கண்டதும் கேட்டதும் - 23

இரத்தக் கண்ணீர்' திரைப்படத்திற்கு எனது தாய் மாமா டைரக்டர் கிருஷ்ணன் (பஞ்சு) ஒரு திருப்புகழுக்கு இசை அமைத்துத் தர ஆச்சாரியாரை ஏற்பாடு செய்திருந்தார்.
கண்டதும் கேட்டதும் - 23

இரத்தக் கண்ணீர்' திரைப்படத்திற்கு எனது தாய் மாமா டைரக்டர் கிருஷ்ணன் (பஞ்சு) ஒரு திருப்புகழுக்கு இசை அமைத்துத் தர ஆச்சாரியாரை ஏற்பாடு செய்திருந்தார். அவரும் சம்மதித்து நீண்ட பெரிய "ராமேசுரம்' என்னும் திருப்புகழை மெட்டமைத்துக் கொடுத்தார்.
வால வயதாகி யழகாகி மதனாகி
பணி வாணிப மொடாடி மருளாடி
விளையாடி விழல்
வாழ்வு சதாமாகி வலுவாகி
மட கூடமொடு பொருள் தேடி
இப்பாடல் இராகமாலிகாவில் வருகின்றது. முதல் பகுதி சாமா ராகத்தில் இருக்கும். இதனை படத்தில் சி.எஸ். ஜெயராமன் பாடினார். அந்தப் படத்தில் எல்லாம் இழந்து வயதாகி வீதியில் நடிகவேள் எம்.ஆர். ராதா நடந்து போகும்போது இப்பாடல் வரும். இது மனசாட்சி பாடல். இப்பாடல் அப்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.
இந்தப் பாடலுக்கான வேலையைத்தான் ஆச்சாரியார் ஸ்டூடியோவிற்கு வந்து செய்து கொண்டிருந்தார். உங்களுக்கு ஏற்கெனவே
ஆச்சாரியார் எப்படி இருப்பார்ன்னு சொல்லியிருக்கேன் இல்லையா? சரி மீண்டும் சொல்லிடறேன். அவர் மிகவும் ஒல்லியான தேகம். கறுப்பான கலர். இதிலே அன்றைக்கு அவர் தனது சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு அந்தப் பாடலுக்கான வேலையைச் செய்து கொண்டிருந்த போது தான் அந்தப் படத்தின் கதாநாயகன் நடிகவேள் எம்.ஆர். ராதா ஸ்டூடியோவின் உள்ளே வந்தார். அவர் சிகரெட் பிடிப்பதிலே மன்னன். எப்போதும் அவரின் விரல்களின் இடையில் அந்த வெள்ளை சுருட்டு புகைந்துகொண்டே இருக்கும். தன் பாக்கெட்டில் கைவிட்டவர் சிகரெட் இல்லாததைக் கண்டு துணுக்குற்றுச் சுற்று முற்றும் பார்த்தார். அப்போதுதான் அவர் கண்களுக்கு சட்டையைக் கழற்றி வைத்துக்கொண்டு பாடலுக்கான வேலையைச் செய்து கொண்டிருந்த நமது கதாநாயக ஆச்சாரியார் பட்டார்.
யாரோ வேலைக்கார பையன் போலும் என நினைத்து, ""ஹலோமேன், ஒரு டப்பா சிகரெட் வாங்கி வாரும்'' என்று இரண்டு ரூபாயை ஆச்சாரியார் அவர்களிடம் கொடுத்தார். இரண்டு ரூபாய் இன்றைய கணக்கில் ஐநூறு ரூபாய்க்கும் அதிகமான மதிப்பாகும்.
ஆச்சாரியாரும் அதனை பவ்வியமாகப் பெற்றுக்கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் வந்தவர், தனது வீடு இருந்த பெரம்பூருக்கு வந்து அந்தப் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து "அரிசி வாங்கு, பருப்பு வாங்கு, எண்ணெய் வாங்கு மற்றும் என்ன வேண்டுமோ அதெல்லாம் வாங்கிக் கொள்' என்று கூறிவிட்டு ஸ்டூடியோவிற்குப் போகாமல் வீட்டிலேயே தங்கி விட்டார்.
நேரம் செல்லச் செல்ல சிகரெட் டப்பா வராததால் நடிகவேள் எம்.ஆர். ராதா கோபமுற்று டைரக்டர் கிருஷ்ண(பஞ்சு)னிடம் ""இங்கே ஒல்லியாக இருந்த ஆளிடம் சிகரெட் டப்பா வாங்கித்தர பணம் கொடுத்தேன். இன்னும் சிகரெட் வாங்கி வரவில்லையே'' என்று கோபத்துடன் கேட்க, டைரக்டர் கிருஷ்ண(பஞ்சு)னுக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஆச்சாரியாரைத்தான் இவர் வேலைக்காரப் பையன் என்று எண்ணி பணம் கொடுத்துள்ளார் என்று திகைத்து, அவர் யார் என்று கூறி உம்மைப்போல அவரும் வம்பு பிடித்த மனுஷன்தான். இன்று வரமாட்டார் என்று சிகரெட் டப்பாவுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தார்.
