கண்டதும் கேட்டதும் - 16

1975-1974-க்குப் பிறகு ஏ.பீம்சிங் டைரக்ஷன் செய்த "சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை சென்னை உரிமை வாங்கி நல்ல பணம் சேர்ந்தது.
கண்டதும் கேட்டதும் - 16

1975-1974-க்குப் பிறகு ஏ.பீம்சிங் டைரக்ஷன் செய்த "சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை சென்னை உரிமை வாங்கி நல்ல பணம் சேர்ந்தது. (1944 அன்னை இல்லம், விடிவெள்ளி, பதிபக்தி, பாசமலர் முதலிய படங்களை NSE ஏரியா வாங்கினார்) படம் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் நாணயத்துடன் தொழில் செய்தார். 1972-இல் "தங்கதுரை' படத்தைத் தயாரித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. விநியோகஸ்தர்களுக்கும் ரொம்ப நஷ்டம் ஏற்பட்டது. விநியோகஸ்தர் நஷ்டம் அடையக் கூடாது என்ற நினைப்பில் சில விநியோகஸ்தர்களும் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பெருமை, பெருமாள் முதலியாருக்கு உண்டு. இதன் பிறகு பெருமாள் முதலியார் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அதில் வெற்றி கண்டார். 1974-க்குப் பிறகு படம் தயாரிக்கவில்லை. மறுபடியும் சேலம் ஏரியாவுக்கு பாரதிராஜா படங்களை விநியோகம் செய்தார். 
கமலஹாசன் நடித்த படங்களை சேலம் ஏரியாவுக்கு வாங்கினார். "16 வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', கமல் நடித்த "சிகப்பு ரோஜாக்கள்', "சட்டம் என் கையில்', "இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தை வாங்கி நல்லபடியாக தொழில் நடந்து வந்த வேளையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இருதய நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு சிறிது காலம் படங்கள் வாங்கவில்லை. 
1978 டிசம்பர் 7-ஆம் தேதி இறையருள் அடைந்தார். அவர் மறைவுக்கு எல்லா சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். சிவாஜி கணேசன் கடைசி நிகழ்ச்சி வரையிலும் கலந்து கொண்டது எல்லோர் மனதிலும் நின்றது. அதன் பிறகும் சிவாஜி குடும்பத்தார் எங்கள் குடும்பம் மீது பற்றும் பாசமுமாக இருந்தார்கள். பி.ஏ. பெருமாள் முதலியார் மனைவி பி. மீனா அம்மாள் 9.4.2014-இல் மறைந்து விட்டார்கள். அவர்கள் நினைவாக நாங்கள் வாழ்ந்து 
வருகிறோம். 
பெருமாள் முதலியார், திராவிடக் கட்சி பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஆர் ராதா, கே.வீரமணி, கண்ணதாசன், ஏஎல்எஸ்., சுந்தர்லால், டிஎஸ் துரைராசு, சுப்பையா செட்டியார், பட்சி ராஜா அதிபர் முதலியவர்களிடம் இவருக்குத் தொடர்பு உண்டு. பெருமாள் முதலியார் நிலம் 9 ஏக்கரை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. அதையும் அவர் மனப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். பூட்டுதாக்கு கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க இடம் கொடுத்தார். அவரை அய்யா என்றுதான் பூட்டுதாக்கு கிராமத்தில் அழைப்பார்கள். அன்னதானம் நிறைய செய்வார். சிவாஜி குடும்பத்துடன் பெருமாள் முதலியார் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் சைவம்தான். கதர் ஆடைதான் அணிவார். ஏழை பள்ளி மாணவர்களுக்கு நிறைய உதவி செய்வார். அவரால் படித்த மாணவர்கள் இன்று அரசு வேலையில் உள்ளார்கள். 
நேஷனல் தியேட்டர் வேலூர் பெருமாள் முதலியாருக்குச் சொந்தமானது. வரி ஏய்ப்பு செய்யாமல் தொழில் நடத்த வேண்டும் என்று பெருமாள் முதலியார் கண்டிப்பாக இருப்பார். 60 சதவீதம் விநியோகஸ்தர்க்கு கொடுத்து விடுவார். 40 சதவீதம் தான் தியேட்டருக்கு வந்து சேரும். எதிலும் நேர்மையாக இருப்பார். தொழிலாளர் விஷயத்திலும் தாராளமாகத்தான் நடந்து கொள்வார். அவர் தியேட்டரில் தொழிலாளர்கள் நின்றது கிடையாது. 10 வருஷம், 20 வருஷம் வேலை செய்த தொழிலாளர்கள் இருந்தார்கள்.
சென்னை மயிலாப்பூர் கிளப் சென்று வருவார். மாலை 6 மணிக்குச் சென்று 9 மணிக்கு வந்து விடுவார். மயிலாப்பூர் 
ஜில்லானி டாக்டர் ரொம்ப நண்பர். அவரிடம் சென்று உடல் நலம் பார்த்துக் கொள்வார். குடும்ப டாக்டர். 

