சரகர்: பாரத மருத்துவத்தின் தந்தை!

மனிதரின் ஆயுளைக் காக்கும் கலை என்ற பொருள் கொண்ட ஆயுர்வேத மருத்துவத்தின் வயது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. பொது யுகத்துக்கு 2,000 ஆண்டுகள் முந்தைய அதர்வண வேதத்திலேயே ஆயுர்வேத மருத்துவம்
சரகர்: பாரத மருத்துவத்தின் தந்தை!

மனிதரின் ஆயுளைக் காக்கும் கலை என்ற பொருள் கொண்ட ஆயுர்வேத மருத்துவத்தின் வயது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. பொது யுகத்துக்கு 2,000 ஆண்டுகள் முந்தைய அதர்வண வேதத்திலேயே ஆயுர்வேத மருத்துவம் குறித்த குறிப்புகள் உள்ளன.
பண்டைய பாரதத்தில் நால்வேதங்களை அடுத்து உபவேதமாகவே ஆயுர்வேதம் கற்பிக்கப்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவே இதனை மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு உபதேசித்ததாகவும், பிறகு வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு, புனர்வசு ஆத்ரேய மகரிஷியிடம் சேர்ந்தது. அவர், அக்னிவேஷர், பேலர், ஜாதுகர்ணர், பராசரர், ஹரிதர், க்ஷரபாணி ஆகிய தனது 6 சீடர்களுக்கு அதைக் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. அவை ஆறு விதமான குருகுலங்களாகப் பயிலப்பட்டன.
அவர்களுள் ஒருவரான அக்னிவேஷர் ஆயுர்வேதத்தின் கிரந்தப் பதிவுகளை முதல் முறையாக அக்னிவேஷ தந்திரமாகத் தொகுத்தார். ஆயுர்வேதத்தின் ஆறு பள்ளிகளையும் பரிசீலித்த சரகர், அவர்களுள் முதன்மையானவராக அக்னிவேஷரைக் கொண்டு, அவரது வழி நின்று, அக்னிவேஷரின் நூலைச் செம்மைப்படுத்தி, "சரக சம்ஹிதை' என்ற நூலாக்கினார். அதுவே இன்றைய ஆயுர்வேத மருத்துவத்துக்கு வழிகாட்டும் நூலாக உள்ளது. எனவேதான் சரகர் "பாரத மருத்துவத்தின் தந்தை' என்று வர்ணிக்கப்படுகிறார்.
சரக மகரிஷி பொது யுகத்துக்கு முந்தைய 300 ஆண்டுகளில் வாழ்ந்தவர் என்று மதிப்பிடப்படுகிறது. மற்றொரு ஆயுர்வேத மேதையான சுஸ்ருதர் (பொ.யு.மு. 600) காலத்தால் சரகருக்கு முற்பட்டவர்.
பஞ்சநதி பாயும் கபிஸ்தலத்தில் (தற்போதைய பஞ்சாபின் கபூர்தலாவில்) பிராமண குடும்பத்தில் பிறந்தவர் சரகர். நாடு முழுவதும் அலைந்து மக்களுக்கு சிகிச்சை அளித்தவர் என்ற பொருளிலேயே அவருக்கு "சரகர்' என்ற பெயர் ஏற்பட்டது. அவரைப் பற்றிய விரிவான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் தொகுத்த "சரக சம்ஹிதை' அவரைக் காலம் உள்ள வரை நிலைக்கச் செய்துவிட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ராணுவ அதிகாரியாக இருந்த ஹாமில்டன் பாவர் என்பவர், 1890}இல் சீனாவின் குச்சா பகுதியில் சிதிலமடைந்திருந்த புத்த மடாலயத்தில் கிடைத்த பனையோலைச் சுவடிகளை மீட்டு வந்தார். அவை பாவர் ஓலைச்சுவடிகள் (Bower Manuscript) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்ததில் அவை பாரத மருத்துவ சாஸ்திரமான ஆயுர்வேதம் சார்ந்த சுவடிகள் என்பதும், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுலோகங்கள் அவை என்பதும் தெரிய வந்தது. அவற்றை அவர் பண்டிதர்களைக் கொண்டு தொகுத்தபோது, ஆயுர்வேதத்தின் மகிமைகள் தெரிய வந்தன. அதில் மூன்றுவித ஆயுர்வேத பாடங்கள் இருந்தன. அதில் ஒன்று "சரக சம்ஹிதை'.
பல நூற்றாண்டுகளாக "சரக சம்ஹிதை' வாய்மொழியாகவும் பரம்பரையாகவும் பயிலப்பட்டு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தபோதும், அதை ஓர் ஆவணமாக அறிய உதவியது இந்த பாவர் ஓலைச்சுவடிகள்தான். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது, ஆயுர்வேதத்தின் மகிமையை உலகம் உணர்ந்தது. உடலியல், நோயியல், சிகிச்சை முறைகள், மூலிகைகள் உள்ளிட்ட பல அற்புதத் தகவல்களை அதில் கண்ட வெளிநாட்டினர் வியந்தனர்.
