எங்கெங்கும் கணிதம்!

என் பிள்ளைக்கு கணக்கு வராது.. அதனால், பத்தாம் வகுப்புவரை அதில் பாஸ் மார்க் எடுத்துவிட்டால், பிறகு மேல்படிப்பில் அறிவியல், வரலாறு, புவியியல் என ஏதாவது ஒன்றில் சேர்த்துவிடலாம் என இருக்கிறேன்''
எங்கெங்கும் கணிதம்!

என் பிள்ளைக்கு கணக்கு வராது.. அதனால், பத்தாம் வகுப்புவரை அதில் பாஸ் மார்க் எடுத்துவிட்டால், பிறகு மேல்படிப்பில் அறிவியல், வரலாறு, புவியியல் என ஏதாவது ஒன்றில் சேர்த்துவிடலாம் என இருக்கிறேன்'' என சொல்லும் பெற்றோர்கள் அதிகம். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை ஓரளவு இது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. 
ஆனால், இன்றையச் சூழ்நிலை அவ்வாறு இல்லை. 
கணிதத்தில் ஒரு கேள்விக்கு விடையளிக்கும் போது, அதன் முக்கியப் பகுதியைக் கண்டறிந்து, அந்த இடத்தில் நம்முடைய அறிவையும், திறனையும் பயன்படுத்தி விடையை எண்களாக வெளிப்படுத்துவோம். இதே சூத்திரம்தான் வேலையளிப்போருக்கும் தொழிலாளர்களிடம் இருந்து தேவைப்படுகிறது. கணிதக் கேள்வியை கையாளத் தெரிந்த ஒருவரால், எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியும் என்பதுதான் கணிதப்பாடம் அளிக்கும் பயிற்சி.
சிக்கலான யோசனைகளை தெளிவாகவும், குழப்பமற்ற நிலையிலும் எடுத்துரைக்க கணிதம் உதவும். அறிவியல், வணிகம் உள்ளிட்ட எதைச் சார்ந்தவர்களும் கணிதத்தைப் பயன்படுத்தி சிக்கலான சூழல்களை விளக்கவும், லாபம், நஷ்டங்களை சொல்லவும் முடியும். எண்களை மாற்றியமைப்பதன் மூலம், தரவு விளக்கங்களை கையாண்டு தீர்வுகளைக் கொண்டுவர கணிதம் கற்றுக்கொடுக்கும்.
தரவுகளைக் கையாளுதல், விளக்கம், ஆய்வு போன்ற திறன்கள் எந்தப் பணியிலும் பயன்படுபவை என்பதால், நாம் கணிதம் படித்திருந்தால் வேலை அளிப்போரால் அங்கீகரிக்கப்படுவோம்.
கணினி விடியோ கேம்களில் பெருமளவு கணிதப் பயன்பாடுகளே காரியமாற்றுகின்றன. இந்த விளையாட்டுகளின் அனைத்து நிலைகளிலும் முப்பரிமாண கணிதப் பொருள்களே இடம்பெற்றுள்ளன. கணித சமன்பாட்டு மாதிரிகளே இந்தப் பொருள்கள் இயற்கையாக உள்ளதைப்போல காட்டுகின்றன.
மேலும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் திட்டம், வன்பொருள், வடிவமைப்பு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட பல நிலைகளிலும் கணிதம் பயனாகிறது. மருத்துவத் துறையில் மருத்துவப் புள்ளியியலாளர், புதிய மருந்துகள், மருத்துவச் சிகிச்சைகள் பலனளிப்பதாக உள்ளனவா
என சோதனையில் ஈடுபடும்போது, இந்த முடிவுகள் அனைத்தும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. நோய் பாதிப்பு, நோய் வளர்ச்சி, நோய் பரவுதல், மருந்து எடுத்துக் கொள்ளும் காலம் போன்ற மருத்துவ ஆராய்ச்சி முழுவதுமே கணிதம் உள்ளது.
ஒலி மென்பொருள் பொறியாளரின் டிஜிட்டல் சிக்னல் செயல்பாடுகளில் முழுவதும் கணிதமே உள்ளது. இன்றைய இசையில் தொகுப்பாளர்கள் மற்றும் எண்ம செயல்பாட்டாளர்கள் ஒலியின் தொனியைச் சரிசெய்தும், சிறப்பு சப்தங்களை சேர்த்தும் வழங்குகின்றனர். இவை அனைத்தும் ஃபோரியர் பகுப்பாய்வு என்ற கணித நுட்பத்தின் மூலமே சாத்தியமாகிறது. இதேபோன்ற டிஜிட்டல் சிக்னல் செயல்பாடுகள்-பேச்சு ஏற்பு, பட விரிவாக்கம், தரவு சுருக்கம் உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
வானியல் அறிஞர்களும் கணிதத்தின் அடிப்படையிலேயே தட்பவெப்ப நிலைகளை கணித்து கூறுகின்றனர். நம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், தட்பவெப்ப நிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் கணிதக் கணிப்புகளே. எண் பகுப்பாய்வு மற்றும் கணினி மாதிரி நுட்பங்கள் மூலம் குறுகிய கால மற்றும் நீண்டகால முன்னறிவிப்புகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.
போக்குவரத்துத்துறையில் வாகனங்களின் வடிவமைப்பு, காற்றின் நகர்வு குறித்த கணிதவியல் ஆய்வின் அடிப்படையிலேயே அமைகின்றன. இது காற்றியக்கவியல் என அழைக்கப்படுகிறது. இதுவே, விமானம், ராக்கெட் போன்றவற்றிலும், போட்டிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை மேம்படுத்துவதிலும் பயனாகிறது.
அதேபோன்று, கணித அறிஞர்கள் கணிதம் மற்றும் புள்ளியியலை பயன்படுத்தியே ஒரு நிறுவனத்தின் எதிர்கால நிதிநிலை குறித்த அறிக்கையை அளிக்கின்றனர். இது பெரிய நிறுவனங்களின் திட்டமிடலுக்கு பயனாகிறது. மேலும், வங்கிகள், பங்கு வணிகம், பொருளாதார முன்னறிவிப்புகள் போன்றவற்றுக்கும் கணிதமே மூலாதாரம்.
பனிச்சரிவு ஆய்வாளர்கள் கணிதத்தை ஒரு பகுதியாகக் கொண்ட திரவ இயக்கவியலைப் பயன்படுத்தியே பனிச்சரிவு எவ்வாறு ஏற்படுகிறது, அதை முன்கூட்டியே கணித்து அறிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம், எரிமலை வெடிப்புகள், கடல் நீரோட்டங்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவை மட்டுமல்லாமல், இன்று இளைஞர்கள் எதிர்நோக்கும் வேலைவாய்ப்புகள் அனைத்துமே ஏதேனும் ஒருவகையில் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன. அது கணிதம் என்றோ, புள்ளியியல் என்றோ மாறுபட்ட பெயர்களில் இருக்கலாம். எந்தச் சூழலிலும் நம்முடைய கணித அறிவை வெளிப்படுத்தாமல் வேலை பெறஇயலாது. 
தற்போது, மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் மாணவர்களின் கணித அறிவை சோதிப்பதற்கான வினாக்கள் இருப்பதை நாம் பார்க்க முடியும். எனவே, கணிதம் வராது என்பதற்காக மாற்றுப்பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துவது எந்தச் சூழ்நிலையிலும் பயன்தராது. பயிற்சி அனைத்தையும் சாதிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com