கண்டதும் கேட்டதும் 12 - பி.லெனின்

ஜெயகாந்தன், தோழர் சி.ஏ.பாலன்,  நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் சாருஹாசன், எத்திராஜ் நாயுடு அண்டு சன்ஸ் தேவராஜ் (பாரதியாரின் பள்ளித் தோழர்) திருப்பூர் கிருஷ்ணன்,
கண்டதும் கேட்டதும் 12 - பி.லெனின்

ஜெயகாந்தன், தோழர் சி.ஏ.பாலன்,  நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் சாருஹாசன், எத்திராஜ் நாயுடு அண்டு சன்ஸ் தேவராஜ் (பாரதியாரின் பள்ளித் தோழர்) திருப்பூர் கிருஷ்ணன், ஆவடி தோழர்கள் ஜெ.கே. சகஸ்ருதியர்கள்  என அடிக்கடி வந்து கூடும் இடமாக மாறி தனிக் களை கட்டும். அந்நாள்களில் பாரதியார் கூட்டத்துக்கு தலைமையேற்று பாரதியார் பாடல்களை முழங்கிய காட்சி என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது.

"கடமை ஆவன தன்னைக் கட்டுதல்
பிறர் துன்பம் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய், வேறுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச் சடை முடியனாய்
பிற நாட்டில் இருப்போர் பெயர் பல கூறி
அல்லா, யெ ஹே வா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய், திருமகள் பாரதி
உமையெனுந் தேவியர் உகந்தவான் 
        பொருளாய்...'
என்றும்,
அச்சமில்லை, அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை, நாணுதல் இல்லை
பாவம் இல்லை, பதுங்குதல் இல்லை
எது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டம் சிதறினாலும் அஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்,
வானம் உண்டு மாரி உண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீவும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப்பாட்டும் காண நல்லுலகம்
.............
பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், 
பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் 
என் வினையால் இடும்பைத் தீர்ந்தே
இன்புற்றன் புடனிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா!
ஞான காசத்து நடுவில் நின்று நான்
"பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக,
 துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் 
சார்ந்த பல்லுயிர் எல்லாம் இன்புற்று
 வாழ்க  என்பேன்' 
என்ற  பாரதியாரின் வாழ்வியல் நம்பிக்கையை ஞான ஒளியை ஊட்டும் பாடலைப் பாடும்போது பாரதியாரே நேரில் வந்து முழங்குவது போல் ஒலிக்கும்.  இன்றும் அந்த வரிகள் கனன்று ஒலிக்கின்றன.

ஜெயகாந்தனால் நான் "இவர் சுத்தம் சைவம்' என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் விரும்பும் வஸ்துகளை பாரதியார் -  ஜெயகாந்தன் அவர்களுக்குப் படைத்துத் தருவதில் எனக்கு தனி மகிழ்ச்சி.

ஒருமுறை "தயிருடன் நண்டு சேர்த்து சுவைக்க நன்றாய் இருக்கும்' என்று ஜெ.கே.யிடம் சொன்னேன். உடனே ஜெ.கே., "நீர்தான் சுத்த சைவமாயிற்றே' உனக்கு எப்படித் தெரியும்''  என்றார்.  நான் சொன்னேன். "கடலில் வாழும் உயிரினங்களில் தன் உடம்பில் உப்பைச் சேர்த்துக் கொள்வதில் நண்டுக்கு தனி குணம் உண்டு. நண்டின் சதையோடு உப்பு சேர்ந்திருக்கும். தயிருடன் சேர்த்து சாப்பிட தயிரில் உப்பு சேர்க்க வேண்டியிருக்காது'' என்றேன்.

ஜெ.கே. "ஓய் லெனின் சிங்  நீர் தேர்ந்த சமையற்காரர் அப்பா'' என்றார்.

ஜெயகாந்தன் "நம்ப மாட்டேளே' என்ற குறுநாவலில் வரும் நாயகி அவரது  கதாபாத்திரத்தின் கூடு விட்டு கூடு பாயும் கலையில் நாயகி நானே என ஜெயகாந்தன் அக்கதை வெளியானபோது கூறினார்.

