வெட்டிப்போட்டாலும்... பட்டுப்போகாது...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

அக்கால மன்னர்கள் வீட்டுவரி தானே போடுவார்கள், பாட்டு வரியும் தேடினார்களா?'' என்று கோமாளி கேட்க, ""எனக்குத் தெரியும் மீதி வரி'' என்று ஒரு குரல் வந்தது.
வெட்டிப்போட்டாலும்... பட்டுப்போகாது...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 42

அக்கால மன்னர்கள் வீட்டுவரி தானே போடுவார்கள், பாட்டு வரியும் தேடினார்களா?'' என்று கோமாளி கேட்க, ""எனக்குத் தெரியும் மீதி வரி'' என்று ஒரு குரல் வந்தது. அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் பார்க்க, அந்தத் தீவில் காலையில் காய வைத்துக் கொண்டிருந்த மீன் வலையைச் சுருட்டிக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் குரல்தான் அது எனத் தெரிந்து கொண்டோம். 
அவரும் மீன்வலையை சுருட்டியபடி எங்கள் அருகில் வந்து உட்கார்ந்தார். ""ஐயா நீங்கள் யார்?'' என்று நான் கேட்டேன். 
""நானும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவன் தான். காலையில் மீன்வலையைக் காய வைக்க வந்தபோது உங்களை எல்லாம் பார்த்தேன். நீங்கள் பேசுவதையும் கேட்டுக் கொண்டு இருந்தேன்; இந்தத் தீவில் நான் சில இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் வேலி கட்டிவிட்டு இப்போதுதான் வந்தேன். நீங்கள் பேசியதைக் கேட்டேன்'' என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட கோமாளி ""இந்தத் தீவிலும் மரமா? அந்த மரத்துக்கு வேலியா? என்னையா கேலியா?'' என்றான். 
அந்த மீனவரும் ""இல்லை அய்யா இதுதான் எனக்கு சோலி (ஜோலி)'' என்று சொல்லிவிட்டு, ""தம்பி கோமாளியாரே... நானும் ஒரு காலத்துல நாடகத்துல கோமாளி வேஷம் போட்டவன்தான். அதுதான் உங்கிட்ட ஜாலியா பேசினேன் தப்பா நினைக்க வேணாம்'' என்றார். அதற்கு நம் கோமாளியும் விடாமல், ""நான் தப்பாவும் நினைக்கல, தவிலாவும் நினைக்கல... அசோகச் சக்கரவர்த்தி மாதிரி மரம் வச்சோம் குளம் வெட்டுனோம்னு சொன்னீங்களே அந்த விவரத்தைச் சொல்லுங்க'' என்றான். 
உடனே அந்த மீனவரும் ""சிறுவயதில் இருந்தே எனக்கு மரம் நடுவதில் ஈடுபாடு உண்டு. பலாப்பழம், புளியம்பழம், மாம்பழம், சீதாப்பழம் இப்பழங்களையெல்லாம் சாப்பிட்ட
வுடன் அந்த விதையைக் கொண்டு தோட்டத்தில் ஊன்றி வைப்பேன். அதே பழக்கத்துல மீன்பிடிக்கப் போறப்ப எந்தத் தீவுக்குப் போனாலும் ரெண்டு மரம் நடுவேன். அங்க இருக்கிற மரஞ்செடி கொடிகளை மற்ற தீவுகளுக்குக் கொண்டுவந்து ஊன்றி வைப்பேன்'' என்று ஆர்வமாய்ச் சொன்னார் அவர்.
""இந்தச் செடி கொடிகளுக்கு ஏன் வேலி கட்டுறீங்க? கடல் பசுவும், கடல் குதிரையும் வந்து தின்றுவிடுமா?'' என்றான் கோமாளி.
அந்த மீனவரும் சற்றும் கோபப்படாமல் ""அதெல்லாம் கரையேறி வராது. இங்க அடிக்கிற காத்தும் அதுல வர்ற மண்ணும் நான் வைக்கிற இளஞ்செடியப் போட்டு அமுக்காம இருக்கப் பயன்படாத மீன் வலையிலேயே வேலியைக் கட்டுவேன்'' என்று சொன்னவர், ""சூரியன் உதிக்கட்டும் இந்தத் தீவைச் சுத்தி நான் வச்ச மரங்களையெல்லாம் காட்டுறேன்'' என்றார் பெருமிதமாக. 
அதுவரை அவர்கள் இருவர் பேச்சிலும் தலையிடாமல் காத்திருந்தோம் நாங்கள். பின்னர் நான் அவரை வணங்கி ""ஐயா உங்களுக்கு வாழ்த்துகள். எத்தனை அரிய செயலைச் செய்கிறீர்கள் தெரியுமா? நீங்கள் வைக்கிற ஒவ்வொரு மரத்தாலும் மண்ணுக்குப் பெருமை, வந்து தங்குகிற பறவைகளுக்கு வீடு, அதில் பழுக்கும் பழங்களை உண்ணவரும் விலங்குகளுக்கு உணவு, இளைப்பாற இடம், பூமிக்கு ஆக்ஸிஜன்'' என்று சொல்லி நான் அவரைப் பாராட்டினேன். எல்லோரும் அதற்கு கைதட்டினார்கள். 
