மாலை நேரத்து மயக்கம்...பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

"நம் உடலில் அங்கங்களின் ஐம்புலன்களை அனுபவிக்கின்ற பொறிகளில் குறைபாடு இருப்பது பிழையாகாது.
மாலை நேரத்து மயக்கம்...பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 22 

"நம் உடலில் அங்கங்களின் ஐம்புலன்களை அனுபவிக்கின்ற பொறிகளில் குறைபாடு இருப்பது பிழையாகாது. முயற்சி செய்யாத நிலைதான் நமக்குப் பழியைத் தரும்'' என நான் சொல்ல, அதற்கேற்ற திருக்குறளை "திருக்குறள் கூகுளான' தமிழாசிரியர் சொல்லி முடிக்க அனைவரும் மகிழ்வோடு கைதட்டி மகிழ்ந்தோம்.
 மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறைவதற்கான அறிகுறிகள் வானத்தில் தோன்றத் தொடங்கின. பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு இரை தேடி, அவற்றை ஊட்டுவதற்குத் தங்கள் கூடுகள் நோக்கித் திரும்பத் தொடங்கின. மேற்குச் செவ்வானம் சூரியனாம் சுடர் தாங்கி ஒளிவீசியது.
"ஆஹா என்ன அற்புதக்காட்சி! மகாகவி பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் மாலைநேர வருணனையாக ஓர் ஓவியக் காட்சியைப் பாஞ்சாலிக்கு அர்ச்சுனன் காட்டுவது போல நமக்குக் காட்டுவார் பாருங்கள்...

  பாரடியோ வானத்தின் புதுமை எல்லாம்
  பண்மொழீ கணந்தோறும் மாறி மாறி
  ஓரடி மற்று ஓரடியோடு ஒத்தலின்றி
  உவகையுற நவநவமாய்த் தோன்றுங்காட்சி
  யாரடி இங்குஇவைபோலப் புவியின்மீதே
  எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
  சீரடியால் பழவேத முனிவர் போற்றும்
  செழுஞ்சோதி வனப்பை எல்லாம் சேரக் காண்பாய்''

என்று கணீரென்ற குரலில் தமிழாசிரியர் 
பாடியபோது அங்கிருந்த அத்தனை பேரும் மகிழ்ந்து கேட்டோம்.
ஹெட்போன் பாட்டி தன் பேத்திக்கு அந்தப் பாடலின் விளக்கத்தைச் சொல்லச் சொல்ல பேத்தியும் கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தது.

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் 
             தேர்கின்றோம் - அவன் 
  எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக''

என்று அவர் பாடி முடித்தவுடன், நான் அங்கிருந்தவர்களிடம், "கேட்டீர்களா? தமிழையா இப்போது முடிக்கும்போது சொன்னது எது தெரியுமா? அந்தணர்கள் சந்தியாவந்தனம் செய்யும்போது சொல்லும் மந்திரம். சூரியனை வணங்கிச் சொல்லும் சூரியகாயத்ரி மந்திரம். இதனைத்தான் நம் பாரதி இனிய தமிழில் நமக்குத் தந்திருக்கிறார்'' என்று நான் சொல்லிவிட்டு,  "அந்த மந்திரம் எது தெரியுமா?'' எனக் கேட்டேன்.
 "ஐயா வரவரப் பெரிய மந்திரவாதியா மாறிக்கிட்டே வர்றாக... அந்த மந்திரம் எது? இந்த மந்திரம் எதுன்னு கேட்டா எங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று ஒரு பெரியவர் கவலையோடு கேட்டார்.
 அவர் சொன்னதைக் கேட்ட நானும் சிரித்தபடி, "ஐயா மந்திரம் என்பது தனியான மொழியில்லை. அவரவர் மொழியில் அவரவர் தெய்வங்களை வணங்கிப் போற்ற முன்னவர்கள் சொல்லிய சொற்களே...!'' என்று சொல்லிவிட்டு,

 "மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
  சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு 

என்று திருஞானசம்பந்தர், சைவப்பெரியோர்கள் நெற்றியில் அணியும் திருநீறு பற்றிப் பாடியிருக்கிறார்'' என்றும் சொன்னேன்.
"உண்மைதான் ஐயா. ஆனால் பாரதி எந்த மந்திரச் சொற்களை தமிழில் தந்திருக்கிறார்? நீங்கள் சொன்ன செய்தி எது?'' என்று கேட்டார் தமிழாசிரியர்.
 "ஐயா, நான் சொல்ல வந்தது எது என்றால்...'' எனத் தொடங்குமுன்

"ஓம் பாஸ்கராய வித்மஹே
 ஆதித்யாய தீமஹி
 தந்நோ சூரிய ப்ரசோதயாத்''