ஜெயகாந்தன் சபையில் அவரது உதவியாளராகப் பணியாற்றியவர் கே.ஆர்.லெனின்.  இரண்டு லெனின்களும் ஒருசேர இருக்கும்போது எப்படி அழைப்பது என்ற குழப்பத்தால் ஜெ.கே எனக்கு இட்ட பெயரே "லெனின் சிங்'. இதற்கு மேலும்  ஒரு காரணம் உண்டு.  அப்போது கே.ஆர்.லெனின் அவர் தூர்தர்ஷனில் "பரமார்த்த குரு கதை' என்ற தொடரை இயக்கினார். அதுகுறித்து கண்டனக் கணைகள்.  ஒருவர் காரசாரமாய் கடிதம் எழுதி எனது முகவரிக்கு வந்து சேர்ந்தது. இதை ஜெ.கே.யிடம் சொல்ல, "உமது பெயரை "லெனின் சிங்' என்று வைத்துக் கொள்ளலாமே'' என்று நமட்டுச் சிரிப்புடன் கூறியது அல்லாமல், பாரதியாரிடம் என்னைக் குறித்து விசாரிக்கும்போது  "என்ன? "லெனின் சிங்' வந்தாரா? வருவாரா?'' என்று விசாரிப்பாராம்.

ஜெ.கே.மடம் காலியான பின் அஸ்தினாபுரத்தில் அதற்குப் பின் பழந்தண்டலத்தில், சிறுகளத்தூரில், மூன்றாம் கட்டளையில் என பல இடங்களில் தனிமையில், நண்பர்களுடன் வாழ்ந்த காலங்களில் பாரதியாரின் இன்ப துன்பங்களில், எனது திரைப்பட குறும்படப் பணிகளிலும் எந்தவொரு வகையிலும் அவரை இணைத்துப் பணியாற்றியதும் அவரோடு கலந்துரையாடுவதிலும், அன்புறவு பேணுவதிலும், தக்க உதவிகள் புரிவதிலும் நான் பேருவகை கொள்வேன்.

ஒருமுறை சிறுகளத்தூரில் அவரது பேர்பெற்ற சிறுகதையான "ஆமையின் கோபம்' படமாகியபோது (அது வெளிவரவில்லை அது வேறு கதை) அவர் வாழ்ந்த அந்த இல்லத்தில் அறைக்குள்ளும் வெளியேயும் படமாக்கினோம். அப்போது பாரதியார் ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். "கருணை உள்ளம்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஓர் அறையில் நடக்கிற சம்பவத்தைப் படம் எடுத்தபின் வேறு ஒரு காட்சி எடுக்கப்பட வேண்டும். எனது தந்தை பீம்சிங் சொன்னாராம் "அந்த அறையின் நடுவில் ஒரு பிளைவுட் வையுங்கள். அது வேறு ஒரு காட்சிக்கு உபயோகப்படுத்தலாம். ஜீவாத்மா - பரமாத்மா விவகாரம்'தான் என்றாராம். அதுபோல் இருக்கிறது நீங்கள் இப்போது எடுக்கும் காட்சியும்'' என்று நினைவுகூர்ந்தார்.

எளிய மனிதராய் வாழ்ந்த அவருக்கு கதராடை அணிவதிலேயே பெருமகிழ்ச்சி. எனது பிறந்த நாளான சுதந்திரத் திருநாளில் நான் அவருக்கு கதர் வேட்டி, கதர் சட்டை, கதர் துண்டு வாங்கி முன் தினம் தருவேன். மறுநாள் முதல் தொலைபேசி அவரது வாழ்த்தாக இருக்கும். அதோடு துணிகளை அணிந்துகொண்டு சுதந்திர தின கொடியேற்றி "எப்படி இருக்கிறது?'' என்று குழந்தைபோல் சிரித்துக் கேட்டு நண்பர்களிடம் எல்லாம் "லெனின் வாங்கித் தந்தது'' என்பார் பெருமையுடன்.

அவரை நான் பெரும்பாலும் மேல் சட்டை இல்லாமலே ஜெ.கே., சபையானாலும்,  தனி அறையில் வாழ்ந்த போதும் காட்சி அளிப்பார். இறுதியாக அவரைச் சந்தித்தபோது "கீழே அரை முழத் துண்டுடன்தான் தரிசித்தேன். அந்தக் காட்சி மகாத்மா காந்தியை கண்டதுபோல் இருக்கிறது. அத்தகைய எளிய மனிதர் பிறருக்குச் சமைத்துத் தந்து உண்டு மகிழப் பார்த்துக் களிப்புறுவார். எந்நேரம் பார்க்கச் சென்றாலும் தானே "டீ' தயாரித்துப் பரிமாறுவதில் பெரு மகிழ்ச்சி கொள்வார்.

தேவபாரதி என்கிற பாரதியார் எனக்கு நல்வாசகனாய், தந்தையாய், உற்ற நண்பனாய், தோழனாய், நட்புறவும் அன்புறவும் கொண்டு நடை பயின்றவர்.