மறுநாள் ஆச்சாரியாரைப் பார்த்து நடிகவேள் எம்.ஆர். ராதா, ""ஹலோமேன், என்னை மாதிரியே குணம் உனக்கு'' என்று பாராட்டி நட்போடு பழகி வந்தார். பல சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்களின் நட்பில் இடைவெளி விழுந்துவிட்டது.
அது சரி... இவ்வளவுதான் நெனைச்சிட்டீங்களா? இன்னும் இருக்கு!
என் விளையாட்டுப் பருவத்தைப் பற்றி நான் உங்களிடம் முன்னரே மிகவும் அதிகமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சிறுவர்களின் மேல் ஏறி கொடுக்காபுளிக்கா பழத்தைப் பறித்து தின்றது. தேன் மிட்டாய் சாப்பிட்டது. படிக்கிறேன் என்று கூறி சுடுகாட்டுக்குச் சென்று அங்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து, பயந்து ஜுரம் வந்தது. எனது அவ்வா (ஆயா) வீட்டில் அளிக்கப்படும் அசைவ உணவைக் கொண்டு வரும்போது எனக்குள் ஏற்படும் பயத்தைப் போக்கிக் கொள்ள பாட்டு பாடிக் கொண்டே ஓடி வந்தது, காற்றாடி விட்டது என்று அனைத்தும் உங்களுக்குக் கூறி இருக்கிறேன். அடுத்து எனது கற்றுக்கொள்ளும் பருவமான 14-ஆம் வயதில் என் தந்தை டைரக்டர் பீம்சிங் எனக்கு செய்த உதவி என்னை சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் வசம் ஒப்படைத்தது ஆகும்.
நான் 16-ஆம் வயதில் பம்பாய் சென்று அங்குள்ள சாந்தாராம் ஸ்டூடியோவில் சேர்ந்ததும் உங்களுக்குத் தெரியும்.
அந்த இடைப்பட்ட காலத்தில் நான் எனது ஆசான் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரிடமே இருந்தேன். 14 வயதில் ஒரு மாபெரும் மகானிடம் அதுவும் ஆசிரியருடன் இருந்தேன் என்றால் என் மன தைரியத்தை நீங்கள் சிறிது நினைத்துப் பார்க்க வேண்டும்.
பல மாணவர்கள் ஆசிரியரிடம் பாடம் கற்றுக்கொள்வதை ஒரு வேதனையாகவே பார்க்கும் இந்த காலத்தில் நான் அவருடனேயே ஒண்டிக் கொண்டேன். அவரை விட்டு அகல என் மனம் மறுக்கும்.
தினமும் மாலை அவர் வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் எனக்கு பாட்டு கற்றுக்கொடுக்க அவர் வரும் வரை அவர் நினைவாகவே இருந்தேன். அவரையே நினைத்துக் கொண்டிருந்ததால் நான் அவராகவே மாறிவிட்டேனோ என்று கூட நினைப்பேன்.
பாரதியின் கண்ணனைப்போல் அவர் எனக்கு குழந்தையாக, நண்பனாக, வேலைக்காரனாக, ஆசிரியனாக, தாயாக, தந்தையாக இன்னும் இன்னும் என்னென்ன பரிமாணங்கள் இருக்கின்றதோ அதனைப்போல் எல்லாமாக எனக்கு அவர் தோற்றமளித்தார்.
அவர் என்னிடம் பேசுவதுகூட ராகமாக எனக்குத் தெரிந்தது. அவர் சிரிப்பது எனக்கு இசையாக ஒலித்தது. அவர் தனது கண்ணால் என்னைப் பார்ப்பது எனக்குள் ஒரு விசேஷ சந்தோஷத்தைக் கொடுக்கும் பாவமாக தெரிந்தது. அவர் கரம் பிடித்துக்கொண்டு நடப்பது வானில் சிறகடித்துப் பறக்கும் பறவையாய் என்னுள் மகிழ்ச்சி அளித்தது. நான் பம்பாய் மட்டும் செல்லாமல் இருந்திருந்தால் அவருடன் சேர்ந்து வாழ்பவனாகக் கூட ஆகி இருப்பேன்.
இப்போது அவர் என்னோடு இருந்துகொண்டு செய்த விளையாட்டுகளை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அந்த என் சிறுவயதில் அது விளையாட்டாகவும் தற்போது யோசிக்கும்போது வாழ்க்கையைப் படிக்கும் திறவுகோலுமாக உள்ளது.
