மூலிகை மருந்தியலில் சாதனை படைத்தவர்!

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகளில் மூலிகைகளின் பயன்பாடு உலக அளவில் பிரபலமானது. இவற்றில் நோய்க்கான சிகிச்சை மட்டுமல்லாது
மூலிகை மருந்தியலில் சாதனை படைத்தவர்!

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகளில் மூலிகைகளின் பயன்பாடு உலக அளவில் பிரபலமானது. இவற்றில் நோய்க்கான சிகிச்சை மட்டுமல்லாது, நோய் வராமல் தடுப்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் அந்த மூலிகைகளின் பெரும் பயனை நாட்டு மக்கள் முழுமையாக இன்னமும் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், மூலிகைகளின் மருத்துவப் பயன்பாடு மருந்தியலில் எளிமையாக்கப்படாததே.
இதற்கு ஒரே தீர்வு, மூலிகைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனத்தை பகுப்பாய்வு செய்து அதன் குணங்களை உறுதிப்படுத்துவதும், அதனை எளிய மருந்தாக மாற்றுவதும் தான். அதற்கான அடிப்படை ஆய்வுகளை நடத்தி, புற்றுநோய், வலிப்பு நோய், மலேரியா உள்ளிட்ட தீரா நோய்களுக்கு அற்புதமான பல மருந்துகளைக் கண்டறிந்தவர் கரிம வேதியியல் விஞ்ஞானியான அஸீமா சட்டர்ஜி. 
இந்தியாவில் அறிவியலில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் (1944), இந்திய விஞ்ஞான காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் (1975) என்ற சிறப்புகளும் அவருக்குண்டு. 
சிறந்த கல்வியாளர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர், வேதியியலாளர், அரசியல்வாதி எனப் பலமுகங்களை உடைய அவரது நூற்றாண்டு, தற்போது கொண்டாடப்படுகிறது. 
பிரிக்கப்படாத இந்தியாவில், கொல்கத்தாவில் 1917, செப்டம்பர் 23}இல் பிறந்தார் அஸீமா சட்டர்ஜி. அவரது தந்தை டாக்டர் இந்திர நாராயண் முகர்ஜி இந்திய மூலிகைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டவர். தந்தையின் அடியொற்றி மகள் அஸீமாவும் அந்தத் துறையில் நுழைந்தார். 
இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார் அஸீமா. கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பயின்று வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற அவர் (1936), கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்து வேதியியலில் எம்.எஸ்சி. பட்டமும் (1938), டி.எஸ்சி. பட்டமும் (1944) பெற்றார். இந்திய மூலிகைத் தாவரங்களின் வேதியியல் தன்மை தொடர்பாக (Indol Alkaloids and coumarins of Indian medicinel plants) அவரது முனைவர் பட்ட ஆய்வு இருந்தது. 
இதனிடையே 1940}இல் கொல்கத்தாவிலுள்ள பிராபோர்ன் சீமாட்டி மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் அவர் பணிபுரிந்தார். அவரது தலைமையில் அக்கல்லூரியில் வேதியியல் துறை புதிதாக நிறுவப்பட்டது. 
1947}இல் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா சென்ற அஸீமா, விஸ்கான்சின் எல்.எம்.பார்க்ஸ் பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியாவில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலும் மருந்து வேதியியலில் (Medicinal
Chemistry) ஆய்வுகள் மேற்கொண்டார். 1949}50}களில், ஸ்விட்சர்லாந்து சென்ற அவர் ஜூரிச்சில் என்.எல். பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். 
1950}இல் நாடு திரும்பிய அஸீமா, இந்திய மூலிகைகளின் வேதியியல் தன்மை குறித்த ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். எந்த அரசு உதவியோ, பிற நிதியுதவியோ கிடைக்காத போதும், எந்த நவீனக் கருவிகளும் இல்லாத போதும், தனது ஆர்வத்தாலும், தன்னம்பிக்கையாலும் மூலிகை மருந்தியலில் (Phytochemistry) தனது ஆய்வுகளை அவர் தொடர்ந்தார். 
1954}இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அறிவியல் கல்லூரியில் அவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1962}இல் பல்கலைக்கழகத்தின் சிறப்புமிகு கைரா இருக்கை சிறப்புப் பேராசிரியராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அங்கேயே 1982}இல் ஓய்வு பெறும் வரை, கல்விப் பணியிலும் ஈடுபட்ட அவர், தனது மாணவர்களையும் ஆய்வுகளில் ஈடுபடுத்தினார். 