எனது நண்பர்கள், திரை உலகின் கலைஞர்கள் பிரிவின்போது பாரதியாரிடம் தொடர்புகொண்டு திருமூலரின் பிரிவாற்றாமை பாடல்களைச் சொல்லக் கேட்பேன். அவருக்கே உரிய தனித்த கணீரென்ற குரலில்
"அடப்பண்ணி வைத்தர் அரசிலை  உண்டார்
 மடக்கொடி யாரோடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மே இறை நொந்தது என்றார்.
இடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!''
என்றும் - 
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினான நீக்கிப் பிணமென்று பேரிட்டுப்
சூரையாங் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே!
என்று பாடுவார். அன்னாரது இறுதி நாளில் அவரோடு இருக்கத் தயங்கி அவரோடு இருந்த நாள்களை நிறைகளிலேயே மூழ்கிக் களித்தேன். அவரது நினைவை, பணியை நீரில் மூழ்கி ஒழிக்கவா முடியும்?

அடையார் கேட் ஓட்டலில் இருக்கும் ஒரு நண்பரைச் சந்தித்துவிட்டு போகலாம் என்று பஸ்ஸில் சென்று கொண்டிருந்த நான் அங்கு இறங்கி அவரோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்து புறப்படும் சமயம் டி.டி.கே. சாலை பாதி இருட்டும் பாதி வெளிச்சமுமாக இருந்தது. 

இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நான் வாக்கிங் என்று தனியாக ஒரு புரோகிராம் வைத்துக் கொள்வதில்லை. எங்கே போனாலும் போகும்போது பஸ்ஸில் போவேன். திரும்பி வரும்போது தூரம் குறைவாக இருந்தால் நடந்தே வீட்டுக்குப் போய்விடுவேன். நான் பஸ்ஸில் போவதைப் பார்த்து, "லெனின் சார் ரொம்ப எளிமை'' என்று சொல்வார்களே தவிர, "ஏன் சார் நீங்க இன்னும் கார் வாங்கலேன்னு'' யாரும் கேட்டது இல்லே. அப்படி யாராவது கேட்டா என்கிட்ட வாங்கி கட்டிக்குவாங்க. அவங்க அவங்க தன் வேலையைப் பார்க்கனும்ங்கிறது தான் என் எண்ணம்.

ஒரு வாத்தியார் பள்ளிக்கூடத்துல கணக்குப் பாடம் நடத்திட்டு இருந்தாரு. எப்படித் தெரியுமா? 2 + 2 = 4, 5 + 5 = 10, 6 + 6 = 12. இவையெல்லாம் எழுதிவிட்டு 124 + 166 எவ்வளவு சொல்லுங்கப் பாக்கலாம்ன்னு குழந்தைகளைப் பார்த்து கேள்வி கேட்டாரு. அப்போ ஒரு குழந்தை எந்திரிச்சி "நீங்க பெரிய ஆளு சார், சின்ன சின்ன கணக்குக்கு எல்லாம் நீங்களே ஆன்சரை சொல்லிட்டு பெரிய கணக்குக்கு மட்டும் ஆன்சரை எங்ககிட்ட கேக்குறீங்களே'' அப்படின்னு சொன்னதும் எல்லா குழந்தைகளும் கை தட்டி சிரிச்சிருக்காங்க. இதை நான் சிரிப்புக்காக சொல்லலே. கவர்மெண்ட் சம்பளம் வாங்கிற ஒரு வாத்தியார் தன் வேலையைச் சரியா செய்யலேங்கிறதுதான் என்னுடைய கம்ப்ளைண்ட். (என்னுடைய புகார்).

1960-இல்  தி.ஜானகிராமன் பாரதி கலைஞர்ன்னு பட்டம் வாங்கின எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களுடைய சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவுக்காக வடிவேல் வாத்தியார்ன்னு ஒரு நாடகத்தை எழுதியிருந்தாரு. வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள ஒரு பரஸ்பரம்தான் அந்த நாடகம்.

எத்தனை ஆண்டுகள் கழித்துப் போட்டாலும் அந்த நாடகம் புதுசுதான். காரணம் அது தி.ஜானகிராமனுடைய அப்ரோச். மாணவர்களும், வாத்தியார்களும் எப்படி பழகணும், அவர்களுடைய உறவு முறை எப்படி இருக்கணும் அப்படிங்கறதை அருமையா நாடகமாக்கம் பண்ணி இருந்தாரு. 

டைரக்டர் பீம்சிங் பண்ணின பல படங்கள்ல சகஸ்ரநாமம் ஆக்ட் பண்ணி இருக்கார். அதனால நானும் வடிவேல் வாத்தியார் நாடகத்தைப் பார்த்து இருக்கேன். அதனாலதான் அதைப்பத்தி எழுத முடிந்தது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com