புதிய முயற்சி... ஆன்லைனில் கீரை!

உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடக்கும் வணிகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடை கடையாக ஏறி இறங்கி, கூட்டத்தில் இடிபட்டு பொருட்களை வாங்க இப்போது பலருக்கும் நேரமிருப்பதில்லை.
புதிய முயற்சி... ஆன்லைனில் கீரை!

உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடக்கும் வணிகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடை கடையாக ஏறி இறங்கி, கூட்டத்தில் இடிபட்டு பொருட்களை வாங்க இப்போது பலருக்கும் நேரமிருப்பதில்லை. புத்தகங்கள் முதல் சுவையான உணவு வகைகள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், அவை வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். இப்போது கீரையையும் கூட ஆன்லைனில் வாங்க முடியும். அதுவும் ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் இல்லாமல், இயற்கை வேளாண்மை முறையில் உருவாக்கப்பட்ட கீரைகளை. 
சென்னையில் "நல்ல கீரை' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இந்த புதிய முயற்சியைச் செய்து எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஜெகந்நாதன். 
அவரிடம் பேசியதிலிருந்து...
""எனது சொந்த ஊர் சென்னை திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த "நல்ல கீரை' நிறுவனத்தைத் தொடங்கினேன். அதற்கு முன்பு பெரிய நிறுவனங்களில் மனிதவளப் பிரிவில் மேனேஜராக வேலை செய்தேன். 
விவசாயப் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்ததால், என்னை விவசாயம் ஈர்த்துக் கொண்டே இருந்தது.
பாக்கம் கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருந்தனர். இருந்தும் தொடர்ந்து வறுமையில் வாடிக் கொண்டிருந்தனர். அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள எங்கள் கிராமத்தில் உள்ள 210 வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தோம். அவர்களுடைய துன்பத்துக்கு ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி அவர்கள் விவசாயம் செய்வது ஒரு காரணம் என்று தெரிந்தது. அதிக விலையுள்ள உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் ஏற்படும் அதிகச் செலவு, இந்த விவசாயம் செய்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பு, அதனால் ஏற்படும் மருத்துவச் செலவு என துன்பப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்க ஒரே வழி, அவர்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்புவதுதான் என நினைத்தேன். அதற்கு முன்மாதிரியாக அமைக்கப்பட்டதுதான் "நல்ல கீரை' நிறுவனம். 
ஆனால் அதில் ஒரு பிரச்னை இருந்தது. நீண்டநாட்களாக ரசாயன உரங்களைப் போட்டு விவசாயம் செய்யப்பட்ட நிலங்களை உடனடியாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற முடியவில்லை. அதற்கு ஓரிரு ஆண்டுகள் தேவைப்படும் சூழ்நிலையில் அதுவரை விவசாயிகள் என்ன செய்வார்கள்? செலவுக்குப் பணம் வேண்டுமே... இயற்கை விவசாயமும் வேண்டும்... அதேசமயம் உடனடியாக வருமானமும் வர வேண்டும். 
அதற்கு என்ன செய்வது? பூக்கள், கீரைகளை விவசாயம் செய்தால் உடனடியாக வருமானம் கிட்டும் என்பது தெரிந்தது. மேலும் இந்த விவசாயத்துக்கு அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. சென்னையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, நாங்கள் கீரைத் தோட்டங்களை அமைக்கத் தொடங்கினோம். எந்தவிதமான ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லி மருந்துகளையோ பயன்படுத்தாமல் கீரைகளை உற்பத்தி செய்தோம். பலவிதமான கீரைகளின் நடுவே அகத்திக் கீரை, புளிச்ச கீரை ஆகியவற்றைப் பயிரிட்டால் பூச்சிகள் அண்டாது. மழை அதிகம் பெய்யும் காலங்களில் வல்லாரை, புதினா, முருங்கை, அகத்தி ஆகிய கீரைகளைப் பயிர் செய்யலாம். 
அவற்றை எப்படி விற்பனை செய்வது? "நல்ல சந்தை' என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். 
சாதாரணமாக 10 வகையான கீரைகளே மார்க்கெட்டுக்கு வருகின்றன. ஆனால் 40 வகையான கீரைகளை சந்தைக்குக் கொண்டு வந்தோம். முதலில் நேரடியாக நாங்களே விற்பனை செய்தோம். இப்போது ஆண்டுக்கு ரூ.4,500 பணம் செலுத்தினால், வாரம் ஒன்றுக்கு 5 கட்டு கீரைகள் வீதம் 44 வாரங்களுக்குத் தருகிறோம். இந்த வாரம் தரும் கீரை வகைகளை அடுத்த வாரம் தரமாட்டோம். இதனால் உடலுக்குத் தேவையான எல்லாவிதமான சத்துகளும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. சென்னையில் மட்டும் 3500 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 50 வாடிக்கையாளர்கள் இருந்தால்தான் எங்களால் கீரைகளைத் தர முடியும்.
இப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்குக் கூட இயற்கை வேளாண்மை முறையில் ஆர்வம் வந்துவிட்டது. எனவே அவர்களுக்குப் பயன்படும்வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறுகளில் இயற்கை வேளாண்மைப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com