கண்டதும் கேட்டதும் - 22

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இந்தப் பாடலைக் குறித்துப் பேசும்போது அதனைப் பாடிய விதமும், நாதஸ்வரமும், இசை அமைப்பும், ராகத்தையும், தான் மிகவும் ரசித்ததாக பத்திரிகை மூலமாக பாராட்டி இருந்தார்.
கண்டதும் கேட்டதும் - 22

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இந்தப் பாடலைக் குறித்துப் பேசும்போது அதனைப் பாடிய விதமும், நாதஸ்வரமும், இசை அமைப்பும், ராகத்தையும், தான் மிகவும் ரசித்ததாக பத்திரிகை மூலமாக பாராட்டி இருந்தார். அந்தப் பெருமை ஆச்சாரியார் அவர்களையே சேரும்.
மேலும் ஆச்சாரியார் அவர்களின் இசைப் புலமையிலும் நுட்பமான அறிவிலும், நகைச்சுவை உணர்விலும் அவர் மீது ரசிகர்களாகவே இருந்தவர்கள் இயக்குநர் மல்லியம் ராஜகோபால், நடிகர்கள் முத்துராமன், V. கோபாலகிருஷ்ணன், A. வீரப்பன், தனபால், A.K.  வீராசாமி, சாமிக்கண்ணு, பீலிசிவம், இயக்குநர் K.விஜயன் மற்றும் பலர் ஆகும்.
அவரின் இசை அறிவையும், அதில் இருந்த ஞானத்தையும் கூறும் சமயம் அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி T.N. இராஜரத்தினம் பிள்ளை அவர்களால் புகழப்பட்ட தகவலை இங்கு கூற வேண்டும்.
சங்கீதத் துறையில் 72 மேளகர்த்தா ராகங்கள் 32 மேளகர்த்தா ராகங்கள் எனும் கோஷ்டியினர் உண்டு.
அதில் 32 மேளகர்த்தா ராகங்கள்தான் இயற்கை என்றும் மற்ற 40 மேளகர்த்தா ராகங்கள் செயற்கை என்றும் வாதிட்டு, 40 மேளகர்த்தா ராகங்களின் பிரியர்களிடம் மிகப் பெரிய வாக்குவாதம் செய்து, அதை உணர்த்தி பாடல் இசை அமைப்பு உண்டாக்கி தனது "இசைவாரிதி' எனும் நூலில் இடம் பெறச் செய்துள்ளார் ஆச்சாரியார்.
40 மேளகர்த்தா ராகத்தில் ஒன்றான 
இராகம்: வாகதீஸ்வரி
தாளம்: ரூபகம்

பல்லவி
அபஸ்வரமாய் பாடாதே
அவலமதை நாடாதே

அநுபல்லவி
உபய மூன்று ஆகாதே
உலகம் இதனை ஏற்காதே
(அபஸ்வரமாய்)

சரணம்
நிலையில்லா சில பிடிகள்
நினைவாலே மலையாதே
கலையே மகிழ் சம்பந்தன் என்றும்
கணித்து வடித்து எடுத்த கருத்தை மனதில் இருத்தி
(அபஸ்வரமாய்)

சிட்டைசுரம்
திநிச் / நிதிபதிப / மபம குரு சருக
ருகுரு சரு குமா / பதிநிநிச்
ருச்ô நிதிப திபாம குரு பமா குரு சரு
(அபஸ்வரமாய்)