1972}இல் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்பு உதவித் திட்டத்தை அஸீமா வடிவமைத்தார். அதன்மூலமாக வேதியியல் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அரசு நிதியுதவி பெறும் வசதி கிடைத்தது. 1985}இல் இந்தத் திட்டம், இயற்கைப் பொருள்களில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மையமாக மாற்றப்பட்டது. 
அவரது முயற்சியால், கொல்கத்தா, சால்ட் லேக் பகுதியில், மூலிகைத் தாவரங்கள் குறித்த பிராந்திய ஆய்வகம் நிறுவப்பட்டது. அங்கு பல மருந்துகள் மூலிகைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. அங்குதான் மர்சீலியா மினட்டா என்ற நீர்த்தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆல்கலாய்டு மூலமாக வலிப்பு நோய்க்கு மருந்தை அவர் கண்டுபிடித்தார். அதேபோல, நித்ய கல்யாணி மூலிகையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வின்கா ஆல்கலாய்டு (vinca alkaloid) மூலமாக புற்றுநோய்க்கு கீமோதெரபியில் பயன்படுத்தப்படும் சிறந்த மருந்தை அவர் உருவாக்கினார்.
ஏழிலைப் பாலை (alstonia scholaris), சிரத்தை (swertia chirata), முட்கொன்றை (caesalpinia crista) ஆகிய மூலிகைகளிலிருந்து மலேரியா நோய்க்கான சிறந்த மருந்துகளை அஸீமா கண்டறிந்தார். பாலை மரத்திலிருந்து கிடைத்த கெüமாரின் என்ற ரசாயனப் பொருள் மூலமாக ஜீரண நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று அவர் உறுதிப்படுத்தினார். வலிப்பு நோய்க்கு அவர் 
கண்டுபிடித்த ஆயுஷ் }56, சிறந்த நிவாரணியாகும். 
மூலிகைகளிலிருந்து பகுத்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு (alkaloid), டெர்பனாய்டு (terpenoid), கெüமாரின் (coumarin) ஆகிய ரசாயனப் பொருள்கள் மூலமாக மேலும் பல மருந்துகளை அவர் உருவாக்கினார். பகுப்பாய்வு வேதியியலிலும், முப்பரிமாண மாற்றிய வேதியியலிலும் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். சர்ப்பகந்தா, லவங்கம் போன்ற மூலிகைகளின் வேதியியல் பண்புகளைப் பகுப்பாய்வு செய்து அவற்றின் மருந்தியல் பயன்பாட்டை உறுதிப்படுத்தினார். 
இந்திய மூலிகைத் தாவரங்கள் குறித்த விரிவான ஆய்வுகளை அவர் தொகுத்துள்ளார். 400}க்கும் மேற்பட்ட அவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 
பணி ஓய்வுக்குப் பிறகு, அறிவியலில் ஆற்றிய சேவைக்காக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அஸீமா நியமிக்கப்பட்டார் (1982} 1992). 1975}இல் இந்திய அரசின் பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 
நாகார்ஜுனா தங்கப் பதக்கம் (1940), பி.சி.ராய் கல்வி உதவித்தொகை (1942), மவுன்ட் பதக்கம் (1944), சிஎஸ்ஐஆரின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1961), யுஜிசி}யின் சி.வி.ராமன் விருது (1962), பி.சி.ராய் விருது (1974), ஆசுதோஷ் முகர்ஜி தங்கப் பதக்கம் (1989) உள்ளிட்ட பல விருதுகள் அஸீமாவை அலங்கரித்தன. கல்வியே பெண்களுக்குச் சிறந்த அணிகலன் என்பதை அஸீமா தனது உயர் வாழ்வால் நிலைநாட்டினார். 
அமெரிக்காவின் சிக்மா}11, இந்திய வேதியியலாளர் சங்கம், இந்திய அறிவியல் காங்கிரஸ் உள்ளிட்ட பல ஆய்வு அமைப்புகளில் அஸீமா அங்கம் வகித்தார். 
சர்வதேச அறிவியல் அகாதெமி (1960), இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (1960) ஆகியவற்றில் ஆய்வு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார். பல கல்வி நிறுவனங்கள் அவருக்கு கெüரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளன. 
இந்திய வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு தனது அர்ப்பணமயமான வாழ்க்கையால் புது மெருகூட்டிய அஸீமா சட்டர்ஜி, இந்தியப் பெண்கள் தடைகளை எதிர்த்து வெல்வதற்கான முன்னுதாரணமாகவும் விளங்குகிறார். 
பாரம்பரிய மூலிகை மருத்துவத்தையும் நவீன வேதியியலையும் இணைத்து அவர் கண்டறிந்த மருந்துகள், இந்திய மருந்தியலில் புதிய திசையை உருவாக்கியுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com