நவீன தொழில்நுட்பம்...நவீன நூலகம்!

அறிவுக் கண்களின் திறவுகோலாக புத்தகங்களின் பங்களிப்பு உள்ளது. மாணவ, மாணவியர் மட்டுமல்லாது
நவீன தொழில்நுட்பம்...நவீன நூலகம்!

அறிவுக் கண்களின் திறவுகோலாக புத்தகங்களின் பங்களிப்பு உள்ளது. மாணவ, மாணவியர் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் புத்தகங்களைக் கொண்டு சர்வதேசத் தரத்துடன் செயலாற்றி வருகிறது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மைய நூலகம். 

அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகம் 1987-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.  இன்றைக்கு விரிவுபடுத்தப்பட்டு, அதி நவீனமாக மாற்றப்பட்டு அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள நூலகங்களைப் போன்று அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சொ. சுப்பையா தெரிவித்தார்.

மேலும் அவரிடம் நாம் பேசியதிலிருந்து...
"அழகப்பா பல்கலைக்கழகத்தில் மைய நூலகம் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் இயங்கிவருகிறது. இதன் வேலை நேரமானது, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஆகும். மொத்தமாக கணக்கில் எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு 354 வேலை நாள்களாகும். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு தடையின்றி புத்தகங்களும், தகவல்களும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே இந்நூலகத்தின் முக்கியமான குறிக்கோளாகும்.

இந்த நூலகத்தில் ரேடியோ பிரிக்வென்சி மேனேஜ்மென்ட் சிஸ்டம் தற்போது ஏற்படுத்தப்பட்டு, முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புத்தகங்களைச் சுயமாக மாணவர்கள் எடுத்துச் செல்வதற்கும், திரும்ப ஒப்படைப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பம் மூலமே நடைபெறுகிறது. புத்தகங்கள் காணாமல் போவதை முற்றிலும் தடுத்து பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு மாநிலத்திலேயே முதல்முறையாக இங்குதான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

அதாவது, நூலகத்தின் பிரம்மாண்டமான நுழைவுவாயில் வரவேற்பு அறையில் தொடுதிரை வசதியில் புத்தகங்கள் பற்றிய முழுத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் கணினி அமைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் வரை நூலகத்தைப் பயன்படுத்தி வருவதால், புத்தகங்கள் இருப்பு குறித்த தகவல்களை இந்தத் தொடுதிரை தொழில்நுட்பத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

தங்களுக்கான அடையாள அட்டையை இந்தத் தொடுதிரை முன்பாக அவர்கள் வைத்ததும், கணினி திறந்துகொள்ளும். அதன்மூலம், தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளதா அது எந்த அறையில், எத்தனையாவது அலமாரியில் உள்ளது. தற்போது இருக்கிறதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதனால், புத்தகங்களை தேடி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.  மேலும், செல்லிடப்பேசி வாயிலாகவும் தங்களுக்குரிய பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, தேவையான புத்தகங்கள் இருப்பு குறித்து அறிந்து கொள்ளவும் முடியும்.

அவ்வாறு தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் இருந்தால், அந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்லும் மாணவர்கள் புத்தகத்தை மற்றொரு கணினி வசதி கொண்ட தொழில் நுட்பத்தில் வைத்துவிட்டால், அந்தப் புத்தகம் ஸ்கேன் செய்யப்பட்டு, அதற்குரிய ரசீதும் புத்தகமும் மாணவர் கைக்கு வந்துவிடும். மாணவர்கள் தங்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் புத்தகத்தை நூலக அலுவலர்களிடம் ஒப்படைக்கத் தேவையில்லை. புத்தகத்தை ஒப்படைக்கவும் ஒரு தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க வரும் மாணவர்கள் நூலகத்தின் நுழைவுவாயில் வலதுபுறம் புத்தகங்கள் செலுத்தும் தொழில்நுட்பத்தில் புத்தகத்தை செலுத்திவிடலாம். அந்தப் புத்தகம் பெற்றுக் கொண்டதற்கு உரிய ரசீது கிடைத்துவிடும். இவை எல்லாமே தானியங்கி முறையில் செயல்பட்டு வருகிறது. 

மேலும், இந்த நூலகத்தில் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட வாசிப்பு அறைகள், 24 மணிநேர செய்திகள் அறிந்துகொள்ள தொலைக்காட்சி வசதிகள் உள்ளன. 674 தலைப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னனு புத்தகங்களை வாசிக்கவும் வசதி செய்து கொடுத்துள்ளோம். மேலும், 100 பேர் அமரக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட நவீன கருத்தரங்கக் கூடமும், 20 பேர் அமர்ந்து ஆலோசனை நடத்திக்கொள்ளும் குளிரூட்டப்பட்ட அறையும் இந்நூலகத்தில் ஏற்படுத்தியுள்ளோம்.

நவீன முறையில் கணினிகள், எல்.இ.டி. புரஜெக்டர், வை-ஃபை வசதிகள் உள்ளன. நூலகத்தில் 25 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். இந்த நூலகத்தைப் பொருத்தவரை, சர்வதேச தரத்தில் அமைத்துள்ளோம்'' என்றார்.

நூலகர் முனைவர் திருநாவுக்கரசு கூறுகையில், "இந்த நூலகத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, தகவல் தேடும் பொதுமக்களும் வந்து பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தகங்களை பொதுமக்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இங்கே அமர்ந்து தேவையான தகவல்களைத் திரட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவர். 

இப்பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்நூலகத்துக்கு வருகின்றனர். கல்வியியல், உடற்கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், தகவல்கள் இங்கு இருக்கின்றன'' என்றார்.
- எஸ்.மயில்வாகனன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com