நன்றி. வணக்கம்.
இங்ஙனம்,

டி.ரங்கநாதன்
மைத்துனர் பி.ஏ. பெருமாள் 
நேஷனல் பிக்சர்ஸ், வேலூர்.

தனது பால்ய பருவத்திலேயே பெரியாரின் அணுக்கத் தொண்டரான பி.ஏ.பி, "கடவுள் இல்லை' என்ற பெரியாரின் சித்தாந்தத்தின் அடியொற்றி நடைபயின்றவர். தனது இல்லத்திலும் காலண்டரில் கூட சாமி படங்கள் இருந்தால் மாட்ட மாட்டார். பேச்சிலும், செயலிலும் அதனைக் கடைப்பிடித்தார். தூய கதராடை பக்தரான இவர், வாழ்நாள் முழுவதும் கதராடையையே அணிந்தவர். பெருஞ்செல்வந்தராய் மிளிர்ந்தபோதிலும் தனது ஆரம்பக்கால நெசவுத் துறையில், "கைலி' வியாபாரத்தில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் அன்பு பாராட்டி பல உதவிகள் புரிந்தார்.
நெசவுத் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் பால்ய பருவத்திலேயே கலையின் மீது நாட்டம் கொண்டு தன்னை முழுநேரக் கலைஞனாகவே ஆக்கிக் கொண்டவர்.
"நாம் இருவர்' விநியோகஸ்தர் உரிமையைப் பெற்று தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டு அக்கால சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இவரது இந்த முயற்சி ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு வியப்பைத் தந்தது. 
தொடர்ந்து வெளிவந்த, "வேதாள உலகம்', தொடங்கி 200-க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோக உரிமைகளைப் பெற்று வெளியிட்டதோடு அத்திரைப்படங்களின் இயக்குநர்களோடும், தயாரிப்பாளர்களோடும், கலைஞர்களோடும் நட்பு பாராட்டினார்.
பெரியாருடன் கொண்ட தோழமையால் அக்காலத்து திரைப்படத்தில் கோலோச்சிய என்.எஸ்.கிருஷ்ணன், அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு ஆகியோர்களுடன் நட்பு கொண்டதுடன் திரை உலகின் அனைத்து தொழில் நுட்பங்களையும் கற்று அறிந்திருந்தாலும் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் மட்டுமே அடையாளம் காட்டிக் கொண்டார்.
"ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்குமே' என்ற குறளுக்கொப்ப பெரியோர்களுடைய நட்பு ஒரு நாள் பழகினாலும் பெரிய மரமான (ஆலமரம்) பெரும் நிலத்தைப் பாறையும் பிளவும் படும் படியாக மிக ஆழமாகச் செல்வதும் என்பதுபோல் இவரது நட்பு அனைவரிடத்திலும் வேர்ஊன்றியது.
இவரது முதல் தயாரிப்பான, "பராசக்தி' தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சினிமா ரசிகர்களால் ஆகர்ஷிக்கப்பட்டு சுதந்திரத்துக்குப் பின் 50 ஆண்டு கால திராவிட சித்தாந்தங்கள் தமிழ்நாட்டில் வேரூன்ற காரணமாயின. அத்திரைப்படத்தில் என் தந்தை பீம்சிங் எடிட்டராகவும், கிருஷ்ணன் பஞ்சு இயக்குநராகவும், கலைஞர் மு. கருணாநிதி வசன கர்த்தாராகவும், பாரதிதாசன் பாடலாசிரியராகவும் திரையுலகில் அடியெடுத்து வைக்கவும், புகழ் பெறவும் காரணமானார்.
முழுக்க, முழுக்க திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இத்திரைப்படத்தில் எதிரொலித்தன. இதன் மூலம் தி.மு.க. மக்களிடத்தில் பெரும் செல்வாக்கினைப் பெறத் துவங்கியது. இதன் வெற்றியின் அடையாளமாய் தந்தை பெரியாருக்கு பிரசார வேன் ஒன்றும் வாங்கித் தந்தார்.
மேலும் இவரது குணாதிசயங்களில், ஒன்று ஆங்கிலேயர்கள் சொல்லாடலான "ஸார்' என்ற வார்த்தையை ஓர் அடிமைத்தனத்தின் வெளிப்பாட்டுச் சொல்லாகவே கருதினார். அதனால் யாரையும் "ஸார்' என்று அவர் அழைத்ததில்லை. "ஐயா' என்னும் உரிமையுடன், "வாடா' என்றே செல்லமாக அழைப்பார். அவர்கள் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா முதல் தனது ஊழியர்கள் அனைவரையும் திரை உலகத்தினரையும் அவ்வாறே அழைப்பார்.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com