இப்படியும் சில வேலை வாய்ப்புகள்!

தலையைப் பிய்த்துக் கொண்டு எப்போதும் மன அழுத்தத்துடன் பார்ப்பதுதான் வேலையா?  செய்யும் வேலையே மகிழ்ச்சி தருவதாகவும்,
இப்படியும் சில வேலை வாய்ப்புகள்!

தலையைப் பிய்த்துக் கொண்டு எப்போதும் மன அழுத்தத்துடன் பார்ப்பதுதான் வேலையா?  செய்யும் வேலையே மகிழ்ச்சி தருவதாகவும், எளிதாகவும், இனிமையாகவும் இருந்தால்? அப்படியும் சில வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:
தனியார் தீவு நிர்வாகிகள்  (Private Island Caretakers): தற்போதய நிலையில் பெருங்கோடீஸ்வரர்கள்   தீவுகளை விலைக்கு வாங்கும் போக்கு வளர்ந்து வருகிறது. மனிதச் சந்தடியில் இருந்து விலகி, செழுமையான, அமைதியான ஒரு தீவை வாங்கி, அங்கு வீடு, அலுவலகங்களைக் கட்டிக்கொண்டு ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் அங்கு தங்கி பொழுதுபோக்கும் பெரும் பணக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். இதுபோன்ற தீவுகளை நிர்வகிக்க திறமையான இளைஞர்கள்  அவர்களுக்குத் தேவைப்படுகின்றனர்.  

ஒருசிலர் தீவுகளை விலைக்கு வாங்கி, அவற்றில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஓய்வு விடுதிகளை உருவாக்கி அவற்றை வணிகரீதியில் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை நிர்வகிக்கவும் அவர்கள் திறமையான இளைஞர்களை தேடிவருகின்றனர்.  இங்கு பணியாற்ற வாய்ப்புக் கிடைப்போருக்கு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் 81 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. 

ஃபிளேவர் குரு (Ben & Jerry’s Flavor Guru): அமெரிக்க நிறுவனமான  பென் அன்ட் ஜெர்ரி  ஐஸ் க்ரீம் தயாரிப்பில்  பெயர்பெற்றது. இதில் Food Science  படித்த ஏராளமான இளைஞர்கள் ஃபிளேவர் குருவாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் முக்கிய பணி, ஐஸ் க்ரீம், கேண்டி (மிட்டாய்), அனைத்து வகையான சிரப்புகளிலும் (Syrup)  சரியான அளவில் இனிப்பு கலக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுதான். இவர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ. 27 லட்சம் முதல் ரூ. 1.36 கோடி வரை. 

தண்ணீர் சறுக்கு சோதனையாளர் பணி  (Water Slide Tester) : சிறுவயதிலிருந்தே தண்ணீரில் சறுக்கி விளையாடுவது என்றால்  நமக்கு மிகவும் பிடிக்கும். மணிக்கணக்கில் தண்ணீரிலிருந்து வெளியே வரமாட்டோம். 

தண்ணீரில் சறுக்கி விளையாடுவதே ஒரு  வேலையாக இருக்கிறது. வணிகரீதியிலான பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களில் பல புனைக்கால்வாய்களுடன் உள்ள தண்ணீர் சறுக்கு அமைப்பின் உயரம், வேகம், தண்ணீரின் அளவு, தண்ணீர் குளத்தை அடையும் கால்வாயின் அமைப்பு போன்றவற்றை அவ்வப்போது சறுக்கி விளையாடி சோதனை செய்வதும், அவற்றை வாடிக்கையாளர்கள் அல்லது பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து அவர்களை திருப்திபடுத்துவதும்தான் இந்த  வேலை. 

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இந்தப் பணிக்கான தேவை எழுந்துள்ளது. இதில் பணியாற்றுவோருக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 18  லட்சம் வரை வழங்கப்படுகிறது.

படுக்கை பணிகள் - (Luxury Bed Tester & Human Bed Warmer): வேலையில் இருக்கும் ஒருவர் சாவகாசமாக படுக்கையில் படுத்திருந்தால் யாராவது ஊதியம் கொடுப்பார்களா? ஆனால், கொடுப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர விடுதிகள், உல்லாச ஓய்வு விடுதிகளில் உள்ள உயர்தர படுக்கைகள், படுத்து ஓய்வெடுப்பதற்கும், சுகமாக தூங்குவதற்கும் ஏற்ற வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வேலைதான் அது -Luxury Bed Tester- இந்த வேலை செய்பவர் படுக்கையில் அமர்ந்து, சிறிது நேரம் படுத்திருந்து அதன் தரத்தைச் சோதனை செய்ய வேண்டும்.

குளிர் பிரதேசங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் அறைக்கு வந்து தங்குவதற்கு முன்னதாக Human Bed Warmer  வாடிக்கையாளர்களின் படுக்கையில் படுத்திருந்து அதை வெதுவெதுப்பான நிலைக்கு கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் அறைக்கு வந்தவுடன் இளம்சூட்டில் உள்ள படுக்கையில் படுத்து தூங்குவதற்கான வசதி செய்து கொடுப்பதே இதன் நோக்கம்.  இந்தப் பணிக்கான ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 14 லட்சம் வழங்கப்படுகிறது.

தொழில்முறை பயணி  (Professional Traveller) : வேலையில்லாமல் ஊரைச் சுற்றினால் எல்லாரும் திட்டுவார்கள்.  ஊரைச் சுற்றி வருவதே வேலையாக இருந்தால்? அந்த வேலைதான் அதுதான் தொழில்முறை பயணி   வேலை. 

கடந்த 2009-இல் TheBigTrip.com  என்ற இணையதள நிறுவனம் பயண வலைப்பதிவுக்காக பயண நிருபர்களை  (Travel Correspondent) தேர்ந்தெடுத்து அமெரிக்காவை சுற்றிப் பார்க்க அனுப்பிவைத்தது. முழு ஹெல்த் இன்சூரன்ஸ், அனைத்து பயண கட்டணங்களோடு ஆண்டு ஊதியமாக ரூ. 34 லட்சம் வழங்கியது அந்த நிறுவனம். பயண நிருபர்களைப் போல, மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என பல துறை சார்ந்தோருக்கும் இதுபோன்ற தொழில்முறை பயணி பணிகள் பல தளங்களில் உள்ளன.

"ஆச்சரியம்... ஆனால் உண்மை...'  என்பார்களே, அதுபோலத்தான் இந்த வேலைவாய்ப்புகள். இப்போதெல்லாம் வேலைவாய்ப்புகள் மரபுசார்ந்ததாக, கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஓரளவு கல்வி, ஓரளவு உலக அறிவு, மொழி அறிவு என அனைத்திலும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்து தைரியம், விடாமுயற்சியுடன் தேடினால்,  நினைத்த வேலை மட்டுமல்ல, நினைக்காத வேலைகூட, நினைத்துப் பார்த்திராத ஊதியத்தில் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. தேடல்தான் முக்கியம்.   
- இரா.மகாதேவன்       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com