"பிரம்மோஸ்' ஏவுகணையின் தந்தை!

அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் என பலவிதமான போர் ஆயுதங்களுடன் உலகில் அனத்து நாடுகளும் இருக்கும்போது,
"பிரம்மோஸ்' ஏவுகணையின் தந்தை!

அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் என பலவிதமான போர் ஆயுதங்களுடன் உலகில் அனத்து நாடுகளும் இருக்கும்போது, எந்த ஒரு நாடும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருக்க முடியாது.  எனவே இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையானவற்றை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் இந்தக் கண்ணோட்டத்துடன்தான் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் "பிரம்மோஸ்' அதிவேகத் தாக்குதல் ஏவுகணை அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 

பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் சென்று 600 கி.மீ தொலைவிலுள்ள இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இதன் வேகம் Mach 30. இந்திய - ரஷிய கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பு இது. ஆயுத உற்பத்தியில் வெளிநாட்டுக் கூட்டுறவைச் சாத்தியப்படுத்திய முதல் திட்டம் இதுவே. இதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்து நடைமுறைப்படுத்தியவர் விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை.

1999-இல் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் (Brahmos Aerospace) நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பால் உருவாக்கப்பட்டது. உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையை வடிவமைத்தல், உருவாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான தனியார் நிறுவனம் அது. அதன் தலைமைப் பொறுப்பு வகித்த சிவதாணு பிள்ளை, 2007-இல் முதல் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிக் காட்டினார்.

நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், விமானம், தரைத்தளம் என எந்தப் பகுதியிலிருந்தும் "பிரம்மோஸ்' (Brahmos) ஏவுகணையைச் செலுத்தலாம். இதனைத் தயாரிக்கும் திட்டத்தால் வர்த்தகரீதியான லாபத்தையும் இந்தியா பெறுகிறது. இத்திட்டத்தின் மூளையாக விளங்கிய சிவதாணு பிள்ளை "பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தின் நாகர்கோவிலில், 1947 ஜூலை 15-இல் ஆயுர்வேத மருத்துவர் ஆபத்து காத்தானின் மகனாகப் பிறந்தார் சிவதாணு பிள்ளை.

நாகர்கோவில் டி.வி.டி.பள்ளியில் பயின்ற அவர், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் மின்னியலில் பி.இ. பட்டம் (1969) பெற்றார். படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், அங்கு பல நிலைகளில் பணியாற்றினார். படிக்கும்போதே சர்.சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் ஆகியோரால் பாராட்டப்பட்டவர் சிவதாணு. பின்னாளில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்ற விண்வெளி விஞ்ஞான சாதனையாளர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பையும் அவர் பெற்றார்.

ஹார்வர்டு வணிகப் பள்ளியில் நிர்வாகவியலில் பட்டம் பெற்ற சிவதாணு, புணே பல்கலைக்கழகத்தில் பயின்று தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. பட்டம் (1996) பெற்றார்; தும்கூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டமும் பெற்றார்.

இஸ்ரோவில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு (DRDO) 1986-இல் அவர் மாறினார். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்த அமைப்பில், விஞ்ஞானி அப்துல் கலாமின் வழிகாட்டுதலில் சிவதாணு பணிபுரிந்தார். அப்போது, ஐம்பெரும் ஏவுகணைகளான  நாக், பிரித்வி, ஆகாஷ், திரிசூல், அக்னி  ஆகியவற்றைத் தயாரிக்கும் "ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை அபிவிருத்தித் திட்டம்' (IGMDP - 1983) செயல்படுத்தப்பட்டு வந்தது. அத்திட்டத்தில் இணைந்து அதன் வெற்றிக்கு சிவதாணு உழைத்தார். கலாமின் நம்பிக்கைக்குரிய விஞ்ஞானியாக அவர் உயர்ந்தார்.

அடுத்து செயற்கைக்கோள் ஏவுகலமான எஸ்எல்வி ராக்கெட் (SLV-III) உருவாக்கத்திலும், துருவ செயற்கைக் கோள் ஏவுகலன் வடிவாக்கத்திலும் (PSLV) சிவதாணு பணியாற்றினார்.

2007-இல் அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு பிரம்மோஸ் நிறுவன வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். திருவனந்தபுரத்தில் இயங்கி வந்த கேரள அதிநவீன தொழிற்சாலையை 2007-இல் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் வாங்கியது. அதனை உலகத் தரம் வாய்ந்த ஏவுகணைச் சோதனை மையமாக மாற்றினார் சிவதாணு.

இஸ்ரோவிலும் டிஆர்டிஓவிலும் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றிய சிவதாணு பிள்ளை, 1996 முதல் 2014 வரை டிஆர்டிஓ தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தார். அதன் மதிப்புறு விஞ்ஞானியாக 1999 முதல் 2014 வரை செயல்பட்டார்.

சர்வதேச திட்ட மேலாண்மை சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய - ரஷிய ராணுவ கூட்டுறவுக்கான ஆணையத்தின் சிறப்புச் செயலராகவும் சிவதாணு பணியாற்றியுள்ளார். தற்போது இஸ்ரோவில் மதிப்புறு விஞ்ஞானியாகவும், தில்லி ஐ.ஐ.டி.யில் கௌரவப் பேராசிரியராகவும், பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் வருகைப் பேராசிரியராகவும் சிவதாணு பிள்ளை செயல்படுகிறார். பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், பாதுகாப்பு ஆராய்ச்சித் திட்டங்களில் நிபுணராக மதிக்கப்படுகிறார்.

டிஆர்டிஓ-வின் சிறந்த விஞ்ஞானி (1988), இந்திய அரசின் பத்மஸ்ரீ (2002), பத்மபூஷண் (2013), பாதுகாப்பு அமைச்சகத்தின் ராஜாராம் மோகன் புரஸ்கார் விருது (2006), டிஆர்டிஓ தொழில்நுட்ப தலைமையாளர் விருது (2009), ரஷிய அரசின் நட்புறவுக்கான உயர் விருது (2014), லால்பகதூர் சாஸ்திரி தேசிய விருது (2014) உள்ளிட்ட பல விருதுகளையும், கௌரவங்களையும் சிவதாணு பிள்ளை பெற்றுள்ளார்.

 "தலைமைப் பண்பில் புரட்சி', "நானோ அறிவியல்', "பொறியியலில் நானோ தொழில்நுட்பம்' உள்ளிட்ட நூல்களையும், பல ஆய்வறிக்கைகளையும் சிவதாணு எழுதி வெளியிட்டுள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து "Envisioning An Empowered Nation: 
Technology For Societal Transformation', "Thoughts for change - We can do it' ஆகிய இரு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

குருக்ஷேத்திரா என்.ஐ.டி. கல்வி நிறுவன இயக்குநர் குழுத் தலைவராக விஞ்ஞானி ஆ. சிவதாணு பிள்ளை வழிகாட்டி வருகிறார்.
-வ.மு.முரளி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com