வாங்க இங்கிலீஷ் பேசலாம் 110

கணேஷ், புரொபஸர், மீனாட்சி ஆகியோர் கிரிக்கெட் வழி ஆங்கிலத்தில் பிரசித்தமான சொற்றொடர்களை அலசுகிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 110

கணேஷ், புரொபஸர், மீனாட்சி ஆகியோர் கிரிக்கெட் வழி ஆங்கிலத்தில் பிரசித்தமான சொற்றொடர்களை அலசுகிறார்கள். It is not cricket எனும் சொல் வழக்கை மீனாட்சி கணேஷுக்கு அறிமுகம் செய்கிறார்.

கணேஷ்: சாரோட சட்டைப் பையில் ஒரு லவ் லெட்டரை நீங்க கண்டெடுத்தா அதுக்கு கோபப்பட்டு துடைப்பக்கட்டையைத் தூக்குறது தானே நியாயம்? அதை எப்படி it is not cricket என்று சொல்லலாம்.
மீனாட்சி: அது கண்ணியமாக இருக்காது என்றேன். திருமணத்தில் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகிக்காம கண்ணியமா இருக்கணும். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. If something is not cricket it is not fair and gentlemanly. 
கணேஷ்:  சார் ஒருவேளை தப்பே பண்ணியிருந்தா?
மீனாட்சி: அதை  அவரோட முழியே காட்டிக் கொடுத்துடும். லெட்டர்லாம் தேவையில்லை.
புரொபஸர்: Would you guys stop this. ஒரு கற்பனைக் கதையை வைச்சு என்னை இப்பிடி vilify பண்றது is not cricket. 
கணேஷ்: Vilify என்றால்?
புரொபஸர்:  ஒருத்தரைப் பற்றி ஆதாரமில்லாத வசவுகளைக் கூறுவது. Vilificare எனும் பழங்கால லத்தீன் சொல்லில் இருந்து உருவான சொல். Vile தெரியுமில்லையா? மட்டமான, கேவலமான என்று அர்த்தம். Ficare என்றால் செய்வது என்று பொருள். ரெண்டும் சேர்த்து மட்டமாய் ஒருவரை உருவாக்குவது எனப் பொருள் வருகிறது. இதில் முக்கியமான ஒன்று உச்சரிப்பு. Vile என்பதில் இருந்து vilify வருகிறது. ஆனால் Vile என்பதை வைல் என்றும் vilify என்பதை வில்லிபை என்றும் உச்சரிக்கிறோம்.
கணேஷ்: சார்  இந்த  வில்லன் எனும் சொல்லும் கீழ்மை எனும் பொருள் படும் vile என்பதில் இருந்து வந்திருக்கும் இல்லையா?
புரொபஸர்: அது தான் இல்லை. Villain என்பது ரொம்ப பழைய வார்த்தை. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வில்லா கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?
கணேஷ்: ஆமா...   luxurious villa.
புரொபஸர்:  அது வேறு.  ஒரிஜினலாய் வில்லா என்பது பெரிய பண்ணை வீடு. இந்த வில்லாவில் பணிபுரியும் வேலையாட்கள் villanus என மத்திய காலத்து இத்தாலியில் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், முரடர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், ஆகையால் கீழானவர்கள் எனும் கருத்து அன்று நிலவியது. விளைவாக கேவலமானவர்கள் அனைவரையும் villanus என - "பண்ணையாட்கள்' என - அழைத்தார்கள். பின்னர் கதை நூல்களில் எதிர்நிலை பாத்திரத்தை வில்லன் என்று அழைத்தார்கள். அங்கிருந்து அச்சொல் சினிமாவுக்கு சென்றது.
கணேஷ்: சார்... பெண் வில்லனுக்கு என்ன பெயர் தெரியுமா?
புரொபஸர்: ம்ஹும்...
கணேஷ்:  வில்லி. இது தமிழர்களே கண்டுபிடித்தது.
மீனாட்சி:  வில்லத்தனம் பண்ணும் பெண்ணுக்கு வேறு ஒரு சொல் ஆங்கிலத்தில் இருக்கிறது:  villainess. தமிழில் பெண் பெயராக்க -இ என சேர்ப்போம். மனுஷன், மனுஷி, கள்வன், கள்ளி. மனையை - அதாவது வீட்டைக் கவனிப்பவள் - மனைவி.  ஆனால் ஆங்கிலத்தில் -ங்ள்ள் சேர்த்து பெண்ணாக்குவார்கள். Baron - baroness. Master - mistress. அப்படித் தான் villain என்பதில் -ess சேர்த்து villainess  உருவானது. தமிழர்கள் தமது மொழியின் விதிப்படி பெண் பாலை உருவாக்கினார்கள். அவ்வளவு தான்.
கணேஷ்:  சூப்பர். ஆனால் அந்த sticky wicket அது என் மண்டையை விட்டு போக மாட்டேன் என்கிறது. 
புரொபஸர்:  ஏன்... என்னாச்சு?
கணேஷ்: அதை ஏன் ஸ்டிக்கி விக்கெட் என்கிறார்கள்?
புரொபஸர்:  நீ  கிரிக்கெட்டில்  கண்டமேனிக்கு  பந்து எகிறுகிற சற்றே ஈரமான பிட்சை பார்த்ததில்லை?
கணேஷ்: பார்த்திருக்கிறேன். இங்கிலாந்தில்... முன்பெல்லாம் மேற்கிந்திய தீவுகளில் அப்படியான விக்கெட்டுகள் இருக்கும். ராகுல் திராவிட் அதில் அபாரமாய் ஆடுவார்.
புரொபஸர்:  ஆமாம் அவையெல்லாம் சரியாய் உலராத விக்கெட்டுகள். மைதா மாவு உலராத போது ஒட்டிக் கொண்டாற் போல் பசபசவென இருக்குமே அது போன்று. பந்து இப்படித் தான் வரும் என கணித்து ஆட முடியாத ரொம்ப சிரமமான ஆட்டச்சூழல் அது... அதைப் போன்று வாழ்வில் சில சூழ்நிலைகள் ஏற்படும். தாக்குப் பிடிக்கவே போராடணும். அதுவே sticky wicket. 
கணேஷ்:  சார் இது போல் கிரிக்கெட் சொல்வழக்குகள் நிறைய உண்டா?
புரொபஸர்: Of course. Stumped என்பது அடிக்கடி பயன்படுத்தப்படுவது. ஸ்பின் பந்தில் இறங்கி அடிக்க வரும் பேட்ஸ்மேன் பந்தை மிஸ் பண்ண கீப்பர் ஸ்டம்புகளை அனாயசமாய் உடைப்பார். பேட்ஸ்மேன் அசடு வழிந்தபடி, "என்னடா இப்படி முட்டாளாகிட்டோமேன்'னு போவார். இப்படி ஒருவர் வாழ்க்கையில் முட்டாளாக்கப்படும் போது he is stumped.
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com