இந்நூலைப் பார்த்ததும், ஆச்சாரியாரின் நிகழ்ச்சியில் அவர் மூலமாகவே பாடி நேரில் கேட்டு நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என். இராஜரத்தினம் பிள்ளை மனமுவந்து அளித்த பாராட்டு மடல்: "சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் சங்கீதத்தில் எந்தக் காரியத்தை எடுத்தாலும் யாரும் அதில் குற்றங்கள் குறைகள் காண முடியாது. அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். தமிழ்நாடு செய்த பாவத்தின் காரணமாக அவரை பிரயோஜனப்படுத்திக் கொள்ளவில்லை.
காலம் சென்ற இசை அமைப்பாளர், பாடலாசிரியர் M.K. ஆத்மநாபன் ஆச்சாரியாரிடம் பல நுட்பமான விஷயங்கள், (ராகநுணுக்கங்கள்) சுருதி பேதம் போன்றவற்றைத் தெரிந்து மகிழ்ந்ததுண்டு.
தற்போது நான் எனது ஆசானின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவிக்கப் போகிறேன். இதனை சிலுமிசம் என்று கூட கூறிக் கொள்ளலாம். அவரிடம் மிகப்பெரிய சங்கீதப் புலமை இருந்தாலும் நகைச்சுவை அவரிடம் கொட்டிக் கிடந்தது. அதனைத் தனக்கே உரிய வகையில் அனைவருக்கும் புலப்படுத்தி தனக்குள் சிரித்துக் கொண்டு நாங்கள் அனைவரும் சிரிப்பதைக் கண்டு மனம் மகிழ்வார்.
நான் அவரிடம் ஒட்டிக்கொண்ட பின் அவரை விட்டுவிட மனம் இல்லாமல் அவருடனேயே சுற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிமிடமும் அவரால் செதுக்கப்பட்டதாகத்தான் வெளி வர அது என்னுள் ஆழப் பதிந்தது. இப்போது நான் என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எனது ஆசானின் வேறு முகம், மிகவும் அழகான ரம்மியமான அனைவரையும் ஈர்க்கும் முகத்தை நான் உங்களுக்குக் காட்ட வேண்டும். அதில் நான் வெற்றி அடைந்து விடுவேன் என்று தான் நினைக்கிறேன். அதற்கு எனது ஆசானின் அருளைக் கேட்டு பெற்று அதனுள் நுழைகிறேன்.
முதலில் எனது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து ஆரம்பிக்கலாமா?
எங்கள் வீட்டில் நடக்கும் எந்த ஒரு விசேஷம் என்றாலும் என் தாய் மாமாவாகிய இயக்குநர் கிருஷ்ணன் முன் வரிசையில் முதல் ஆளாக வந்து அமர்ந்து விடுவார். கூடவே பஞ்சு சாரும் வந்து விடுவார். அவர்கள் மிகவும் எளிமையைக் கடைப்பிடிப்பவர்கள். அவர்களைப் பார்த்தால் திரைப்பட சம்பந்தப்பட்டவர்களாகவே தெரியாது.
என் தந்தை டைரக்டர் அ. பீம்சிங் முதன்முதலில் இயக்கிய "அம்மையப்பன்' என்ற படத்தின் ரிலீசிற்குப் பிறகு எங்கள் வீட்டில் ஒரு சின்ன கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ளும்படி பலருக்கும் போன் செய்து தகவல் தரப்பட்டது. பாடலாசிரியர் மருதகாசி, கலைவாணர் என்.எஸ்.கே போன்றவர்களுடன் அமர்ந்து எங்கள் டைரக்டர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எனக்கு ரொம்ப சிறிய வயது. ஆனால் கம்ப்யூட்டர் மைன்ட். என்ன நிகழ்வு நடக்கிறது? அது எதைப் பற்றி, யாரெல்லாம் என்னென்ன கருத்துகளைக் கூறுகிறார்கள் என்பதை எல்லாம் லாகவமாக தெரிந்து கொள்வேன். ரொம்ப முக்கியமானதை அப்போதே டைரியில் பதிவு செய்து விடுவேன். அப்படித்தான் எனது பெரிய கோடுபோட்ட நோட்டு புத்தகத்தில் எனது தந்தை டைரக்டர் பீம்சிங் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் "பெற்ற மனம்' என்ற படத்திற்கு எழுதிக் கொடுத்த பாடல் இன்றும் காணக் கிடக்கிறது. தேவையற்றதை மனதிலிருந்து வெட்டி எறிந்து விடுவேன். இந்த Editing Knowledge அப்போதே எனக்கு இருந்தது.
டைரக்டர் எடிட்டிங் டேபிளில் வந்து உட்காரும்போதே ஒரு தெய்வீகத்தன்மை அங்கு இருக்கும் என்பது உண்மை. பாடலாசிரியர் மருதகாசி, "அம்மையப்பன்' படத்தைப் பற்றி தன் கருத்துகளைச் சொல்லிப் படம் பற்றிய விமர்சனம் நடந்துகொண்டு இருந்தது. என்.எஸ்.கே. எப்போது பேசப் போகிறார் என பலரும் காத்திருந்தார்கள். அங்கு வந்தவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வருபவர்களுக்கு அந்த நிகழ்வு பற்றிய சிந்தனைதான் இருக்குமே தவிர, ருசியான சாப்பாட்டைப் பற்றி கவலையே இருக்காது. நிகழ்வு ஒரு பக்கம் நடக்க, சாப்பாடு செக்ஷனும் ஒரு பக்கம் அமர்க்களத்தோடு நடந்துகொண்டு இருந்தது. அடுத்து கலைவாணர் பேசப்போகிறார் என்றதும் அங்கு ஓர் அமைதியான சூழ்நிலை நிலவியது.
