பொழுதாக்கங்கள் (Hobbies): வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

பொழுதாக்கங்கள் (Hobbies): வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

வாழ்க்கையை எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதை விட, எவ்வளவு அடர்த்தியாக வாழ்கிறோம், எவ்வளவு செறிவாக நடந்து கொள்கிறோம்

உச்சியிலிருந்து தொடங்கு-37
வாழ்க்கையை எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதை விட, எவ்வளவு அடர்த்தியாக வாழ்கிறோம், எவ்வளவு செறிவாக நடந்து கொள்கிறோம் என்பவை முக்கியமானவை. யாரெல்லாம் படிப்பையோ, பணியையோ மட்டுமே முழு வாழ்க்கையாகக் கருதுகிறார்களோ, அவர்கள் மனப்பிறழ்வு அடைவதற்கும், சோர்வில் சுருங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 

சிலர் முக்கியமான பணிகளில் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அலுவலகமே உலகமாக இருந்திருக்கும். கோப்புகளைத் தாண்டி எதையும் வாசித்திருக்க மாட்டார்கள். சக அலுவலர்களைத் தவிர, நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டதைப்போல விளங்குவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதிகாரத் தோரணை அம்பேலாகி விடும். அலுவலகத்திலிருந்து எந்தத் தொலைபேசி அழைப்பும் வராது. இதுநாள் வரை பதவிக்காக பழகியவர்கள், பழக்கத்திற்கும் ஓய்வு தந்துவிடுவார்கள். அவர்களுக்கு இழந்தவற்றை நினைத்து ஏக்கம் அடையவே நேரம் சரியாக இருக்கும். 

சில சமயங்களில் பணியே உலகம் என்று கருதுபவர்கள் பணியிடத்தில் பிரச்னை ஏற்படும்போது சூம்பிப் போவார்கள். அதிகம் உழைத்து ஆவியாகிறவர்கள் ஒருபுறம். உழைக்குமிடத்தில் பிரச்னை வருகிறபோது தீர்வு காணத் தெரியாமல் தேங்குகிறவர்கள் மறுபுறம். அடிக்கடி செய்தித்தாள்களில் அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாவதைப் படிக்கிறோம். பணிச்சுமை தாங்க முடியாமல் மன உளைச்சலால் மடிந்ததாகக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கிறவர்கள் இவர்கள். இவர்களைக் காட்டிலும் பலமடங்கு பணிகளைச் செய்கிறவர்கள் "பளிச்'சென்று இருப்பதைப் பார்க்கலாம். என்ன காரணம்? என்று யோசிக்க வேண்டும். 

பணியை மட்டுமே கடிவாளம் போட்ட குதிரையாகச் செய்யாமல் பணி முடிந்ததும் பொழுதாக்கங்களில் ஈடுபடுபவர்கள் பணியின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அலுவலகத்திலும் அயராமல் பணியாற்றுகிறார்கள். குறைந்த நேரத்தில் நிறையப் பணிகளை முடிக்கிறார்கள். அவர்கள் மேசையில் கோப்புகள் தோப்புக்கரணம் போடுவதில்லை. அவர்கள் பார்வையாளர்களை மலர்ச்சியுடன் சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் பேசினால் மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய தகவல்களை நிமிடங்களில் கிரகித்துக் கொள்கிறார்கள். பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல், கோபத்தை மறுநாளுக்கும் வரவு வைக்காமல், அப்போதே கடுமையைக் காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள். 

இந்தப் பணியாளர்கள் பொழுதாக்கங்களில் ஈடுபடுவதால் அலுவலகத்தைத் தாண்டிய நண்பர்களைப் பெறுகிறார்கள். யாரைப் பார்த்தாலும் பணியைப் பற்றியே பேசி அவர்களைக் களைத்துப் போக வைக்கிற அலுவலர்களாக அவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்குப் பேசுவதற்குப் பல செய்திகள் இருக்கின்றன. 

