரிங் நேவிகேசன் சிஸ்டம் ஆகிய பாடங்கள் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவை குறித்த பாடங்களோடு  அடிப்படை பொறியியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மனித உடலியல், உடற்கூறியல், உயிர் வேதியியல், நோயியல் ஆகியவை குறித்த பாடங்களுடன் மருத்துவமனைகளில் உள்ள ரத்த பரிசோதனை மையம், ஸ்கேன் மையம் ஆகியவற்றில் உள்ள இயந்திரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாகப் பாடம் நடத்தப்படுகிறது.

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயோ மெட்டிரியல்,  மின்ணனு நுண் செயலிகள் குறித்த பாடங்களோடு, மருத்துவமனையில் உள்ள இ.சி.ஜி.கருவி, இருதயம் பரிசோதிக்கும் கருவியில் உள்ள பாகங்கள், அதன் செயல்பாடுகள், அதன் தன்மைகள், அவற்றைப்  பழுது நீக்குதல் உள்ளிட்டவை  குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மனித உறுப்புகளில்  ஏதாவது ஒன்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்து, அந்த உறுப்புகளுக்கு உரிய மருத்துவக்கருவிகள் தயாரிக்கும் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

பின்னர் தற்போது உள்ள மருத்துவக்கருவியில் எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் அல்லது மருத்துவத்துறைக்கு ஏதாவது ஒரு புதிய கருவியை வடிவமைத்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை நடைபெறும் போது கருவிகளில் கோளாறு ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய பொறியாளர்களால்தான் இயலும். எனவே பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாகும்.

மனித உடலில் உறுப்புமாற்றம், உறுப்புக்களைச் சீர்படுத்துதல் போன்றவற்றுக்கும் இந்தப் படிப்பு பெரும் உதவியாக உள்ளது. முன்பு பல மருத்துவ உபகரணங்களும், கருவிகளும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. இன்று இந்தியாவில் பல நிறுவனங்கள் மருத்துவக்கருவி தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்கியுள்ளன. எனவே வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  எங்கள் கல்லூரி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடோ அட்லாண்டிக் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தத் துறையில் மேற்படிப்பை அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.

எங்கள் கல்லூரியில் படித்தவர்களில் பலர் உயர்கல்வி கற்க அங்கே செல்கிறார்கள். பலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். எனவே இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு நிச்சயம் உண்டு'' என்றார்கள் அவர்கள்.
- எஸ்.பாலசுந்தரராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com