விரல்விடு தூது... பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

"டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்  பாட்டில் வைரங்களை மேல் நாட்டு அறிஞர் "ஜான் டெய்லர்' உவமை காட்டியிருப்பது பொருத்தமாக இல்லை.
விரல்விடு தூது... பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 15

"டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்  பாட்டில் வைரங்களை மேல் நாட்டு அறிஞர் "ஜான் டெய்லர்' உவமை காட்டியிருப்பது பொருத்தமாக இல்லை. நம் நாட்டுக் குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் வைரங்களைப் பார்த்திருப்பார்களா? ஏன் நீங்கள் யாராவது பார்த்ததுண்டா?'' என்று கடல்சார் பொறியியல் பேராசிரியர் கேட்க,
 "எம் பேரு முத்துமணி, எம் மனைவி பேரு வைரமணி'' என்று ஒருவர் பரிதாபமாகச் சொன்னார்.
 "நம் நாட்டு பள்ளிக்குழந்தைகள் தங்கத்தையும் வைரங்களையும் பார்க்க வாய்ப்பில்லாமல் இருப்பதால்தான், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முத்து, வைரம், தங்கம், பவளம், ரத்தினம் என்று பெயர் வைத்து அழகு பார்த்திருப்பார்கள். பார்க்காத  வைரத்தைப்போல் நட்சத்திரங்கள் மின்னுகின்றன எனச் சொல்வது சரியா? என்று கேட்ட அறிஞர் யார் தெரியுமா?'' என்று கேட்ட அவர், "அண்ணா அவர்கள்தான்'' என முடித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் சிந்தனை எல்லாரையும் வியக்க வைத்தது.
"இப்பேராசிரியர் சொல்வதும் உண்மைதான். நாம் காணுகின்ற பொருள்களை வைத்துத்தான் காணாத பொருள்களை உணர வைக்க முடியும். இதைத்தான் அந்தக்கால செய்யுள் உரையாசிரியர்கள்,
 "காட்டாமா வைக்காணாத ஒருவர்க்கு
 நாட்டாமா வைக் காட்டி விளக்க வேண்டும்'
எனக் கூறியிருக்கிறார்'' என்று நான் சொன்னேன்.
"கடல் ஆமை, நாட்டாமை கேள்விப்பட்டிருக்கிறோம்.. இதென்ன காட்டாமை, நாட்டாமை?'' என்று ஒருவர் வியப்போடு கேட்டார்.
"ஆமா  என்பது காட்டெருமையின் பெயர். காட்டெருமையைக் கண்ணால் பார்த்திராத ஒருவனுக்கு நாட்டில் வாழுகின்ற, நாம் வளர்க்கின்ற நாட்டாமாவாகிய நாட்டு எருமைகளைக் காட்டிப் புரிய வைக்க வேண்டுமாம். இதைத்தான் உரையாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்'' என்று நான் சொல்லி முடித்தேன்.
"அப்ப நமக்குப் புரியாததைப் புரிய வைக்க வேண்டுமானால், நாம பார்த்ததை, அறிஞ்சதை, தெரிஞ்சதை வச்சுச் சொல்லணும். சரிதானுங்களா?'' என்று ஒரு பெரியவர் கேட்டார்.
"சரியாச் சொல்லீட்டீங்க... இப்ப நம்ப நாரைப் பாட்டுக்கு வாங்க... பாண்டிய மன்னர்கள் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாக வைத்து ஆட்சி செய்து வந்த காலத்தில், அப்பாண்டிய மன்னரைப் பார்த்து, அவரை வாழ்த்திப் பாடி பொருள் பெற வேண்டும் என நினைத்து ஓர் ஏழைப் புலவரொருவர் மதுரை மாநகருக்கு வந்தாராம்...'' என்று நான் விவரிக்கத் தொடங்கியதும் அத்தனை பேரும் "இன்று, நேற்று, நாளை' படத்தில் வரும் காட்சிபோல அக்காலத்திற்கே பயணப்படத் தயாரானார்கள்.
