திறந்திருக்கிறது... புத்தக உலகம்!

உலகிலேயே அதிகமாக வாசிப்பது இந்தியர்கள் மட்டுமே. இதுகுறித்து குளோபல் இங்கிலீஸ் எடிட்டிங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 10.7 மணி நேரத்தை வாசிப்புக்காக
திறந்திருக்கிறது... புத்தக உலகம்!

உலகிலேயே அதிகமாக வாசிப்பது இந்தியர்கள் மட்டுமே. இதுகுறித்து குளோபல் இங்கிலீஸ் எடிட்டிங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 10.7 மணி நேரத்தை வாசிப்புக்காக ஒதுக்கி சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. 9.4 மணிநேரத்துடன் தாய்லாந்தும், 8 மணிநேரத்துடன் சீனாவும் அடுத்த 2 இடங்களில் உள்ளன. வளர்ந்த நாடுகளான ரஷ்யா (7-வது இடம்), பிரான்ஸ் (9), ஆஸ்திரேலியா (17), கனடா (22), அமெரிக்கா (24), யு.கே. (27), ஜப்பான் (30) உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வாசிப்புக்காக மிகக் குறைந்த நேரத்தையே ஒதுக்குகின்றனர். .

அதேபோல, புத்தகங்களைப் பதிப்பிப்பதில் இந்தியா சர்வதேச அளவில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4.4 லட்சம் புத்தகங்களுடன் சீனா முதலிடத்திலும், 3.05 லட்சம் புத்தகங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்திலும், 1.84 லட்சம் புத்தகங்களுடன் யு.கே. 3-வது இடத்திலும், 1.2 லட்சம் புத்தகங்களுடன் ரஷ்யா 4-வது இடத்திலும், 90 ஆயிரம் புத்தகங்களுடன் இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன. 123 நாடுகளில் இருந்து யுனெஸ்கோ அமைப்பால் திரட்டப்பட்ட இந்தத் தகவலின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 22 லட்சம் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

இதையொட்டி, புத்தகப் பதிப்பு என்பது சுமார் ரூ. 15 ஆயிரம் கோடி அளவில் மிகப் பெரிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையாக மாறியுள்ளது. மொத்த விற்பனையின் அடிப்படையில், அமெரிக்கா 30 சதவீத புத்தகப் பதிப்புச் சந்தையை வைத்துள்ளது. அடுத்த நிலையில் சீனா (10), ஜெர்மனி (9), ஜப்பான் (7), யு,கே. (4), பிரான்ஸ் (3), இத்தாலி, ஸ்பெயின் (3), பிரேசில், இந்தியா (2) ஆகிய நாடுகள் உள்ளன. 

இப்போது வாசிப்பு என்பது அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் என்றில்லாமல், இ - புக்ஸ் என்ற அளவிலும் மாறிவருகிறது. கடந்த 2013-இல் சர்வதேச அளவில் 12.3 சதவீதமாக இருந்த இ- புக்ஸ் விற்பனை, 2018 -இல் 25.8 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-இல் ரூ. 27 கோடியாக இருந்த இ-புக் வருவாய் 2015-இல் ரூ. 500 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. 2016-இல் சர்வதேச மின்பதிப்பகச் சந்தை ரூ. 1500 கோடி என்ற அளவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மட்டும் 80 சதவீத சந்தையை வைத்துள்ளன. சர்வதேச பதிப்புச் சந்தையில் திறமையான எழுத்தாளர்களுக்கு நல்ல வரவேற்பும், வருவாயும் கிடைக்கிறது.

இதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்தியாவின் 42 வயதான அமிஸ் திரிபாதி. தற்போது மும்பையில் உள்ள இவர் கணிதம் மற்றும் எம்பிஏ பட்டதாரி. வங்கிகளில் அதிகாரியாகப் பணியாற்றியவர். புராண கதைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2010-இல் தனது முதல் புத்தகத்தை வெளியிட முயன்றபோது, எந்த பதிப்பகத்தாரும் அவருடைய புத்தகத்தை வெளியிட முன்வரவில்லை. 20-க்கும் அதிகமானோர் மறுத்துவிட்ட நிலையில், தானே அந்த புத்தகத்தை வெளியிட்டார். பலரால் வெளியிட மறுக்கப்பட்ட "தி இம்மார்டல்ஸ் ஆப் மெலுகா' என்ற அந்தப் புத்தகம்தான் இந்திய பதிப்பு வரலாற்றில் மிக அதிகமாக விற்ற புத்தகம் என்ற பெயரை பெற்றுள்ளது. 

இதுவரை அவர் 4 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவை இந்தியாவில் மட்டும் இதுவரை 35 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. 

இந்தியாவில் 9 ஆயிரம் பதிப்பகங்கள் உள்ளன. இவற்றில் சிறந்த பதிப்பகங்களைக் கண்டறிந்து அவர்களை நம் கதைகள், எழுத்துக்கள் மூலம் ஈர்த்துவிட்டால், அவை அச்சேறிவிடும்.  

நல்ல புத்தகங்கள் எப்போதும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்பதற்கு 1615-இல் வெளியான "டான் கிக்ஸோட்' என்ற நாவலே உதாரணம். இந்த நாவல் இதுவரை 50 கோடி பிரதிகள் விற்று உலகிலேயே அதிகம் விற்ற புத்தகம் என்ற இடத்தை இன்றும் தக்க வைத்துள்ளது. அதேபோல, வெளியிடுவதற்கு பலரால் நிராகரிக்கப்பட்ட ஹாரி பாட்டர் முதல் புத்தகம் 10.7 கோடி பிரதிகள் விற்றன. 2-வது புத்தகம் 6.5 கோடியும், 3-வது புத்தகம் 6 கோடியும், 4,5,6-வது புத்தகங்கள் தலா 5.5 கோடியும், 7-வதும் கடைசி புத்தகமுமான "ஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹேலோஸ்' என்ற புத்தகம் முதல் 24 மணி நேரத்தில் 83 லட்சம் பிரதிகளும், மொத்தமாக 5 கோடி பிரதிகளும் விற்றன.

சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்காக எழுதிவரும் ஆயிரக்கணக்கான இன்றைய இளைஞர்கள், மொழிவளத்துடனும், கருத்து வளத்துடனும் சற்று கூடுதலாக உழைத்தால், அவர்களில் பலர் உலகின் சிறந்த எழுத்தாளர்களாக வர முடியும் என்பதோடு, நல்ல வருவாயும் ஈட்டமுடியும். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com