சிலர் அலுவலகத்தை அலுவலகத்திலேயே விடத் தெரியாதவர்கள். அதை வீட்டுக்கும் தூக்கிச் சென்று அங்கிருக்கும் அனைவரையும் படுத்தி எடுப்பார்கள். அந்த இம்சை அரசர்கள் தங்களை இல்லத்திலேயும் அதிகாரிகளாக நினைத்து மணியடித்து மனைவியை வரவழைப்பார்கள். அவர்கள் பிள்ளைகளுக்குக் கூட அலுவலகத்தில் தொல்லை தருபவர்கள் பெயர்கள் தெரியும். இப்படிப்பட்டவர்கள் பேசுவது அதிகமாகவும், செய்வது குறைவாகவும் இருக்கும். இவர்களிடம் ஐந்து நிமிடம் பேசினால், அவர்கள் சாதித்த ஐம்பது விஷயங்களை மூச்சுவிடாமல் பட்டியலிடுவார்கள். அவை அத்தனையும் துக்கடாவாக இருக்கும். 

பணியிடத்தை மட்டுமே உலகமாக எண்ணும் அலுவலர்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது?  என்று தெரியாமல் குழம்புவார்கள். கடிகாரத்தைப் பார்த்தே கழிவறைக்குச் செல்வதைக் கூட கச்சிதமாகச் செய்து வந்த அவர்கள், இப்போது நாள் இவ்வளவு நீளமானதா? என்று எண்ணத் தொடங்குவார்கள். எதற்காகக் குளிக்க வேண்டும், வீட்டில்தானே இருக்கப் போகிறோம், எப்போது வேண்டுமானாலும் முகச்சவரம் செய்யலாம் என்று வாளவிருப்பார்கள்.

மிக முக்கியமான பணிகளில் ஆள், அம்பு என்று ஆரவாரமாக இருந்தவர்கள் ஓய்வுபெற்ற சில ஆண்டுகளிலேயே விடைபெற்று விடுவதைப் பார்க்கிறோம். சிலர் அவர்களாகவே முடிவைத் தேடிக் கொள்வதும் உண்டு.

எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை மிரட்டினார்களோ, அந்த அளவிற்கு பதவி போனதும் அசிங்கப்படுத்தப்படுவார்கள். பணியிலிருக்கும்போது அனுசரிக்காதவர்களை ஓய்வுபெற்றதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்போது அவர்கள் பதாகைகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.

படிக்கும்போதும் புத்தகங்களை மட்டுமே உத்தமத் தோழர்களாகக் கருதியவர்கள், கல்லூரி வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காதவர்களாக இருந்து விடுகிறார்கள். அவர்களுக்குப் படிப்பும் பாரம். பின்னால் பார்க்கும் பணியும் பாரம். 

நல்ல பொழுதாக்கங்களை தொடக்கத்திலிருந்தே கைக்கொள்கிறவர்கள் படிக்கும்போதும் பணிபுரியும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படியொரு பொழுதாக்கத்தைக் கைக்கொள்வது படிப்பையும் பணியையும் மேலும் ஒளிர வைக்கிறது. அவர்கள் பாடங்களில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். நிறைய நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார்கள். பொது அறிவில் சிறந்து விளங்குகிறார்கள். தகவல் தொடர்பில் மின்னுகிறார்கள். பொறுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். முதிர்ச்சியோடு திகழ்கிறார்கள். 
அவர்கள் ஆளுமை மேம்படுகிறது. 

பணியிலிருப்பவர்கள் பொழுதாக்கத்தை மேற்கொள்ளும்போது வாழ்க்கை சுவாரசியமாகிறது. சில நேரங்களில் அதிகப் பணிப்பளு இல்லாத இடங்களில் வேலை செய்ய நேர்கிறபோது, அதைச் சாபமாகக் கருதாமல் சந்தர்ப்பமாக எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் கைக்கொண்ட பொழுதாக்கத்தை இன்னும் கூர்மையாகச் செய்கிறார்கள். அவர்கள் சார்ந்திருப்பதற்கு இன்னொரு தூண் ஏற்கெனவே இருக்கிறது. அவர்கள் எதையும் இழந்ததாகக் கருதுவதில்லை. அவர்களுடைய மதிப்பு ஒருபோதும் குறைவதில்லை. சமயத்தில் பணி தராத திருப்தியை பொழுதாக்கம் தரும். சமூகம் அவர்களுடைய இன்ன பிற ஆற்றல்களுக்காக வணங்கி நிற்கும். 