"ஐயா, அந்தக் காலத்தில் ஏழைப் புலவர், போனவுடனே மன்னரைப் பார்த்திருக்க முடியுமா?'' என்று ஒருவர் சந்தேகத்தை எழுப்பினார்.
"அந்தக் காலத்தில மட்டுமில்ல... இந்தக் காலத்திலேயும் அப்படி ஒண்ணும் சுலபமாய் பார்க்க முடியாது. நான் நம்ப மந்திரியப் போன வருசம் இந்தப் பக்கம் அவரு வந்தப்பப் பார்த்ததுதான்... மந்திரிக்கே அப்படின்னா ராஜாவை அவரு எப்பிடிப் பாத்திருக்க முடியும்?'' என்று நியாமான சந்தேகத்தை மற்றவர் கேட்டார்.
"உண்மைதான். பாண்டிய மன்னரைப் பார்த்துத் தன் வறுமையைப் போக்கிக் கொள்ள நினைத்த நம் ஏழைப்புலவர், மதுரை மாநகர வீதிகளில் பசியோடும், கவலையோடும் நடந்து கொண்டிருந்தாராம்... அப்போது மாலை நேரமானதால் ஆகாயத்தில் நாரைப் பறவைகளின் கூட்டம் பறந்து செல்வதைப் பார்த்தவுடன் சற்றே மனம் மகிழ்ந்து பாடத் தொடங்கினாராம்.
"நாராயே, நாராயே, சிவந்த கால்களை உடைய நாராயே, பழம் பழுக்கின்ற பனைமரத்தின் கிழங்கினைப் பிளந்ததைப் போன்ற, பவளம்போன்ற கூர்மையான வாயினையும், சிவந்த கால்களையும் உடைய நாரையே, நீயும், உன் மனைவியும் தெற்கே குமரியாற்றில் நீராடிவிட்டு வடக்கு திசைக்குப் போவீர்களானால், எங்கள் ஊராகிய சத்திமுற்றத்திற்குச் செல்ல வேண்டும்'' என்று நான் சொல்லத் தொடங்கினேன்.
 "நம் நாட்டின் தெற்குப் பகுதியில் குமரி என்பது கன்னியாகுமரியாகிய கடலைத்தானே குறிக்கும். இந்த நாரைப் புலவர் "குமரி ஆறு' என்று குறிப்பிடுகிறாரே'' என்று அந்தக் கடற்கரைப் பகுதிப் பெரியவர் ஒருவர் சந்தேகத்தை எழுப்பினார்.
 "அது இருக்கட்டும். அது ஆறோ அல்லது ஏழோ... பேசத் தெரியாத இந்த நாரைப் பறவைகளிடம் அந்தப் புலவர் பேசக் காரணம் என்ன?'' என்று இன்னொருவர் கேட்டார்.
 "ஐயா, குறுக்கே கேள்வி கேட்காம இருந்தாத்தான் அவர் சொல்லிய விசயம் நமக்குப் புரியும். நம் நாரைப்புலவர் பறவைகளைத் "தூதுவராக' அனுப்புகிறார். "தூதுவர்'னா தெரியுமா?'' என்று ஹெட்போன் பாட்டி சற்றே தயங்க, "அம்பாசிடர் கிராண்மா...'' என்று பேத்தி விளக்கம் கொடுத்தது.
 "ஆமா இன்னிக்குத் தமிழ்ல இப்படித்தான் புரிஞ்சுக்கிறா. "அம்பாசிடர்' சரியா? ஐயா நீங்க மேலே சொல்லுங்க. பாட்டு பாதியிலேயே நிக்கிது'' என்று ஆர்வத்தோடு எடுத்துக் கொடுத்தார் ஹெட்போன் பாட்டி.