""இதெல்லாம் சரிதாங்க, ஏதோ பாட்டுவரி தெரியும்னாறே அது என்னான்னு கேளுங்க?'' என்றார் மீசைக்காரர். 
""ஆமா ஆமா அதக் கேளுங்க, அப்பத்தானே இவரது டைரியில அத எழுத முடியும்'' என்றார் ஓர் இளைஞர். உடனே தமிழ்மணி அந்த மீனவரைப் பார்த்து ""ஐயா நாங்கள் பேசிக் கொண்டிருந்த செய்தியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
"மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே' என்று அந்த உழவர் பாடிய பாட்டின் அடுத்தவரி தெரியுமா?'' என்று கேட்டார். அதற்குள் ஹெட்போன் பாட்டி தன் "ஐபேடில்' அம்பிகாபதி படத்திலிருந்து மூன்று விதமான பாடல்வரிகளை எடுத்துக்காட்டி
இது மன்னன் சொன்னது:
""மூங்கில் இலைமேலே தூங்க வரும் வண்டே
தூங்க வரும் வண்டை ஏங்க வரும் பூவே
ஏங்க வரும் பூவே என்ன துயர் கொண்டாய் 
கொண்டதுயர் சொன்னால் துயர் தீர்க்கப் பார்ப்பேன்''
இது அவர் மகள் அமராவதி சொன்னது:
""மூங்கில் இலைமேலே மோதி வரும் காற்று
மோதி வரும் காற்றில் ஊறி வரும் பாட்டே
ஊறி வரும் பாட்டில் மூன்று வகை இன்பம் 
மூன்று வகை இன்பம் முத்தமிழே ஆகும்''
இது கம்பர் மகன் அம்பிகாபதி சொன்னது:
""மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே...
வாங்கும் கதிர் வாழ்க வண்டமிழ் வாழ்க
வண்டமிழைக் கொண்டு வையமெல்லாம் வாழ்க''
என்று போட்டுக் காண்பித்தார்.
இதைக் கேட்ட அந்த மீனவர் சிரித்துக்கொண்டே ""இதெல்லாம் அந்தப் படத்துக்காக எழுதின பாட்டு. ஆனால் நான் சிறுவனாய் இருக்கும் போது எங்க வாத்தியார் எனக்குச் சொன்னது எது தெரியுமா? அந்தக் கம்பர் மகன் அம்பிகாபதி சொன்ன வரிதான்.
""மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே''
இந்த வரியோடு தான் அந்தப் பாட்டு முடிந்திருக்கும். பின்னே வருகிற வரிகளெல்லாம் செயற்கையாகச் சேர்த்தது போல் இருக்கும்'' என்றார் அவர் மிகத் தெளிவாக. 
உடனே தமிழையாவும், ""அவர் சொல்வது உண்மைதான். இயற்கையாக இயற்றப்படுகிற பாடல்களோடு மற்ற வரிகளைப் இணைத்துப் பார்த்தால் அவ்வளவாகப் பொருந்தி வராது'' என்று ஆமோதித்தார். பிறகு ""ஈற்றடி கொடுத்துப் பாடுதல் என்று சொன்னேன் அல்லவா? அதைப் பற்றிச் சொல்லட்டுமா?'' என்று கேட்டார். 
""தாராளமாகச் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி இவர்கிட்ட கொஞ்சம் மரங்களப் பத்திக் கேட்போம்'' என்று அந்த மீனவரைக் காட்டிச் சொன்னார் கடல்சார் பொறியியல் 
பேராசிரியர். 
உடனே அந்த மீனவர் ""ஐயா நீங்க எல்லாம் பெரிய படிப்பு படிச்சவுங்க. எனக்கு மண்ணையும், மரத்தையும், செடிகொடிகளையும், கடல்காத்தையும், இங்க இருக்கிற மீன்களைப் பற்றிதான் தெரியும். வேற ஒண்ணும் தெரியாதே'' என்றார். 
உடனே தமிழ்மணி, ""ஐயா நீங்க மண்ணைப் பற்றி (Geology) மரஞ்செடிகொடி மற்றும் மீன்களைப் பத்தி (Biology) பறவைகளைப் பற்றி (Ornithology) காற்று, வானிலைப்பற்றி (Meteorology) இவ்வளவு படிப்பு படிச்சிருக்கீங்க, நாங்கதான் உங்க அளவுக்குப் படிக்கவில்லை'' என்றார்.
உடனே அந்த மீனவரும், ""சரி ஐயா சொல்றேன், கேளுங்க. எந்த மரத்தப் பத்தி சொல்லணும்?'' என்றார். 
""அதிசயமான மரம் ஏதாவது உண்டா?'' என்று மீசைக்காரர் கேட்டார்.