பயனுள்ள பொழுதாக்கங்கள் பல இருக்கின்றன. வாசித்தல், கவிதை கட்டுரை எழுதுதல், ஓவியங்கள் தீட்டுதல், சமூகப் பணி ஆற்றுதல், பூ வேலை செய்தல், நாணயங்கள் சேகரித்தல், பறவைகளைக் காணுதல், இசையில் ஆழ்தல், உலகச் சினிமாவில் ஊறுதல் என்று எத்தனையோ வகைகளில் நம்முடைய உபரி நேரத்தை உருப்படியாகச் செலவு செய்யலாம். 

பொழுதுபோக்கு வேறு, பொழுதாக்கம் வேறு. பொழுதுபோக்குகளில் நாம் சாட்சிகள், பொழுதாக்கங்களில் நாம் பங்குதாரர்கள். பொழுதுபோக்கு நேரத்தைப் போக்க, பொழுதாக்கம் நேரத்தை ஆக்க. பொழுதுபோக்கு முடிந்ததும் குற்ற உணர்வு ஏற்படும். பொழுதாக்கத்திற்கு முடிவு இல்லை. அதைச் செய்யச் செய்ய மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொழுதாக்கங்களில் இருப்பவர்கள் தோல்விகளில் துவண்டு போவதில்லை. அவர்கள் மகிழ்ச்சி என்னும் தென்றலை வரவேற்க ஆயிரம் சன்னல்களை அகலத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஒன்றில் வராவிட்டாலும் இன்னொன்றில் கட்டாயம் காற்று வரும், கமகமக்கும் நறுமணத்துடன்.

பொழுதாக்கங்கள் வைத்திருக்கும் மாணவர்கள் எப்போதும் புடைசூழ இருப்பார்கள். தனிமையில் தவிக்கிறவர்களே தவறான முடிவெடுக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையோடு நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருத்தப்படுவதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை. 

எதையும் செய்யத் தெரியாதவர்களுக்கு தனிமை தண்டனை. பலவற்றை சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கும், பல ஆற்றல்களைக் கொண்டவர்களுக்கும் தனிமை வரம். அவர்கள் அதை மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எழுதுகிறவர்களும், இசைக் கலைஞர்களும் படைப்பாக்க மனத்திறன் வேண்டுமென்பதற்காக, தனிமை வேண்டி தவம் இருப்பதற்காகப்  பயணம் செய்வதைப் பார்க்கலாம். அவர்கள் புதிய சூழலில் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

அவர்களுக்குள் இருக்கும் ராகங்களையும் கவிதைகளையும் அந்த இடங்கள் கிளர்ந்தெழச் செய்கின்றன. அங்கு தெரிந்தவர்கள் யாரும் தென்படவில்லையே என அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள். 

நன்றாக அறிந்த ஒருவர் எந்தப் பொழுதாக்கமும் இல்லாமல் அலுவலகப் பணியையே அனைத்துமாகக் கருதியவர். அவருக்கு படிப்பதும், எழுதுவதும் ஆயுள் தண்டனைக்குரிய அம்சங்கள். திடீரென எதிர்பார்க்காதவாறு தூரமான இடத்திற்கு மாற்றல் செய்யப்பட்டார். நண்பர்கள் இல்லாத அவருக்கு அது அந்தமான் சிறையாக இருந்தது. கவலைகள் அவரை அலைக்கழித்தன. எந்தப் பொழுதாக்கமும் இல்லாததால் யாருடனும் அவரால் பழக முடியவில்லை. அவருடைய உடல் பாதித்து படுக்கையில் விழுந்தார். அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை.

மாணவர்கள் படிப்புடன் பொழுதாக்கம் ஒன்றைக் கற்றுக் கொள்வது அவசியம். அதை ஆடம்பரம் என்று கருத வேண்டியதில்லை. கல்விக்குத் தடையானது என்றும் எண்ண வேண்டியதில்லை. அது ஒட்டுண்ணி அல்ல, ஊடுபயிர். நம் கல்வியையும், ஆளுமையையும் அது செழிக்கச் செய்யும்.

பொழுதாக்கம் கொண்டவர்கள் விரக்தியில் விழாமல் திருப்தியில் எழுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை தோல்விகளைச் சுண்டியெறியவும், ஆபத்துகளை எதிர்கொள்ளவும் சக்தி தருவதாக பொழுதாக்கம்  விஸ்வரூபம் எடுக்கிறது. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com