திடீரென்று பந்தி நடக்கும் இடத்தில் ஒரு பரபரப்பு. அது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஒருவர் அந்தப் பந்தியில் நடுநாயகமாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர் உடுத்தி இருந்தது சாதாரண வேஷ்டி. அதுவும் சற்று அழுக்காகத்தான் இருந்தது. கையிலே ஓர் ஆர்மோனியப் பெட்டி (சிறியது) ஒரு பழுப்பேறிய மேல் துண்டு, பொடி மட்டை, ஒரு அழுக்கு கர்சிப் என சுத்தம் என்றாலே என்னவென்று தெரியாத மனிதராக சோடா புட்டி கண்ணாடியுடன் பார்க்க கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது அவரது உருவம். அவர், ""எனக்கு முதலில் இலையில் சாம்பார் போடு, பிறகு ரஸம் போடு, அதை நான் சாப்பிட்ட பிறகு மோர் கொண்டு வா'' என்றதும் அங்குள்ள எல்லோருமே அம்மனிதரை சற்று வித்தியாசமாக பார்க்கத் தொடங்கினார்கள். அவரோ எதைப் பற்றியும் லட்சியம் செய்யாமல், ""இப்போ வரிசையா கூட்டு, பொறியல், பச்சடி, பாயாசம், நெய், அப்பளம் எல்லாம் கொண்டு வாங்க, சாதம் சூடாகவே இருக்கட்டும்'' என்று எல்லாம் அவரது பேச்சு தொடர்ந்தது. அவருக்கு முறைப்படி அனைத்து வகைகளும் பரிமாறப்பட்டன என்றாலும் அங்கிருந்த அனைவரும் அவரை வித்தியாசமாகவே பார்த்துக் கொண்டிருந்தனர்.
பந்தியில் நடந்த பரபரப்பான சம்பவம் எதற்காக நடந்தது என்பது கலைவாணர் என்.எஸ்.கே.க்கு மட்டுமே புரிந்தது. கலவரம் நிகழ்த்திய அவர் பக்கத்தில் போய் கலைவாணர் அமர்ந்து அவருக்கே உரிய பாணியில், ""ஓஹோ அப்படியா சமாசாரம்!'' என்று கூறி தன் நகைச்சுவைப் பேச்சைத் துவங்கினார். 
""நீங்க எல்லாம் இவரைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைஞ்சீங்கங்கிறது எனக்குப் புரிஞ்சுது. அதுக்கு நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஏன்னா இதுக்கெல்லாம் நான்தான் காரணம். இவரை இங்க கூட்டிட்டு வந்ததே நான்தான். இவர் ஒரு பெரிய இசைமேதை. இவரை நான் இங்க உள்ள யாருக்குமே அறிமுகப்படுத்தலே, அதுதான் இவரோட கோபத்துக்கு காரணம்.''
""அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா, நீ பாட்டுக்கு அவங்ககூட போய் மேடையிலே உக்காந்துகிட்ட, நான் ஒருத்தன் இங்க யாருக்குமே என்னைத் தெரியாத நிலை. நான் ஏதோ ஓசியில சாப்பிட வந்திருக்கிறவன்னு இங்கு வந்திருக்கிறவங்க எல்லாம் நினைச்சிடக் கூடாது இல்லே... அதுக்காகத்தான் இப்படி ஓர் அமர்க்களத்தைப் பண்ணினேன். இப்ப எல்லோருக்கும் என்னைப் பற்றி தெரிஞ்சிருக்குமில்லே'' என்று சிரித்துக்கொண்டே கூறினார் அந்த இசை அரசர், எனக்கோ என் இசை ஆசான்.
அதற்கு என்.எஸ்.கே., ""அறிமுகம் தேவைதான். இருந்தாலும் உன்னுடைய அறிமுகம் வந்தவங்களுக்கு ஒரு ஷாக்தான். சரி அது போகட்டும். இங்க நம்ம பீம்சிங் வீட்டிற்கு வந்திருக்கிறவங்களுக்காக ஒரு நல்ல பாட்டை பாடிடேன்'' என்று கேட்டுக்கொண்டதும் அவர் ஒரு பாடலைப் பாட மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல எல்லோரும் "கப்சிப்' என்று இருந்தார்கள். அவர் ஓர் இசைப் பேராசிரியர்தான் என்பது அவர் பாடியபோதே கன்பார்ம் ஆகியது.
அன்று முதல் நான் அவரிடம் இசை கற்றுக்கொள்ளும் மாணவன் ஆனேன். அவர் கொரட்டூரில் இருந்து காலையில் புறப்பட்டு வந்துவிட்டால், T.K. ஷண்முகம் மகள், கலைவாணன், சகஸ்ரநாமம் மகன், S.V.S.  குமார் ஆகியோருடன் எனக்கும் இசையை முறைப்படி சொல்லிக் கொடுத்த மேதை அவர்.
என் மனதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கும். அதற்கு விடை தேடிக்கொண்டே இருப்பேன். அதற்கான விடை வரும் வரை அதனைவிடப் போவதில்லை. விடை கிடைத்ததும்தான் மனம் சாந்தமடையும்.
அப்படித்தான் ஒருநாள் அவரைப் பார்த்து ""நீங்க ஏன் இவ்வளவு ன்ஞ்ப்ஹ் யா (அகோரமா) இருக்கீங்கன்னு'' கேட்டு வச்சேன். அதற்கு அவர் என்னைப் பார்த்து, ""அ... எங்க அப்பா அம்மாகிட்ட கேளு'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் அப்படி இருந்தாலும் அவரது இசை அழகாகவே இருக்கும். அந்த சர்வேஸ்வரனே மகிழ்ந்து, ""வெல்லமிது, வெல்லமிது'' என்று போற்றுவார்.
இது கலைவாணர் என்.எஸ்.கே.க்கு ஏற்பட்ட சோதனை. இப்போது நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு ஏற்பட்ட சோதனையைப் பார்ப்போமா?
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com