அந்த மீனவர் சற்று யோசித்து விட்டு, ""இந்தக் கடலுக்கு நடுவுல, ஒரு தீவுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு மரத்தைப் பார்த்தேன். அது எனக்கு அதிசய மரமா தெரிஞ்சது, அந்த மரத்தோட மேல மட்டுமில்லாம அடிப்பகுதியிலேயும் கிளைகள் இருந்தன. அந்த மரத்தின் பெயர் தெரியலை எனக்கு, அங்கிருந்த காட்டுவாசி ஒருத்தருகிட்ட ""இது என்ன மரம்?'' என்று கேட்டேன். அவரும் உடனே ""இதோ பாருங்க, இந்த மரத்திலிருந்து காய் நெத்தாக மாறி கீழே விழும் போது அது வெடித்து சிதறும். அப்ப அதுல இருக்கிற விதைகள் இந்த மரத்தால ஈர்க்கப்பட்டு இந்த மரத்திலேயே வந்து ஒட்டிக் கொள்ளும், அதிலேயே கிளைவிட்டு மரம் முளைக்கும். அதுதான் இந்த மரத்தைச் சுத்தி இத்தனை கிளைமாதிரி தெரியுது'' என்று விளக்கம் சொல்லிவிட்டு இந்த மரத்தோட பேரு ""அழிஞ்சி'' என்று அந்த மீனவர் சொல்லி முடித்தார். 
""என்னது கீழே விழுந்த விதை திருப்பி மரத்துல போயி ஒட்டுறதா? என்னால நம்ப முடியல, காத்தடிச்சுப் போயி ஒட்டியிருக்கும்'' என்றார் மீசைக்காரர்.
உடனே நானும் ""இவர் கூறுகின்ற "அழிஞ்சி' மரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மரத்திற்கு அப்படி ஒரு ஆகர்ஷண சக்தி உண்டாம்'' என்று சொன்ன நான், ""ஐயா வேறு அதிசய செடிகொடிகளைப் பத்தி சொல்லுங்களேன்''? என்று கேட்டேன். அவர் சற்று நேரம் மெüனமாய் இருந்து விட்டு, ""ஐயா மரத்தில் படர்ந்திருந்த கொடி ஒன்றைப் பார்த்தேன்'' என்று சொல்லத் தொடங்க, 
""எல்லாக் கட்சிக் கொடியும் மரத்துலதான கட்டுறாங்க. இதுல எந்தக் கட்சிக் கொடியப் பார்த்தீங்க?'' என்று கோமாளி கேட்டான். 
""கோமாளி மச்சான் நீங்கள் சொல்ற கட்சிக் கொடியெல்லாம் ஒரு நாள் கிழிஞ்சி போயிடும், அழிஞ்சி போயிடும், காய்ந்து போயிடும். ஆனால் நான் பார்த்த கொடி உயிர்க்கொடி. மண்ணுக்கும், மரத்திற்குமான தொப்புள் கொடி. அந்தக் கொடியை வேரோடுவெட்டி ஆறு மாதம் போட்டு வச்சிருந்தாலும் அந்தக் கொடி காயாதாம். ஆறுமாதம் கழிச்சுகூட அந்தக் கொடிய நட்டுவச்சா முளைக்குமாம், அது மட்டுமல்ல, அந்தக் கொடிய காயவச்சுக் ஹோமம் பண்றதுக்கு கொண்டு போவாங்களாம். அந்தக் கொடியோட பேரு'' என்று அவர் சற்று யோசிக்க,
""சீந்தல்கொடி தானே அது?'' என்று ஹெட்போன் பாட்டி கேட்டார். ""சரியாகச் சொன்னீர்கள்!'' என்றார் மீனவர். 
மீனவர் பார்த்த அதிசய கொடியின் பெயரை ஹெட்போன் பாட்டி சொல்லவும் நாங்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனோம். எங்கள் திகைப்பைப் பார்த்த ஹெட்போன் பாட்டி, "மிருத்திஞ்சய ஹோமம்' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?'' என்று எங்களை ஒரு கேள்வி கேட்டுவிட்டு, ""மனுசாளோட லைஃப்ப, ஆயுளைக் கூட்டுறதுக்காக நெருப்பு வளர்த்து ஹோமம் பண்ணுவாங்க. அந்தக் ஹோமத்துல பல்வேறு வகையான மூலிகைக் கட்டைகளைப் போடுவாங்க, அப்படிப் போடுறப்ப இந்தச் சீந்தல் கொடிய சின்னத் துண்டுகளாக்கி தேன்ல துவைச்சு ஹோம குண்டத்துலப் போட்டா அதுல வெளிப்படுற புகையினால நம்மோட ஆயுள் கூடும்கிறது நம்பிக்கை. வெட்டிப் போட்டாலும் ஆறு மாதமா பட்டுப் போகாத சீந்தல் கொடியப் பத்திதான் இவர் சொல்றாரு. ஹீ இஸ் ஆன் என்சைக்ளோபீடியா (ட்ங் ண்ள் ஹய் ங்ய்ஸ்ரீஹ்ஸ்ரீப்ர்ல்ஹங்க்ண்ஹ) என்று பாராட்டினார்.
""எனக்கு எந்த சைக்கிளும் ஓட்டத் தெரியாதுங்களே'' என்று மீனவர் வெட்கத்தோடு சொல்ல எல்லோரும் சிரித்தோம். 
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com