சரக சம்ஹிதை: ஆயுர்வேதத்தின் முப்பெரும் நூல்களாக கருதப்படுபவை, சரகரின் சரக சம்ஹிதை, சுஸ்ருதரின் சுஸ்ருத சம்ஹிதை, வாக்பட்டரின் (பொ.யு. 500) அஷ்டாங்க ஹிருதயம் ஆகியவை. இவற்றில், அக்னிவேஷ தந்திரத்தை முதல் நூலாகக் கொண்டு, சரகர் எழுதித் தொகுத்ததே சரக சம்ஹிதை. இதனை பொ.யு. 600}இல் வாழ்ந்த திருதபாலர் செம்மைப்படுத்தினார்.
சூத்திர ஸ்தானம், நிதான ஸ்தானம், விமான ஸ்தானம், சரீர ஸ்தானம், இந்திரிய ஸ்தானம், சிகிக்ஷா ஸ்தானம், கல்ப ஸ்தானம், சித்தி ஸ்தானம் ஆகிய 8 பிரிவுகளில், 120 அத்தியாயங்களுடன், 12,000 சுலோகங்களுடன் எழுதப்பட்டது சரக சம்ஹிதை. இதில் 2,000 விதமான மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உடலின் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நோய் பாதிப்புகளை விளக்கி, அவற்றுக்கு ரசாயனக் கலப்பற்ற மூலிகை மருந்துகளை சரகர் குறிப்பிட்டிருக்கிறார். நோய்களின் விளக்கங்களும், மருந்து உட்கொள்ளும் வழிமுறைகளும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரபஞ்சத் தோற்றம், உடலியல் (Physiology), மனிதக் கரு உருவாதல், கருவின் வளர்ச்சி நிலைகள் (Embryology), நோய்களின் காரணிகள் (Etiology), நோய்க் குறிகள் (Pathology), தற்காப்பு முறைகள், ஜீரண மண்டலம் (Digestion), பத்தியம், சத்தான உணவு முறைகள் (Nutrition), காலச் சுழற்சி, உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism), மரண அறிகுறிகள், மருந்து வகைகள் (Drugs) உட்பட மருத்துவத்தின் பல அங்கங்களும் விரிவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
நமது உடலில் 360 எலும்புகள் உள்ளன என்பது சரகரின் கருத்து (பிறக்கும் போது 260 எலும்புகளும், முதிய வயதில் 206 எலும்புகளும் மனித உடலில் காணப்படுவதாக நவீன மருத்துவம் கூறுகிறது). உடலின் இயக்கத்துக்கு மையமாக இருப்பது இருதயமே என்பதும், அதிலிருந்து செல்லும் 13 ரத்த நாளங்களே உடலை இயக்குகின்றன என்பதும், சரகரின் முக்கியமான அவதானிப்பு.
ஆயுர்வேதத்தின்படி, உடலில் உள்ள முப்பெரும் தோஷங்களே நோய்களுக்குக் காரணம். அவை: வாதம் (நரம்பு மண்டலம்), பித்தம் (உணவு மண்டலம்), கபம் (சுவாச மண்டலம்) ஆகியவை. இவற்றில் ஏற்படும் மிகை, குறைகளைப் பொருத்தே மனிதரின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. நோய் வரும் முன் காப்பதே சாலச் சிறந்தது என்கிறார் சரகர்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும், உடலில் நாம் உண்ணும் உணவுடன் வினை புரிந்து, ரத்தம், சதை, எலும்பு மஜ்ஜையாக உருமாறுகின்றன என்கிறார் சரகர். அவற்றின் விகிதத்தைப் பொருத்தே மனிதரின் ஆரோக்கியம் மாறுபடுகிறது. கர்ப்பக் காலத்தில் மரபுசார்ந்த பிரச்னைகளால் (விந்தணு, கரு முட்டையின் குறைகளால்) குழந்தை குறைபாடுகளுடனோ, ஊனமாகவோ பிறக்கிறது என்று கூறும் சரகர், குழந்தை ஆணா, பெண்ணா என்பதையும் முன்கூட்டியே கணிக்க முடியும் என்கிறார்.
காய சிகிச்சை (மருந்தியல் மருத்துவம்), பால சிகிச்சை (குழந்தை மருத்துவம்), பூத வித்யை (மனநல மருத்துவம்), ஊர்த்துவாங்க சிகிச்சை (கண்}காது} மூக்கு மருத்துவம்), சல்ய தந்திரம் (அறுவை சிகிச்சை), அகத தந்திரம் (விஷ சிகிச்சை) ஆகிய ஆறு பிரிவுகளில் நோய்களை வகைப்படுத்தி அவற்றுக்கு தீர்வு கூறுகிறார் சரகர்.
""அறிவின் வெளிச்சத்தால் நோயாளியின் உடலை அறியத் திறனற்ற வைத்தியனால் நோய்களை குணப்படுத்த இயலாது. அவன் முதலில் நோயின் காரணங்களையும், சுற்றுச்சூழலையும் அறிய வேண்டும். அதன் பிறகே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். நோய்த் தடுப்பே, அதை குணப்படுத்துவதை விட முதன்மையானது'' என்பது சரக சம்ஹிதையின் ஒரு பொன்விதியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com