என்று கணீரென்ற குரலில் அந்தப் பேத்தி சொல்ல, ஹெட்போன் பாட்டி எல்லோரையும் பெருமையாகப் பார்த்தபடி, "இவளும் வரவர ஏகசந்தக்கிரகியா மாறிட்டு வர்றா, எங்கேயோ கேட்டிருக்கா... உடனே சொல்லிட்டா பாருங்க'' என்று சொன்னார்.
 "உண்மைதான். பாஸ்கரனாகிய சூரியதேவன் நம் அறிவினைத் தூண்டும் சக்தியாக விளங்குகின்றான். அதனால்தான் சூரியன் தோன்றும்போதும் மறையும்போதும் சூரியனைக் கைகூப்பி வணங்குவது நம் மரபு.... நம் உடலுக்கும், மனதிற்கும் தேவையான சக்தியை இச்சூரியக் கதிர்களிலிருந்து நாம் பெற முடியும்'' என்று கடல்சார் பொறியியல் பேராசிரியர் சொன்னபோது அத்தனை பேரும் கேட்டு வியந்தோம்.
 அப்போது தமிழ்மணி, "நண்பர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி. இன்றிரவு இதே தீவில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அதோ கூடாரங்களை நம் நண்பர்கள் உருவாக்குகிறார்கள். மின்சார வசதி கிடையாது. பெட்ரமாஸ் விளக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.
 இரவுச் சமையல் இங்கேதான். இதில் யாராவது உடனே ஊர் செல்ல வேண்டுமென்றால் அதோ அந்தப் படகு புறப்படுகிறது. அதில் போகலாம்; மற்றவர்கள் தங்கலாம்... ஆடலாம்... பாடலாம். இரவெல்லாம் பேசலாம்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
"ஆஹா... தமிழ்மணி எப்படி அழகாகப் பேசுகிறார் பாருங்கள். இந்தப் பகுதி, நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த பகுதி என்பதனால், பார்க்கலாம், தங்கலாம்... "லாம்' "லாம்' என்று குறிப்பிடுகிறார்'' என்று தமிழாசிரியர் வியந்து சொன்னார்.
"பார்த்தீர்களா? தமிழ்மொழியை நன்கு படித்திருப்பதால் நம் தமிழையா அவர்களுக்குக் காண்பதெல்லாம் தமிழாக, இனிமையாகத் தெரிகிறது. தமிழ்மணி யோசித்துச் சொன்னாரா? என்பது நமக்குத் தெரியாது. ஆனால் தமிழ் படித்தவர்கள் அற்புதமாக யோசிப்பார்கள். கவியரசு கண்ணதாசனின் பாடல் ஒன்றைக் கேட்ட ஒருவர் ஒரு மாலையோடு கண்ணதாசனைப் பாராட்டச் சென்ற கதை தெரியுமா?'' என்று நான் கேட்டேன்.
 உடனே தமிழ்மணி, "ஐயா, ஐயா, மாலையோடு அவர் போன அந்தச் செய்தியை இந்த மாலையில் சொல்ல வேண்டாம். இரவு சொல்லுங்கள். நான் பல வேலைகளைப் பார்க்க வேண்டியுள்ளது' என்று வணக்கமாய்க் கேட்டுக் கொண்டார். தமிழ்மணியின் சொற்களில் இருந்த சிலேடையை நானும் தமிழாசிரியரும் கேட்டு மகிழ்ந்தோம்.
 "சரி யார் யார் இருக்கப் போவது? ஊருக்குப் போகப் போவது யார் யார்?'' என்று மீண்டும் சத்தமாகக் கேட்டார் தமிழ்மணி.
 "தமிழ்மணி ஐயா, யாரும் இங்கிருந்து செல்வதாக உத்தேசம் இல்லை. இங்கே வரும்போதே இரவு தாமதமானால் நாளை வருகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தோம்... வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கூடாரம் அமைப்போம்'' என்று எல்லாரும் எழுந்து வேலைகளைத் தொடங்கினார்கள்.
 "ஹையா... டிஸ்கவரி சேனல்ல வர்ற மாதிரி "கேம்ப்ஃபயர்' நேரடியாப் பார்க்கப் போறோம். "அட்வன்ச்சர்' பண்ணப் போறோம்'' என்று பேத்தி மகிழ்ச்சியாய்க் குதிக்க, ஹெட்போன் பாட்டியும் தங்கும் வேலைகளைச் செய்வதற்கு விரைவாகச் சென்றார்கள்.
 "பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா? வேற லைட் வேண்டாமா?'' என்று "வைதேகி காத்திருந்தாள் படக் கவுண்டமணி போலக் கேட்டுக்கொண்டே சில பெட்ரோமாஸ் லைட்டுகளைக் கொண்டு வந்து இறக்கினார் ஒருவர். இன்னும் சிலர், அழகான கூடாரங்களை உருவாக்கினார்கள். இரவு மெதுவாகச் சூழத் தொடங்கியது. மாலை விடைபெற்றுக் கொண்டிருந்தது.
 "ஐயா பார்த்தீர்களா? நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும் மாலை நேரத்து அழகுக்கு ஈடேது? இணையேது'' என்று நான் கேட்டேன்.
 "ஆமாம் ஐயா. அதனால்தான் நம் இலக்கியங்களில் மாலை நேரத்தை மிக அழகாக வருணனை செய்திருப்பார்கள். "மாலை நேரத்து மயக்கம்...' என்றும் மயக்கும் மாலைப் பொழுதே... என்றும் நம் திரையிசைக் கவிஞர்களான கவியரசு கண்ணதாசனும், எழுத்தாளர் விந்தன் அவர்களும் எழுதி இருப்பார்கள்'' என்று நான் சொன்னேன்.
 "இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனி, பின்பனி எனப் பன்னிரண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்த நம் முன்னோர்கள், ஒரு நாளின் பொழுதினையும் வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என ஆறாகப் பிரித்திருப்பார்கள். இதில் இரவுக்கு முன் வரும் மாலைதான் மயக்கும் மாலையாக இருக்க வேண்டும்'' என்று தமிழையா சொல்ல... "நிறுத்துங்கள்...'' என்று ஒரு கர்ஜனை கேட்டது.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com