வேலை வழிகாட்டி!

அண்மையில் இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் மாணவ, மாணவியரிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் "இளங்கலை படிப்பை முடித்த பின்னர் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?'
வேலை வழிகாட்டி!

அண்மையில் இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் மாணவ, மாணவியரிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் "இளங்கலை படிப்பை முடித்த பின்னர் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என கேட்கப்பட்டதற்கு சுய தொழில், திருமணம், உயர்கல்வி என 20 சதத்தினரும், இதுவரை தீர்மானிக்கவில்லை என 80 சதத்தினரும் பதிலளித்துள்ளனர்.
""இத்தகைய நிலை அபாயகரமானது'' என்கிறார் கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி துறைத்தலைவர் முனைவர் விமலா. கூடலூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக வந்திருந்த அவர், நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""பொதுவாக வெளிநாடுகளில் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வேலை வழிகாட்டித் துறையும், அதற்கான வல்லுநர்களும் உள்ளனர். அவர்கள் அக்கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு அன்றைய சந்தை நிலவரப்படி எத்தகைய திறன் வேண்டும், அந்த திறன் வளர்ப்புக்குண்டான பயிற்சி முறை மற்றும் நிறுவனங்களின் காலி பணியிடங்கள் ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு முன்னரே மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மாணவர்களும் தங்களது படிப்பை முடித்தவுடன் அவர்களது திறனை பட்டியலிட்டு குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சென்று வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
ஆனால், இந்திய மாணவர்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வோ அல்லது வேலைவாய்ப்பு வழிகாட்டி துறையோ அல்லது அவர்கள் இருக்குமிடத்திலேயே வேலை வழிகாட்டி அலுவலரோ இருப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் தகுந்த மேற்படிப்பு, தகுந்த வேலையைத் தேர்ந்தெடுத்தல், திறன் வளர்த்தல் ஆகியவற்றை சிரமமாகவே உணர்கின்றனர். இதுபோன்ற சூழலை தெளிவுபடுத்த வேண்டிய கடமை கல்வி நிறுவனங்களுக்கே உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே நாட்டிலேயே கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே முதுகலையில் வேலை வழிகாட்டி மேற்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இளங்கலை படிப்பு முடித்த பின்னர் பெரும்பாலானோர் மென்பொருள் துறைகளிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களிலோ வேலைக்கு சேர்ந்து விடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அங்கு அவர்களது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்காகவே கல்வியோடு இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு அவர்களது திறமையை மேலும் மெருகூட்டும். படிப்பு என்பது பொதுவானதாக இருந்தாலும், எதைப் படித்தால் எந்த வேலை வாய்ப்பு கிடைக்குமென்ற லேபர் மார்க்கெட்டை தெரிந்து அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், அந்த வேலைக்கு திறன் மிக்க மாணவர்களை உருவாக்குவதே இப்படிப்பின் நோக்கமாகும்.
நாட்டில் ஒரு சில இடங்களில் வேலை வழிகாட்டிக்கென டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் இருந்தாலும், இந்தியாவிலேயே கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் பட்ட மேற்படிப்பில் தனித்துறையே இயங்கி வருகிறது. இந்த பட்ட மேற்படிப்பின் மூலம் குடும்ப நீதிமன்றங்கள் , மகளிர் காவல் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றில் சைக்காலஜி மற்றும் கேரியர் கவுன்சிலர்களாகவும் பணியாற்ற முடியும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இதற்கான பயிற்சி பெற்ற சுமார் 12,000 பேருக்கு டாடா, இன்போசிஸ், காக்னிùஸன்ட், விப்ரோ, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்டு போன்றவற்றில் திறன் சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. 
இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி ஆலோசகர், வேலை வழிகாட்டி அலுவலர், பயிற்சியாளர் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை சுயமாகவும் எடுத்து நடத்தலாம். இதை பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு தொடர்பான அத்தனை குழப்பங்களுக்கும் தெளிவுபடுத்தி தங்களது வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாக அமைய முடியும்'' என விமலா தெரிவித்தார்.
இவரது முயற்சியின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் சுமார் 18,000 மாணவ, மாணவியருக்கும் சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு வேலை வழிகாட்டி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது பெரும் சாதனை என்றே கூறலாம். எனவே, இளங்கலை படிப்பு முடித்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் மாணவ, மாணவியர் நாட்டிலேயே கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இயங்கும் இத்துறை குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொண்டு பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com