நாடகமே உலகம்தான். எனக்கோ உலகமே - விளையாட்டுதான். இந்தியில் ஒரு சொலவடை, ""தேக்லோ ஏ தமாஷா''. இதன் அர்த்தம், "பார்ப்போம் இந்த விளையாட்டை' ஆகும். இந்தி சினிமா பட டைரக்டர்களோ, புரொடியூஸர்களோ இதைப் படித்தால் உடனே தங்களின் படத்திற்கு டைட்டிலாக வைத்து விடுவார்கள். படமும் ஓடோ ஓடு என்று ஓடும். அவர்களுக்கு "தமாஷா' என்றாலே செக்ஸ் என்றுதான் அர்த்தம். ஆகவே படம் ஓடோ ஓடு என்று ஓடும்.
... ஆ ... ஆ... (சிரிப்பு)
""சிரிப்பு வருது, சிரிப்பு வருது,
சிரிக்க சிரிக்க
சிரிப்பு வருது''...
சந்திரபாபுவின் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஒருமுறை நானும் சம்பந்தமூர்த்தி ஆசானும் வெளியூருக்குச் செல்ல ட்ரெயினில் ரிசர்வேஷன் செய்திருந்தோம். எனக்கோ மேல் பெர்த் போட்டிருந்தார்கள். ஆச்சாரியாருக்கோ எதிர்வரிசையில் கீழ் பெர்த் கிடைத்திருந்தது.
அவருக்கோ நான் சிறுவன் ஆயிற்றே. தூக்கத்தில் புரண்டு கீழே வீழ்ந்துவிட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் அவர் என்னைப் பார்த்து ""கீழே உள்ள இருக்கையிலே படுத்துக் கொள்'' என்று கூறினார். நான் அவரிடம், ""எனக்கு மேலேதானே படுக்கை இருக்கிறது. நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன்'' என்றேன். அன்றிலிருந்து இன்றுவரை சிறுவர்களுக்கு மேலே ஏறி படுத்துக் கொள்வதுதான் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால் அவரோ, ""இல்லை இல்லை நீ கீழேயே படுத்துக் கொள்'' என்று கூறிவிட்டார்.
நானும் கீழே உள்ள பெர்த்தில் படுத்துக் கொண்டேன். டிரெயின் புறப்படும் சமயம் ஒருவர் மிகவும் கனமான உடம்பு உடையவர் உள்ளே வந்து என்னைப் பார்த்து, ""தம்பி இது என்னோட பெர்த், நீ உனக்கு எங்கு பெர்த் உள்ளதோ அங்கே சென்று படுத்துக் கொள்'' என்று கூறினார்.
ஆச்சாரியார் அவரைப் பார்த்து, ""இல்லங்க சின்னப் பையன். மேலே படுத்தா புரண்டு கீழே விழுந்துவிடுவான். நீங்க மேலே போய் படுத்துக்கங்களேன்'' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தப் பெரியவரோ அதற்குச் சிறிதும் ஒத்துக் கொள்ளாமல், ""எனக்கான இடம் இது. இங்கே தான் நான் படுத்துக்குவேன்'' என்று கறாராக கூறி விட்டார்.
உடனே நானும் மேலே ஏறி படுத்துக் கொண்டேன். வண்டி புறப்பட்டு சில நிமிடங்கள் கழித்து எனது ஆசான் என்னைப் பார்த்து, ""லெனின் நீ வீட்டுல தூங்கும்போது மூத்திரம் போற மாதிரி, இப்பவும் போயிடாதடா'' என்று உரத்தக் குரலில் கூறினார். படுத்துக் கொண்டிருந்த பெரியவர் திடுக்கென்று ஆச்சாரியாரைப் பார்த்தார். அதன் பின் மேலேயே பார்த்தபடி இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அந்தப் பெரியவர் என்னைப் பார்த்து, ""தம்பி நீ
கீழேயே படுத்துக் கொள். என்ன ரோதனையா போச்சு'' என்று கூறி எழுந்தவர் நான் கீழே இறங்கியதும் மேலே ஏறி படுத்துக் கொண்டார்.
கீழே இறங்கிய நான் எனது ஆசானைப் பார்த்து மெல்லிய குரலில், ""நான் எப்ப வீட்டுல மூத்திரம் போனேன்'' என்று கேட்க அவர் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து கண்ணைச் சிமிட்டினார்.
அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. இது எனது ஆசானின் தந்திரம் என்று. நானும் கீழேயே படுத்துக்கொண்டு அவருடன் உரையாடிக்கொண்டே வந்தேன். இதை இப்போது சினிமாவில் சீனாக வைத்தாலும் எல்லோரும் சிரிப்பார்கள்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com