 உடனே நானும், "பேச்சின்போது சந்தேகம் வருவது இயல்புதான். அதனால்தான் நாங்கள் வகுப்பறையில் பாடம் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? என்பதை "எனி டவுட்?' என்று கேட்போம். உடனே தங்கள் சம்பள உயர்வுக்காக மட்டும் ஒன்றுகூடும் அனைத்துக் கட்சி, எம்.எல்.ஏ.. எம்.பி.க்கள் மாதிரி ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் "நோ டவுட்' என்று மாணவ, மாணவியர்கள் சத்தமாகக் கூறுவார்கள்'' என்று மகிழ்ச்சியாகச் சொன்ன நான், "மேல்நாட்டு வகுப்பறைகளில் பாடவேளைகளில் கேள்வி - பதில் உண்டு. அதாவது "இன்ட்டராக்சன்' சரியா?'' என்று நான் அந்தப் பேத்தியிடம் கேட்க, "ஓ கே கரெக்ட் யூ, கேன் ப்ரஸீடு'' என்று என்னைத் தொடருமாறு சொன்னதும் நானும் தொடர்ந்தேன்...
 "கேள்விகளால் செய்யும் வேள்விக்கே பலன்கள் அதிகம். நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். அதுதான் நம் வளர்ச்சிக்கும் துணை நிற்கும். கேள்வி கேட்க ஆளில்லாமப் போனா, அது குடும்பமாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும் கெட்டுத்தான் போகும்...'' என்று சொல்லிவிட்டு, "அவர் கேட்டது சரியான கேள்விதான். தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு இருந்திருக்கிறது. ஆழிப்பேரலையின்போது அதாவது அக்காலச் "சுனாமியின்'போது அந்த ஆறு மறைந்து போயிருக்கலாம்'' என்று நான் சொன்னேன்.
 "உண்மைதான் வடநாட்டில் சரஸ்வதி எனும் ஆறு ஓடி மறைந்ததாக இன்றைக்கும் நிலவியலாளர்கள் கூறுவார்கள்'' என்று ஆமோதித்தார் கடல்சார் பொறியியல் பேராசிரியர்.
 "இன்னொரு கேள்வியும் இங்கே ஒருவர் கேட்டார். பேசாத பறவைகளிடம் தூது போகச் சொல்ல முடியுமா? என்று. மன்னர்கள் பேசுகின்ற மனிதர்களைத் தூதாக அனுப்புவார்கள்'' என்று நான் சொன்னவுடன்
"அநுமன் தூது''
"கிருஷ்ணன் தூது''
"ஒளவை தூது''
என்று பெரியவர்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒவ்வொன்றாக மகிழ்ச்சியாகச் சொன்னார்கள். நானும் எல்லாவற்றையும் வரவேற்றுப் பிறகு சொன்னேன். "இப்போது பேசாத உயிரினங்களைத் தூது விடும் காதலர்களைப் பற்றிப் பார்ப்போம்' என்றவுடன்,
"அன்னம் விடுதூது''
"கிள்ளை விடுதூது''
"மான் விடுதூது''
"மயில் விடுதூது''
"தமிழ் விடுதூது''
என்று நாலாதிசைகளிலும் இருந்து மகிழ்ச்சியாகச் சத்தம் வந்தது. சிலர் எழுந்து நின்று சத்தமாகச் சொன்னார்கள்.
 இதற்கிடையில் "வாட்ஸ் அப்?'' என்று நெட்போன் பாட்டி சொல்ல "ஹேட்ஸ் ஆப்!..''
என்று பேத்தியும் பாட்டியை வாழ்த்திச் சொல்ல, 
 "ஆமாம். இந்தக் காலத்தில் நம் கையில் உள்ள செல்போனிலும், மின்னஞ்சலிலும் நம் கருத்தைத் தூதாக விடுகிறோம்... இந்தத் தூதிற்குப் பெயர் தெரியுமா?'' என்று நான் கேட்க...
 "விரல் விடு தூது' என்று ஒரு சத்தம் வந்தது. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com